MENUMENU

தமிழர்களின் நாடகக் கலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய காவியத்தலைவன்

bb39c1a8-bc9a-4f1f-9234-17417fc293db_S_secvpfவருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்கள் மத்தியில், தமிழ் மக்களின் முக்கிய கலையான நாடகக் கலையை மையமாக வைத்து “காவியத்தலைவன்” என்ற படத்தை இயக்கியுள்ளார் வசந்த பாலன். இந்தக் கால சினிமா ரசிகர்கள், பாடல்கள் காட்சிகளின்போது ரிலாக்சாக வெளியே போய் வரும் சூழலில், நாடக கலையை மையமாக வைத்து ரசிகர்களின் ரசனைக்கேற்ப இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வசந்த பாலன் கொடுத்துள்ள உழைப்பு மிக அபரிமிதமானது. இரண்டரை மணி நேரம் ஓடும் அளவிற்கு ஒரு மசாலா படத்தை கொடுத்தோம். வசூலை வாரி குவித்தோம் என்றில்லாமல், தமிழரின் வாழ்வில் இரண்டறக் கலந்த கலை தொடர்பான கதைக்கருவை கையில் எடுத்தது மிகத்துணிச்சலான விஷயம்.

நாடகக் கலைக்குழுவின் தலைவராக நடிப்பதற்கு நாசரை தேர்வு செய்தது மிகச்சிறப்பான முடிவாகும். கற்பனைக்கு கூட இக்கதாபாத்திரத்திற்கு வேறு யாரையும் நினைத்துப்பார்க்க முடியாது. அதே போல மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக உள்ள பிரித்வி ராஜ், கதையின் சாராம்சத்தை உணர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கும் விதமாக நடித்துள்ளதை அனைவரும் பாராட்ட முன்வரவேண்டும். வசன உச்சரிப்பு மட்டும் போதாது, உடலசைவின் மூலமாகவும் சிறப்பான நடிப்பை தந்த சித்தார்த், நடன பெண்மணி கதாபாத்திரத்தில் சவாலான வேடத்தை ஏற்று அற்புதமாக நடித்துள்ள வேதிகா, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சவாலாக ஏற்று தத்ரூபமாக நடித்து வரும் பொன்வண்ணன் ஆகியோரும் பாராட்டத்தக்கவர்கள்.

நடிகர்களுக்கு அடுத்த படியாக இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், மிகுந்த ஈடுபாடு, கடின உழைப்பு ஆகியவற்றால் ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் முத்தான பாடல்களையும், ரசிக்கத்தக்க பின்னணி இசையையும் கொடுத்துள்ளார். இப்படத்தில் இவரும் ஒரு கதாநாயகன் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக இயக்குனர் வசந்த பாலனின் மிகக் கடுமையான உழைப்பு. நாடகக் கலையை கதை கருவாக தேர்வு செய்து, அதை போரடிக்காமல் கொண்டு செல்லும் வகையில் சிறப்பான திரைக்கதையை அமைத்துள்ளார். இன்றைய தமிழ் சமூகம் ஏறத்தாழ கூத்துக்கலையை மறந்துவிட்ட சூழ்நிலையில், மீண்டும் இந்த சிறப்பான கலையை நம் கண் முன் கொண்டு வந்து காண்பித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

நாடக கலைஞர்கள் இப்படத்தை காணும் பொழுது, தங்களது கலையை திரையில் மின்னச்செய்த வசந்த பாலனை நன்றியுடன் என்றென்றும் நினைத்துப்பார்ப்பார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

ஆகவே, தமிழக மக்களுக்கு நாடக கலையை நினைவூட்டிய காவியத்தலைவனை பார்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online