MENUMENU

மதராசபட்டினம் – திரை விமர்சனம்

சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்து காதல் கதை! அதுவும் மதராசப்பட்டினத்து டோபிகானா பகுதியில் வசிக்கும் சலவை தொழிலாளி ஒருவருக்கும், அந்த மாகாணத்தையே ஆளும் ஆங்கிலேயே கவர்னரின் செல்ல மகளுக்குமிடையேயான காதல் கதை என்பதுதான் ஹைலைட்.

கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி ஆர்யா. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற ஆ‌ங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல். அநு்த காதல் தடைகளை தாண்டி பூத்து, காய்த்து, கனிந்து ருசித்ததா? அல்லது கசந்து கருகியதா? என்பதை கதாநாயகி எமிஜாக்ஸனின் நீங்கா நினைவலைகளில் இருந்து படமாக்கியிருப்பது வித்தியாசம்!

லண்டனில் இருந்து 60 ஆண்டுகளுக்கு பிறகு காதலனை தேடி இந்தியா வரும் கதாநாயகி, பழைய மதராசப்பட்டினத்தையும் தன் ஆசை காதலனையும் மீண்டும் பார்க்க முடியாமல் பார்வையாலும் பக்குவமான நடை, உடை, பாவனைகளாலும் தவிக்கும் தவிப்புகள் படம் பார்ப்பவர்களையும் தவிப்புக்கு உள்ளாக்குவதுதான் இயக்குனர் விஜய்க்கு கிடைத்துள்ள வெற்றியாகும். க்ளைமாக்ஸில் இருக்கும் விறுவிறுப்பு படம் முழுக்க இல்லாதது மைனஸ். அதே நேரம் படம் முழுக்க ஊசி பட்டாசாக வெடிக்கும் காமெடிகள் பெரிய ப்ளஸ்.

சலவை தொழிலாளியாக வரும் ஹீரோ ஆர்யா, உயிரை கொடுத்து நடித்திருந்தாலும் சற்றே அந்நியப்பட்டு தெரிவதை மட்டும் இன்னும் கொஞ்சம் மேக்கப் உபகரணங்களால் தவிர்த்திருந்தால் மேலும் சோபித்திருப்பார் என்ற எண்ணம் எழுகிறது.

ஹீரோயின் ஏமிஜாக்ஸனிடம் நம்மூர் நடிகைகள் கற்றுக் கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள் எக்கச்சக்கம் இருக்கிறது எனும் அளவிற்கு பக்காவாக நடித்திருக்கிறார் பேஷ்! பேஷ்!! வயதான ஏமியாக வரும் ஆங்கிலேயே ஆச்சி சும்மா நச்சென்று நடித்திருக்கிறார். குஸ்தி வாத்தியாராக வரும் சலவை தொழிலாளி நாசரில் தொடங்கி, பாலாசிங் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட சகலரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு. பலே நடிப்பு. ஆனால் இவர்கள் எல்லோரையும் காட்டிலும் ஐந்துமொழி தெரிந்தும் தெரியாத மொழி பெயர்ப்பாளர் வி.எம்.சி.ஹனீபா அட்டகாசம். அவர் ஸ்கிரீனில் வந்தாலே சிரிப்பு வருகிறது. கூடவே நிஜத்தில் ஹனீபா இன்று நம்மிடையே இல்லையே என்ற வருத்தமும் எழுகிறது.

ஆங்கிலேயே வில்லன் அலெக்ஸ். கவர்னர் ஜாக்ஜேம்ஸ்ஜார்ஜ் மற்றும் நண்பர்கள் பாலாஜி, உமர், சதிஷ், கிஷோர், ஜீவா, ஜெயக்குமார், குமாரவேல் உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்து சபாஷ் வாங்கி விடுகின்றனர்.

பழைய மதாராசபட்டினத்தையும் புதிய சென்னை மாநகரத்தையும் மாற்றி மாற்றி காட்டிட இயக்குனர் விஜய் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. அவரை விட அதிக ரிஸ்க் எடுத்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. இவர்கள் இருவருக்கும் கலைஇயக்குனர் செல்வக்குமார் பக்கபலமாக இருந்திருக்கிறார் என்றால் மிகையல்ல. ஜி.வி.பிரகானு்குமாரின் இசையில் வாம்மா துரையம்மா, மே கமே ஆகிய இரண்டு பாடல்களும் பிரமாதம். பழைய சென்னை வீதிகள், அதில் ஓடும் ட்ராம் வண்டிகள், சென்ட்ரல் ஸ்டேஷன், கூவம் ஆறு, அதில் ஓடும் படகுகள் என இன்றைய சிங்கார சென்னையை காட்டிலும் பழைய மதராசபட்டினம் பளிச்சென்று இருக்கிறது.

இது பரபரப்பில்லாத பழைய மதராசப்பட்டினத்துவாசிகளுக்கு வேண்டுமானால் பிடிக்கும்! இன்றைய பரபரப்பான சென்னைவாசிகளுக்கு?

எப்படியோ பழைய‌ மெட்ராசை காட்டியதற்காகவாது ‘மதராசப்பட்டினம்’ – ‘ஜெயிக்க வைக்கணும்’.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online