MENUMENU

பாட்சா பட விவகாரம்: ‘என்னால் நஷ்டம் அடைந்தவர் ஆர்எம்வீ” – ரஜினி

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்திருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர் என்று நடிகர் ரஜினி கூறினார்.

1995ம் ஆண்டில் ரிலீசான ஆர்எம்.வீரப்பன் தயாரித்து ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படம் தமிழக அரசியலில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்தியது.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் இந்தப் படத்தை தயாரித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது. வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியது. அதன் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி, தமிழகத்தில் அப்போது நடந்த வெடிகுண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் வெடிகுண்டுக் கலாச்சாரம் பரவி வருவதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து ஆர்.எம். வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.

அதன் பிறகு, ரஜினி அலை உருவானதும், அதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தலில் அந்த அலையை திமுக- தமாக கூட்டணி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டதும் தமிழக அரசியல் சரித்திரத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

இதையடுத்து நடந்த தேர்தல்களில் எல்லாம் ரஜினி வாய்ஸ் என்ன.. ரஜினி என்ன சொல்கிறார்.. யாரை ஆதரிக்கிறார்.. என்ற கேள்விகள் எழத் தொடங்கின.

அவரும் ஒவ்வொரு தேர்தலிலும் அப்போதையே சூழலுக்குத் தக்கவாறு யாருக்காவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்து வந்தார்.

இந் நிலையில் சில ‘அறிவுஜீவிகள்’ அவரையே நேரடியாக அரசியலுக்கு இழுத்து வர முயன்றனர். காங்கிரஸ் பக்கம் கொண்டு போக சில தலைவர்களும் பாஜக பக்கம் இழுத்துச் செல்ல ‘அறிவுஜீவிகளும்’ முயன்றனர்.

ஆனால், இன்று வரை ரஜினி அந்த விஷயத்தில் ‘கிரேட் எஸ்கேப்’ ஆகி வருகிறார். இருந்தாலும் தேர்தல் வந்துவிட்டால் ரஜினியின் கருத்து என்ன என்று அவரை ஊடகங்கள் விரட்டுவதும், இந்தத் தேர்தலின்போது கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று ‘ரீல்’ விடுவதும் தொடர்கிறது.

ரஜினியோ அந்த நேரங்களில் ஊரை விட்டே எங்காவது போய்விடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந் நிலையில் ஆர்.எம். வீரப்பனின் மகன் தங்கராஜ் திருமணம் சென்னையில் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்த இந்தத் திருமணத்தில் பங்கேற்ற ரஜினி பேசுகையில், பாட்ஷா பட பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:

ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று முதல்வர் கலைஞரை ஒரே மேடையில் சந்திக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆர்.எம். வீரப்பன் எனது நீண்ட கால நண்பர். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. அன்பானது.

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்திருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர்.

பாட்ஷா படத்தால் உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கு அவர் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆத்தீக வாதி என்றால் கடவுள் செய்தது என்பார்கள். இவர் நாத்தீக வாதியாக இருந்ததால், காலத்தின் கட்டாயம் என்றார்.

ஆர்.எம். வீரப்பன் நண்பராக மட்டுமின்றி வழி காட்டியாகவும் இருக்கிறார். என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளவர்.
பாட்ஷா படம் எனக்கு ரொம்ப பேர் வாங்கி கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர்.எம். வீரப்பன். அந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டினார். அவரது தயாரிப்பில் வந்த மூன்று முகம் படமும் அபாரமாக வெற்றி பெற்றது.

பாட்ஷா படம் மாதிரி மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அப்படி எடுத்தால் ஆர்.எம். வீரப்பன்தான் தயாரிக்க வேண்டும் என்றேன். அவரால் தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்.

எம்.ஜி. ஆருடன் எப்படி நட்புடன் இருந்தாரோ அதே போல் முதல்வர் கருணாநிதியிடமும் இப்போது இருக்கிறார் என்றார் ரஜினி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online