ர – திரை விமர்சனம்

ccac3709-4338-4de8-9fcb-435dee79d8ec_S_secvpfபடத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் அஜய்யும், நாயகி ரென்யாவும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களது திருமணத்திற்கு நாயகியின் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும், நாயகனுடைய வீட்டில் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

திருமணம் முடிந்து வீடு திரும்பும் நாயகனுக்கும், நாயகிக்கும் முதல் இரவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாயகனுடைய வீட்டில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்கின்றனர். நாயகனும், நாயகியும் மட்டும் அந்த வீட்டில் தங்க வைத்துவிட்டு, குடும்பத்தினர் அனைவரும் வேறு வீட்டுக்கு சென்றுவிடுகின்றனர்.

குடும்பத்தினர் சென்ற சில நிமிடங்களில் நாயகனுடைய நண்பர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்ட்டி கொண்டாட நாயகனை அழைக்கின்றனர். நாயகனும், நாயகியின் சம்மதத்தின் பேரில் அந்த வீட்டிலுள்ள மற்றொரு அறையில் நடைபெறும் பார்ட்டியில் கலந்து கொண்டு, வெகுநேரம் கழித்து அறைக்கு திரும்புகிறார். பின்னர் களைப்புடன் கட்டிலில் படுத்து தூங்கி விடுகிறார்.

மறுநாள் விழித்து பார்க்கும்போது ரென்யா மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள். அவளது சாவுக்கு காரணம் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள்தான் என்று நினைத்து போலீஸ் அவர்களை விசாரிக்கிறது. ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவள் மாரடைப்பால் இறந்துபோனாள் என்று தெரிய வந்ததும் இவர்களை விடுவிக்கிறது.

காதலியுடன் ஒருநாள்கூட வாழமுடியாத வேதனையில் ஆழ்ந்து கிடக்கிறார் நாயகன். இந்த நிலையில், அந்த வீட்டில் அமானுஷ்ய சக்தி ஒன்று நாயகனை ஆட்டிப்படைக்கிறது. இதை உணரும் நாயகனின் குடும்பத்தார் அனைவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறி, வெளியே தங்குகின்றனர். ஆனால், நாயகன் மட்டும் அங்கேயே தங்குகிறார்.

அந்த வீட்டில் தனது மனைவி தான் அமானுஷ்ய சக்தியாக உலாவுகிறாள் என்று நினைத்து ஒரு விஞ்ஞானியை சந்தித்து விளக்கம் கேட்கிறான் நாயகன். அதற்கடுத்த நாள் அந்த விஞ்ஞானியும் மர்மமான முறையில் இறந்து போகிறார்.

இதனால், போலீசின் சந்தேக பார்வை நாயகன் மீது விழுகிறது. ஆனால், நாயகனை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை. இந்நிலையில், நாயகனின் வீட்டிற்கு வந்து தங்கும் நாயகனின் சகோதரியும், மர்மமான முறையில் இறந்து போகிறாள். இதற்கும் ஆவி தான் காரணமா? என்று புரியாமல் தவிக்கிறார் நாயகன்.

இறுதியில் இத்தனை கொலைகளுக்கும் காரணம் யார் என்பதை நாயகன் கண்டுபிடித்தாரா? என்பதை திரில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

அஜய் வேடத்தில் நடித்திருக்கும் நாயகன் அஷ்ரப், புதுமுகம் என்றாலும் திரில் கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படத்தின் கதையை தனது தோளில் தூக்கி சுமந்திருக்கிறார். படம் முழுவதும் இவரது கதாபாத்திரம் நகர்வதால், தனக்கு கொடுத்திருந்த கனமான கதாபாத்திரத்தை நிறைவாக செய்து கைதட்டல் பெறுகிறார். திரில் காட்சிகளில் இவர் முகத்தில் காட்டும் உணர்ச்சி நம்மையும் அவரோடு ஒன்ற வைக்கிறது.

நாயகி அதிதி செங்கப்பாவுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். நாயகனின் குடும்பத்தார்களாக வரும் அனைவருமே புதுமுகங்கள்தான் என்றாலும் நடிப்பில் அது தெரியவில்லை. அனைவரும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் போலவே நடித்திருக்கிறார்கள்.

கிரைம், சைக்காலஜிக் திரில்லருடன் ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரபு யுவராஜ். இவருடைய முதல் முயற்சியே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

பேய்க்கதையாக சொன்னால் மக்கள் நம்ப மறுப்பார்கள் என்பதற்காக கிளைமாக்சில் புது வில்லனை புகுத்தி நம்மையும் யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அடுத்தடுத்து பல காட்சிகள் நாம் யூகிக்க முடியாமல் எடுத்திருப்பது படத்திற்கு சற்று பலம்.

சரவணன் ஒளிப்பதிவு நம்மை பயமுறுத்துகிறது. ராஜ் ஆர்யன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் தான் என்றாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். திரில் காட்சிகளில் இவருடைய பின்னணி இசை நம்மை மிரட்டுகிறது.

மொத்தத்தில் ர திகில் அனுபவம்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries