MENUMENU

பொங்கி எழு மனோகரா – திரை விமர்சனம்

2b65ee8a-5927-4369-87c1-b79f4d10b5a8_S_secvpfகிராமத்தில் பால் வியாபாரம் செய்து வரும் சம்பத்ராமின் மகன் நாயகன் இர்பான். இவர் சிறுவனாக இருக்கும் போது, சம்பத்ராம் இர்பான் தன் மனைவியை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

இதனால் இர்பானும் தாயின் முகம் தெரியாமல் பாசம் கிடைக்காமல் வளர்கிறார். சம்பத்தும் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறார்.

வளர்ந்து பெரியவனாகும் இர்பான், தன் தந்தையுடன் இணைந்து பால் வியாபாரம் செய்து வருகிறார். உறவினர் சிங்கம்புலி, இர்பானுக்கு தோழனாக இருக்கிறார். இவரின் தந்தைக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருந்து வந்து அது நிறைவேறாமல் இறந்து விடுகிறார்.

இதனால் சிங்கம்புலி தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற ஒரு நாடக கம்பெனியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். சிங்கம்புலி நடத்தும் நாடகங்களில் அவ்வப்போது சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார் இர்பான்.

ஒருநாள் சிங்கம்புலிக்கு பெண் பார்க்கும் படலத்திற்கு செல்லும் போது, நாயகி அர்ச்சனாவுக்கும் இர்பானுக்கும் மோதல் ஏற்படுகிறது. இவர்களுடைய மோதல் பின்னர் காதலாக மாறுகிறது.

இருவரும் காதலித்து வரும் நிலையில், இந்த காதல் விஷயம், அர்ச்சனாவின் தந்தைக்கு தெரிந்து விடுகிறது. இதனால் அர்ச்சனாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துவிடுகிறார்.

இதனால் கோபமடையும் இர்பான், அர்ச்சனாவை எப்படியாவது வீட்டிலிருந்து அழைத்து வந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவோடு அர்ச்சனா வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு அர்ச்சனாவின் தோழி, அர்ச்சனாவிடம் ஏன் இர்பான் காதலித்துவிட்டு தற்போது பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்திருக்கிறாய் என்று கேட்க, அதற்கு அர்ச்சனா, ‘இர்பான் ஒரு பால்காரன்.

அவனை திருமணம் செய்துக் கொண்டால் நான் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படவேண்டும். பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையோ பணக்காரன். நான் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் இல்லாமல் வாழ முடியும். அதனால்தான் திருமணத்திற்கு சம்மத்தித்தேன்’ என்று கூறுகிறார். இதை கேட்கும் இர்பான் மனம் உடைந்து கோபமாகிறார்.

அதன்பின் மளிகைக்கடை பெண்ணான அருந்ததி நாயரை காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்த பெண்ணை காதலித்து வருவதால் பால் வியாபாரத்தில் கவனம் செலுத்தாமல் தந்தையின் கோபத்திற்கு ஆளாகிறார். இதனால் இர்பானை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் சம்பத்ராம்.

இந்த சூழ்நிலையில் சம்பத்ராமின் பழைய நண்பர் ஒருவர், இர்பானின் அம்மாவும் அப்பாவும் பிரிவுக்கான காரணத்தை விவரிக்கிறார். இந்த காரணத்தை கேட்ட இர்பான் தன் தாயை பார்க்க துடிக்கிறார். தாய் இருக்கும் இடத்தை அறிந்து தேடிச் செல்கிறார்.

இறுதியில் இர்பான் சிறுவயதில் இருந்து பிரிந்து வாழும் தன் தாயை கண்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் இர்பான், துறுதுறு நடிப்பால் படம் முழுக்க வலம் வருகிறார். காதல் காட்சிகளில் இயல்பான நடிப்புடனும், தாயை பற்றி அறிந்தவுடன் தாய்ப்பாசத்திற்கு ஏங்குவதும் என நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான அர்ச்சனா முதல் பாதியில் மட்டும் வருகிறார். அழகுப் பதுமையாக வரும் இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காமெடியிலும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். கேரளத்து வரவான அருந்ததி நாயர், பாவாடை சட்டையில் வந்து நடிப்பால் மனதில் நிற்கிறார்.

இர்பான் கதாபாத்திரத்திற்கு இணையாக சிங்கம்புலிக்கு வலுவான கதாபாத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து காமெடி, சென்டிமென்ட் என அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார். இதுவரை ரவுடியாக நடித்து வந்த சம்பத்ராம், இப்படத்தில் சீரியசான கதாபாத்திரத்தில் அழுத்தமாக பதிகிறார்.

உண்மை கதையை மையமாக வைத்து அதில் திரைக்கதை அமைத்து நகைச்சுவையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி. கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

குறிப்பாக இவர் எழுதிய அம்மா பாடல் தாயின் பாசத்தை உணர்த்துகிறது. படம் காதலைச் சொல்கிறதா அல்லது தாய்ப்பாசத்தைச் சொல்கிறதா என்கிற முடிவுக்கு வர முடியாமல் இருக்கிறது. ஏதாவது ஒரு திசையில் பயணித்திருக்கலாம்.

காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை சென்று கொண்டிருக்கும்போது சட்டென்று அம்மா பாசத்திற்கு திரைக்கதை செல்வதை ஏற்க முடியவில்லை.

கண்ணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். அம்மா பாடல், இசைமழையில் நனைய வைக்கிறது. ஒளிப்பதிவில் சி.ஜே.ராஜ்குமார் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘பொங்கி எழு மனோகரா’ ஆக்ரோஷம் இல்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online