MENUMENU

ஹாலிவுட்டில் கலக்கணும் – பெண்ணாக மாறிய ரோஸ் விருப்பம்

ஹாலிவுட் நடிகை ஆக வேண்டும் என்பதே என் லட்சியம் என்கிறார், திருநங்கையாக இருந்து பெண்ணாக மாறியுள்ள ரோஸ்.

சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் ரமேஷ். அரவாணியாக இருந்த இவர், பெண்ணாகவே தன்னை உருவகப்படுத்திக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக தனது பெயரை ரோஸ் என்றும் மாற்றிக்கொண்டார்.

சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. முடித்தார். பின்னர் அமெரிக்கா சென்று எம்.எஸ். முதுகலை பட்டம் பெற்றார். மீண்டும் சென்னைக்கு வந்து வேலை தேடினார். ஆனால் திருநங்கை என்பதால் குடும்பம் மற்றும் சமுதாயத்தின் கேலிக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானார். வேதனைக்கு நடுவிலும் சாதிக்கும் வைராக்கியம் அவருக்குள் பிறந்தது. அதற்காக மனம் தளராமல் உழைத்தார்.

அதன் பயனாக சென்னை தொலைக்காட்சியில் ஒரு புதுமாதிரியான நேர்காணல் நிகழ்ச்சி (டாக்-ஷோ) நடத்தினார். இதில் சர்ச்சைக்குரிய விஷயங்கள், பேசுவதற்கு கூச்சப்படும், அச்சப்படும் விஷயங்களை பற்றி விவாதிக்கும் களமாக அந்த நிகழ்ச்சியை உருவாக்கினார்.

அதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் அதே நிகழ்ச்சியை ‘இப்படிக்கு ரோஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

அரவாணியான ரோஸ், தான் ஒரு முழு பெண்ணாக மாற வேண்டும், அதற்காக வெளிநாட்டிற்கு சென்று பால் மாற்ற அறுவை சிகிச்சை (பெனில் ஆம்புட்டேஜன் அண்ட் வெஜினோ பிளாஸ்ட்டி) செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்.

தனது லட்சியக் கனவை நிறைவேற்றுவதற்காக தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கிற்கு சென்று பால் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டு அழகான பெண்ணாக மீண்டும் சென்னை வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

எனது வாழ்க்கையில் முக்கியமான, அழகான கனவு, நான் ஒரு முழுமையான பெண் ஆக வேண்டும் என்பதுதான். அந்த கனவு இப்போது நனவாகி உள்ளது. இதற்காக 5 ஆண்டுகள் உழைத்தேன். ஒரு சாதாரண திருநங்கையாக இருந்து பால் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால இந்த அளவு பிரபலம் ஆகி இருக்காது. அதனால்தான் நான் முதலில் பிரபலமாகிவிட்டு அதன்பிறகு இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

இப்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு குறிப்பாக திருநங்கைகளுக்கு பெரும் விழிப்புணர்வு ஏற்படும். பால் மாற்றம் பற்றி அழகாக எழுத, பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பால் மாற்றம் என்பது முக்கியமான விஷயம். இந்தியாவில் பால் மாற்றத்திற்கு தேவையான மருத்துவ சிகிச்சை போதியளவில் இல்லை. போதிய அக்கறையும் கிடையாது. அதனால்தான் கடந்த 30 ஆண்டுகளாக பால் மாற்றம் அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்து வரும் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் இதைச் செய்து கொண்டேன்.

பெற்றோரிடம்கூட சொல்லிக்கொள்ளாமல், எனது நெருங்கிய சில நண்பர்களிடம் மட்டும் சொல்லிவிட்டு நான் மட்டும் கடந்த மாதம் 17-ந் தேதி விமானம் மூலம் பாங்காங் சென்றேன். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு நான் சென்றபோது ஏராளமான ரசிகர்கள் என்னை முற்றுகையிட்டு ஆட்டோகிராப் வாங்கினார்கள். பலரும் என்னோடு சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.

அதே நேரத்தில் அங்கு ஒரு கொடுமை நடந்தது. பாதுகாப்பு சோதனைக்காக பெண்கள் வரிசையில் நின்றேன். எனது பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்த பெண் போலீஸ், பாஸ்போர்ட்டில் ஆண் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், சேலை கட்டிக்கொண்டு பெண்கள் வரிசையில் வந்து நிற்கிறாயே என்று கேலி, கிண்டல் பேசி ஏளனமாக சிரித்தார்.

அங்கிருந்து ஆண்கள் வரிசைக்கு அழைத்து போனார். அங்கிருந்தவர்களும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். அதனால் எனக்கு வேதனையும், கோபமும் கொப்பளித்தது. அப்போது அங்கு வந்த உயர் அதிகாரி ஒருவர் எனது நிலையை பார்த்து மீண்டும் பெண்கள் வரிசையில் நிற்கவைத்தார்.

ஒருவழியாக பாங்காங் போய் சேர்ந்தேன். அங்கு எனக்கு 18-ந் தேதி பால் மாற்ற அறுவை சிகிச்சை நடந்தது. 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. மயக்கம் தெளிந்து நான் ஒரு 100 சதவீதம் முழு பெண்ணாக மாறிவிட்டதை நினைத்து ரொம்பவும் சந்தோஷப்பட்டேன், பெருமைப்பட்டேன். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் பூரிப்பாக இருக்கிறேன். பட்டாம்பூச்சி பறப்பது போல இருக்கிறது.

பெண்ணாக மாறக் கூடாது என்று வெறுத்து ஒதுக்கிய பெற்றோரும் இப்போது என்னை ஏற்றுக்கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்ணாக மாறியது பற்றி பத்திரிகைகளுக்கு சொல்லக் கூடாது என்று சொன்னார்கள். இருந்தாலும் பால் மாற்றம் அறுவை சிகிச்சை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அதனை பெரிய சேவையாக கருதுவதாலும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி நான் கூறுகிறேன். பெண்ணாக மாறிய பிறகு எனது முதல் பிறந்த நாளை மே 6-ந் தேதி சென்னையில் கொண்டாடுகிறேன்.

ஹாலிவுட் ஆசை

சினிமா உலகில் பெரிய இயக்குனராகவும், நடிகையாகவும் வருவதற்கு முயற்சி செய்து வருகிறேன். எனது முதல் படத்திற்கான கதையை எழுதி வருகிறேன். இந்த படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படும். எனது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை மையமாக வைத்தேோ இந்த படம் எடுக்கப்படும். இந்த படத்தின் மூலம் பல விஷயங்கள் வெட்டவெளிச்சமாகும். இந்த படத்திற்கு இசை அமைக்க மிகப்பெரிய இசையமைப்பாளர் ஒருவரை அணுகி உள்ளேன். இந்தியாவில் மட்டுமல்ல அகில உலக அளவில் ஹாலிவுட்டில் பிரபல நடிகை ஆகி கலக்க வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம்.

எனது வாழ்க்கையில் காதல் இருந்தது. இப்போது பெண்ணாக மாறிய பிறகு காதல் ஆழமாகவும், உணர்வு மிகுந்ததாகவும் இருப்பதாக உணர்கிறேன். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.

இங்கே தைரியமான ஆண்கள் இல்லை

இனிமேலும் தைரியம் இல்லாத ஆணை காதலனாக ஏற்க விரும்பவில்லை. என்னைப் போல பால் மாற்றம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்களை காதலித்து திருமணம் முடித்து வாழ்வதற்கு அசாத்திய தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ள ஆண்களால் மட்டுமே முடியும். அந்த தைரியம் இந்திய ஆண்களுக்கு இல்லை. அவர்கள் உண்மையாகவே காதலித்தாலும் சமுதாயத்திற்கு பயப்படும் கோழைகளாகவே உள்ளனர்.

எனது காதல் கணவன் வெளிநாட்டவராகவோ அல்லது தைரியமுள்ள இந்திய ஆணாகவோ இருக்கலாம். அப்படி திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் ஆசை இல்லை. பால் மாற்றம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு உலக அளவில் மருத்துவம் வளரவில்லை. அதனால் நானும், எனது காதல் கணவனும் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்போம். எனது பாஸ்போர்ட்டில் ஆண் என்றிருப்பதை பெண் என்று மாற்றப் போகிறேன். அந்த பாஸ்போர்ட்டே எனக்கு சட்ட அங்கீகாரமாக இருக்கும்.

உறுப்புகள்தான் மாற்றம்.. உணர்வுகள் அல்ல!

நான் பெண்ணாக மாறியதால் எனது திறமை, தன்னம்பிக்கை, மனபலத்தை இழக்கவில்லை. உணர்வு அளவில் ஆண்களும், பெண்களும் ஒன்றுதான். சில உறுப்புகள் மட்டும்தான் மாறியிருக்கின்றன. ஆண்களுக்கு நிகராக போட்டியிட்டு பல சாதனைகளை நிகழ்த்த விரும்புகிறேன். திருநங்கைகள் ஏனோ, தானோ என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடலுக்கு தீங்கு ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு திருநங்கைகளுக்கு நல்லதை செய்து வருகிறது. தமிழகத்தில் பால் மாற்றம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும் இன்னமும் சர்வதேச தரத்தில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். மத்திய அரசும் திருநங்கைகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்…” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online