MENUMENU

நான் சாமியார் மாதிரி! – கமல்

நான், ஒரு சாமியார் மாதிரி. எனக்கு, கடவுள் நம்பிக்கை கிடையாது என்றார் கமல்ஹாஸன்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த ஆதவன் படத்தின் 100வது நாள் விழா நேற்று இரவு நடந்தது.

விழாவில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்கினார்.

விழாவில் சூரியா பேசும்போது, “ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் மனதில் வைத்துக்கொள்கிற மாதிரி ஒரு மந்திரத்தை அண்ணன் கமல்ஹாசன் எனக்கு சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய கமல் இவ்வாறு கூறினார்:

“சூரியா பேசும்போது, என்னிடம் மந்திரம் கேட்டார். அதுவும் என்னிடம் போய் மந்திரம் கேட்கிறார். நான் ஒரு சில சாமியார் மாதிரி. கடவுள் நம்பிக்கை கிடையவே கிடையாது. சூரியாவின் அப்பா (நடிகர் சிவகுமார்) என்னிடம் மந்திரம் சொல்லியிருக்கிறார். இவர் மந்திரம் கேட்கிறார்.

சினிமாவை இன்னும் நான் வியப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்த வியப்பு, திகில், பதற்றம், சந்தோஷம் எல்லாம் நிறைந்ததுதான் சினிமா.

என் படம் வெளியாகிற அன்று முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போது, நான் படம் பார்ப்பவர்களின் முகத்தைத்தான் பார்ப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம், உற்சாகம்தான் நிஜம்.

சினிமாவில் எழுத்தாளராக வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஒருமுறை மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவுக்கு நான் போனபோது, அங்கிருந்த லைப்ரரியில் கலைஞர் எழுதிய ஸ்கிரிப்ட்டைப் பார்த்தேன். அதில், அத்தனை நுணுக்கமான விஷயங்கள் இருந்தன.

அதை படித்த பிறகு, எழுத வேண்டும் என்ற ஆசையை ஆறு வருடங்களுக்கு தள்ளிப்போட்டேன். சினிமாவில், நடிகர்கள் மறக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஒரு விஷயத்தில் மட்டும் பயங்கர திமிராக இருக்க வேண்டும். உங்களின் முந்திய வெற்றியை நீங்கள் மதிக்கக் கூடாது.

கிரிக்கெட்டில் தோற்றால்….

எனக்கு, கமல் மீது மரியாதை கிடையாது. பதற்றம் உண்டு. என் முந்திய வெற்றியை சவாலாக எடுத்துக்கொள்வேன். தோல்வி பற்றி பயப்படக்கூடாது. கிரிக்கெட்டில் தோற்றால், அடித்துக்கொள்கிறார்களா என்ன? அடுத்த மேட்சுக்கு தயாராகி விடுகிறார்கள் அல்லவா? அதுமாதிரி இருக்க வேண்டும்.

நடிகர் திலகம் தொடர்ந்து 13 தோல்விப் படங்களை கொடுத்தார். வேறு யாராக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள். அடுத்து வந்த 14-வது படம் 200 நாட்கள் ஓடியது. அது அவரால் மட்டும்தான் முடியும்…”, என்றார்.

விழாவில், நடிகர்கள் சூர்யா, வடிவேல், ரமேஷ்கண்ணா, மனோபாலா, ஆனந்த்பாபு, பெப்சி விஜயன், அலெக்ஸ், நடிகைகள் சரோஜாதேவி, நயன்தாரா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், கவிஞர்கள் நா.முத்துக்குமார், தாமரை, நடன அமைப்பாளர் காயத்ரி ரகுராம், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோருக்கு கமல்ஹாசன் கேடயம் பரிசு வழங்கினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், கலைஞர் டி.வி. நிர்வாகி அமிர்தம், நடிகர்கள் சூர்யா, பார்த்திபன், வடிவேல், ரமேஷ்கண்ணா, கிரேசி மோகன், நடிகைகள் சரோஜாதேவி, நயன்தாரா, இயக்குநர்கள் லிங்குசாமி, தரணி, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.

விழாவில், கண்பார்வையற்றவர் மற்றும் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online