MENUMENU

கொழும்பு திரைப்பட விழாவில் ‘ஃபிக்கி’ அமைப்பு பங்கேற்காது! – கமல் அறிவிப்பு

கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தான் தலைவராக உள்ள ஃபிக்கி (Federation of Indian Chamber of Commerce and Industry) அமைப்பிலிருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள் என நடிகர் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு வணிக ஆதரவு தந்துள்ளது ஃபிக்கி எனப்படும் இந்திய வர்த்தக-தொழில் கூட்டமைப்பு. இந்த ஃபிக்கி அமைப்பின் ஊடக- பொழுதுபோக்கு பிரிவுக்கு தலைவராக இருப்பவர் நடிகர் கமல் ஹாஸன்.

ஃபிக்கி தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும், ஃபிக்கியின் பொறுப்பிலிருந்து கமல்ஹாஸன் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் தமிழ் உணர்வாளர்கள். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம் சார்பில் கமல் ஹாஸன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் தங்கள் வேண்டுகோள் அடங்கிய மனுவை கமல் ஹாஸனிடம் அளித்தனர் போராட்டக் குழுவினர்.

இந்தப் போராட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் கமல்ஹாஸன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில்,

“தமிழ் உணர்வாளர்களே…

மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஃபிக்கி என்ற அமைப்பு திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் துவங்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டறக் கலந்ததாகும்.

உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐஃபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐஃபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை.

என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள் கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காகிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர்.

அவை நான் தென்னக FICCI தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி, எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், FICCI தலைமை, FICCI entertainment தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து IIFA விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர்.

மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது FICCI போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியைச் செய்துள்ளேன். மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன்.

FICCI விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் FICCI கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக FICCI தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online