நட்சத்திர கிரிக்கெட்: கேரளாவுக்கு 149 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை

348ff1c3-f4b2-4781-b378-0317b0cb405e_S_secvpfஇந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி (சி.சி.எல்.) நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், ஆசிப் அலி தலைமையிலான கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியும் மோதும் போட்டி ஐதராபாத் லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் மதியம் 2.30 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. அதன்படி, சாந்தனுவும், அதிரடி வீரரான விக்ராந்தும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

விக்ராந்த் ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும், மறுமுனையில் பேட் செய்த சாந்தனு பொறுமையுடன் விளையாடினார். அணியின் ஸ்கோர் 65 ரன்களாக இருந்தபோது, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த விக்ராந்த், விவேக் கோபன் பந்தில் விக்கெட் கீப்பர் அருணால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். விக்ராந்த் 23 பந்துகள் மட்டுமே சந்தித்து 35 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 5 பவுண்டரிகளும் அடங்கும்.

இவரைத் தொடர்ந்து சாந்தனுவுடன், மற்றொரு அதிரடி வீரரான விஷ்ணு ஜோடி சேர்ந்தார். இருவரும் கேரளா அணியின் பந்துவீச்சை பொறுமையாக கையாண்டு அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர்.

தனது விளையாட்டில் பொறுமையை கையாண்ட சாந்தனு, இந்த போட்டியில் அரை சதத்தை கடந்தார். 19.1 ஓவரில் சாந்தனு 52 ரன்கள் எடுத்து, அருண் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அவர் இந்த ரன்களை எடுக்க 60 பந்துகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 பந்துகள் மீதமிருந்த நிலையில், விஷ்ணுவுடன், பிரித்வி இணைந்தார். பிரித்வி தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்ட சென்னை வீரர்கள் முயன்றும் அதற்கு பலன் கிட்டவில்லை.

இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 148 ரன்கள் எடுத்தனர். விஷ்ணு 41 ரன்களுடனும், பிரித்வி 6 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளா அணி விளையாடி வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries