MENUMENU

தீராத விளையாட்டுப் பிள்ளை – திரை விமர்சனம்

நடிப்பு: விஷால், சந்தானம், மயில்சாமி, நீத்து சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென், பிரகாஷ்ராஜ், மவுலி

ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா

இசை: யுவன் சங்கர் ராஜா

இயக்கம்: திரு

தயாரிப்பு: ஜிகே பிலிம் கார்ப்பரேஷன்

வங்கியில் பணியாற்றும் மவுலியின் மகன் விஷால் வாழ்க்கையில் தனக்கு எல்லாமே பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

மனைவியாக வருபவளும் மிகச்சிறந்த ஒருத்தியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தனது விருப்பம் நிறைவேற மூன்று அழகிகளை குறிவைத்துக் காதலிக்கிறார்.

பணக்கார பெண்ணான நீது சந்திரா, ஆண்களென்றாலே ஆகாத தனுஸ்ரீ தத்தா, உண்மையான காதல் கொண்ட ஆணைத் தேடும் சாரா ஜென் ஆகிய மூவரும்தான் அந்த அழகிகள். மூவரிடமும் மூன்று விதமான பொய்முகம் காட்டி வளைக்கிறார்.

மூவருமே காதலில் விழுந்து உருக ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் நீத்து சந்திராவுக்கு விஷாலின் நோக்கம் தெரிந்துவிடுகிறது. இதில் கோபம் கொள்ளும் நீத்து வன்மத்துடன் மற்ற பெண்களையும் விஷாலுக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில் இறங்க, விஷால் விழிக்க, இறுதியில் அவர் யாரைக் கரம்பிடித்தார் என்பது க்ளைமாக்ஸ்.

விளையாட்டுப் பிள்ளையாக வரும் விஷால் நன்றாகவே செய்திருக்கிறார், விளையாட்டுக் குறும்புகளை. வக்கிரமாக எதையும் செய்யாமல், மூன்று பெண்களையும் விதவிதமாக அவர் காதலிப்பது கலகலப்புக்கு உத்தரவாதம்.

ஆனால் சில காட்சிகளில் இன்னும் அவர் விஜய்யை இமிடேட் செய்வது சகிக்கலை.

தனுஸ்ரீ தத்தாவின் அண்ணன் பிரகாஷ் ராஜிடம் மாட்டிக் கொண்டு அவர் விழிக்கும் இரண்டு காட்சிகள் அக்மார்க் திருதிரு ரகம்.

மூன்று நாயகிகள் இந்தப் படத்தில். அதிகமாக உடை தேவைப்படுவது தனுஸ்ரீ தத்தாவுக்குதான். நீத்து சந்திரா கவர்ச்சிக் குதிரை மாதிரி ஓடிக் கொண்டே இருக்கிறார் பாடல் காட்சிகளிலும்.

எப்போதும் தூங்கி வழிவது போன்ற தோற்றத்தில் சாரா ஜென். பீர் தொட்டியில் ஊறி எழுந்தவர் மாதிரி பம்மென்று தெரியும் தனுஸ்ரீ தத்தாவிடம் அழகு, நடிப்பு இரண்டுமே வறட்சி.

படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானமும் மயில்சாமியும். அவர்கள் வாயைத் திறந்தாலே, ரசிகர்கள் கைதட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பெஸ்டான காதலியை தேர்ந்தெடுக்க விஷால் கண்டுபிடிக்கும் ரூட் எப்படி தப்பானதோ, அதேபோல காதலிகளைக் கழட்டிவிட அவர் சொல்லும் காரணங்களும் ‘தப்பு தப்பு’.

சீட்டுக் குலுக்கிப் போட்டு காதலியை தேர்வு செய்யும் இந்த சீப் டெக்னிக் சரியா? என்ற கேள்விகளுக்கு வழக்கம்போல கதாநாயகன் க்ளைமாக்ஸில் மனம் திருந்தி பதில் சொல்கிறார்.

பிரகாஷ் ராஜூக்கு சின்ன ரோல்தான். ஆனால் சிறப்பாக செய்திருக்கிறார். மவுலி வழக்கம்போல கலகல. அவர் மனைவியாக வரும் பெண்மணியும் ஓகே. சாரா ஜென் பால் காய்க்க வரும் காட்சியில் அவர் நடிப்பு அசல் மிடில்கிளாஸ் அம்மா!

படம் முழுக்க நெற்றிக்கண் படத்தின் பின்னணி இசையை ஓடவிட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அது படத்துக்கு சரியாகப் பொருந்தினாலும், சொந்த சரக்கையும் கொஞ்சம் அப்பப்போ எடுத்து விடுங்க. இல்லன்னா மேல்மாடி காலின்னு கமெண்ட் வரும். ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பாடல் இனிமை.

இது சீரியஸாக எடுக்க வேண்டிய படமில்லை என்று இயக்குநருக்கு ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது போல. அதனால் ரசிகர்களும் ‘ஜஸ்ட் டைம் பாஸ்’ என்று சொல்லிக் கொண்டே வெளியேறுவதைக் கவனிக்க முடிந்தது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ரசிகர்கள் கருத்தே நமது தீர்ப்பும்!

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online