MENUMENU

நாடோடிப் பறவை – திரை விமர்சனம்

62578aed-d229-4df2-97fa-737b4331ee2c_S_secvpfஆதரவற்ற நாயகன் சுபாஷ், கிராமத்தில் நண்பர்களுடன் வாழ்ந்து வருகிறான். நாயகி காவேரி அதே கிராமத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறாள். ஒருநாள் வழியில் பார்க்கும் காவேரியை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறான் சுபாஷ்.

அந்த கிராமத்தில் குடிக்கும் நீரில் கெமிக்கல் கலந்து வருவதால் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.

இதை அறியும் சுபாஷ், ஊரில் உள்ள மக்கள் அனைவரையும் அழைத்து கொண்டு ஊர் தலைவரிடம் முறையிடுகிறான். பின்னர் இதற்கு காரணம் ஊரில் உள்ள காளிதான் என்பதை தெரிந்துக் கொள்கிறான்.

மறுபுறம் காளிக்கு சொந்தமான ஒரு மெடிக்கல் ஷாப்பில் வாடிக்கையாளருக்கு கலாவதியான மருந்தை கொடுக்கிறார்கள். இதை தட்டிக்கேட்கிறாள் காவேரி.

மேலும் அந்த கடைக்காரரிடம் போலீசில் முறையிட போகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறாள். இதனால் காளி கோபமடைந்து காவேரி செல்லும் வழியில் அவளை மறித்து மிரட்டி விட்டு செல்கிறான்.

காளியின் மிரட்டலுக்கு பயப்படும் காவேரி, தன் தோழி உதவியுடன் சுபாசிடம் உதவி கேட்கிறாள். இதற்கிடையில் குடிநீரில் கெமிக்கல் கலப்பு காரணமாக ஒரு குழந்தை இறக்கிறது. அங்கு வரும் காளியை சுபாஷ் அடித்து விடுகிறான்.

இதனால் கோபமடையும் காளி தன்னுடைய இடத்திற்கு சுபாசை வரவழைக்கிறான். அங்கு ஆட்களை வைத்து சுபாசை அடித்து, பின்னர் போலீசிடம் என்கவுன்டர் மூலம் கொலை செய்ய சொல்கிறான். போலீசாரும் என்கவுன்டரில் கொலை செய்ய சுபாஷை ஒரு காட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.

இதிலிருந்து தப்பிக்கும் சுபாஷ், காட்டிலேயே வாழ்கிறான். அங்கு காவேரியை சந்திக்கிறான். இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். காவேரியிடம் தன் காதலை சொல்கிறான் சுபாஷ்.

அதற்கு காவேரி நான் இறந்து பல நாட்கள் ஆகிறது என்று கூறுகிறாள். இதை கேட்டு அதிர்ந்து போகிறான் சுபாஷ். மேலும் காளியால்தான் நான் இறந்தேன். அவனை பழிவாங்க தான் ஆவியாக இருக்கிறேன் என்று கூறுகிறாள்.

இறுதியில் சுபாஷ் ஆவியான காவேரியுடன் இணைந்து காளியை பழிவாங்கினானா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சுபாசாக நடித்திருக்கும் தருண் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பல இடங்களில் முயற்சி பயனளிக்காமல் செல்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீராகவி பேயாக வந்து மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. காளி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

தற்போது உள்ள சினிமாவில் பேய், ஆவி, படங்களை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் என்று எண்ணி இப்படத்தையும் அந்த வரிசையில் படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் விஜயராகவ சக்கரவர்த்தி.

ஆனால் படத்தில் லாஜிக் இல்லாத காட்சிகள் அதிகம் வருகின்றது. சொல்ல வருவதை திரைக்கதையில் தெளிவாக தெரிவித்திருக்கலாம். படம் பார்க்கும்போது நிறைய கேள்விகள் மனதில் எழுகிறது.

பாடல்கள் தேவையற்ற இடங்களில் வருகிறது. முதல் பாதியில் காமெடி என்னும் பெயரில் கடுப்பேத்தியிருக்கிறார்.

கிஷோர் குமாரின் இசையில் கானா பாலா பாடிய பாடல் மட்டும் குத்தாட்டம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் மற்ற படங்களின் இசையை அப்படியே போட்டிருக்கிறார்.

குறிப்பாக வில்லனுக்கு வரும் பின்னணி இசை எடுபடவே இல்லை. கவுதமின் ஒளிப்பதிவு தெளிவில்லாமல் இருக்கிறது. எடிட்டிங் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘நாடோடிப் பறவை’ பறக்கவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online