MENUMENU

சொன்னா கேக்கமாட்டேங்குறாரே! – தந்தை பற்றி விஜய்

இந்த வயதில் எதுக்கு ரிஸ்க்… ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று என் தந்தையிடம் அடிக்கடி வற்புறுத்துகிறேன். ஆனால் சொன்னால் கேக்க மாட்டேங்குறார், என்றார் விஜய்.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் தயாரிப்பில், ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம், ‘வெளுத்து கட்டு’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில், கதிர்-அருந்ததி என்ற புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். சேனாபதி மகன் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல்களை விஜய் வெளியிட, குஷ்பு பெற்றுக்கொண்டார்.

விழாவில், விஜய் பேசியதாவது:

“எங்க அப்பா எப்போதுமே ஓடுகிற குதிரையில் சவாரி செய்வதை விரும்ப மாட்டார். அவராகவே புது குதிரைகளை உருவாக்கி, அதில் சவாரி செய்வதையே விரும்புவார். அவர் புதுமுகங்களை வைத்து படம் பண்ணி, நிறைய வெற்றிகளை கொடுத்து இருக்கிறார்.

விஜயகாந்த், ரகுமான், நான் (விஜய்) போன்றவர்கள் அப்பாவின் கண்டுபிடிப்புகள்தான். சிம்ரனைக்கூட ஒன்ஸ்மோர் படத்தில் அப்பாதான் அறிமுகம் செய்தார். இந்த படத்தில் கதிர், அருந்ததி என்ற இரண்டு பேர்களை அறிமுகம் செய்துள்ளார்.

எங்க அப்பாவின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. எனக்கு எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், முதலில் எங்க அப்பாவிடம்தான் விவாதிப்பேன். என் ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி, ரசிகர்களுக்கு நல்வழி காட்டியதெல்லாம் அப்பாதான்.

அவரை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி, நான் நீண்ட நாட்களாகக் கூறி வருகிறேன். ‘சூரியன் ஓய்வா எடுக்கிறது? காற்று ஓய்வா எடுக்கிறது?’ என்று என்னிடம் திருப்பிக் கேட்டு அமைதியாக்கி விடுகிறார். யார் சொன்னாலும் கேட்க மாட்டேங்குறார். இன்னும் தொடர்ந்து அவர் படம் எடுத்து வருகிறார்…”, என்றார்.

நடிகர்-டைரக்டர் பார்த்திபன் பேசுகையில், “குஷ்பு மேல்-சபை உறுப்பினர் ஆகப் போகிறார் என்று கூறுகிறார்கள். அவருக்கு என் வாழ்த்துக்கள். வரப்போகிற மேல்-சபையில் பெண்கள் 50 சதவீதம் இருந்தால் நல்லது.

சமீபத்தில், ஒரு வக்கீல் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக எந்த வக்கீலும் வாதாடக்கூடாது என்று வக்கீல்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

இதேபோல் ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தபின், அவனுக்கு ஆதரவாக எந்த வக்கீலும் வாதாடக்கூடாது. இப்படி ஒரு முடிவை இனிமேலாவது வக்கீல்கள் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்…”, என்றார்.

மும்பை போக வேண்டாம்…

குஷ்பு பேசும்போது, “தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை தேடி கேரளாவுக்கும், மும்பைக்கும் போவதை நிறுத்த வேண்டும். நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜாமைதீன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்டோர் பேசினர். படத்தின் பிஆர்ஓ பிடி செல்வகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online