MENUMENU

ஷமிதாப் – திரை விமர்சனம்

b548db48-1c34-45ea-950e-b15a9534e4ae_S_secvpfசிறு வயதிலேயே பேசமுடியாத தனுஷ், தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி எப்படியாவது பாலிவுட்டில் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆசையில், தான் பிறந்த ஊரை விட்டு மும்பைக்கு வருகிறார்.

அங்கு உதவி இயக்குனராக இருக்கும் அக்ஷரா ஹாசனின் நட்பு இவருக்கு கிடைக்கிறது. அவரிடம் தன் திறமையை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.

தனுஷின் நடிப்பை பார்த்து வியந்த அக்ஷரா, அவரை பல இயக்குனர்களிடம் சிபாரிசு செய்கிறார். ஆனால், தனுஷால் பேசமுடியாததால் அவருக்கு யாரும் வாய்ப்பு தர மறுக்கிறார்கள்.

இந்நிலையில், தனுஷின் காதில் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அட்வான்ஸ்டு சென்சார் ஒன்றை பொருத்துகின்றனர்.

அதன் மூலம் வேறொருவரின் குரலை உள்வாங்கும் தனுஷ், வாயை மட்டும் அதற்கேற்றார் போல் மாற்றி பேசுவது போல் நடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இதனால் தனுஷிற்காக குரல் கொடுப்பவரை தேடி அலைகின்றனர். அப்போது, ரோட்டோரத்தில் குடித்து விட்டு உளறிக் கொண்டிருக்கும் அமிதாப்பின் குரல் பிடித்துப்போகவே அவரை தனுசுக்கு குரல் கொடுக்க அழைக்கிறார் அக்ஷரா.

ஆனால், தனுஷின் முகத்தை பார்த்து அவருக்கு குரல் கொடுக்க முடியாது என மறுக்கிறார் அமிதாப். இறுதியில், தனுஷின் நடிப்பு திறமையை பார்த்து, அவருக்கு குரல் கொடுக்க சம்மதிக்கிறார் அமிதாப்.

தனுஷின் நடிப்பும், அமிதாப்பின் குரலும் இணைய ‘ஷமிதாப்’ என்ற நடிகர் உருவாகிறார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் முதல் படமே சூப்பர் ஹிட்டாகிறது. இந்த வெற்றி இருவருக்கும் ஒருவித போதையை உருவாக்குகிறது.

தன்னுடைய குரலால் தான் தனுஷுக்கு இந்த பேரும் புகழும் கிடைத்தது என அமிதாப்பும், தன்னுடைய நடிப்பால் தான் தனக்கு இந்த புகழ் கிடைத்தது என தனுஷும் கர்வம் கொள்கிறார்கள். இதுவே, இவர்களுக்குள் ஒரு ஈகோவை உருவாக்குகிறது.

இதனால், இருவரும் தங்களுக்குள் போட்டி, பொறாமையை வளர்த்துக் கொள்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

படத்திற்கு மிகப்பெரிய பலமே தனுஷின் அபார நடிப்புதான். வாய் பேச முடியாதவராக இவர் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது. சான்ஸ் கேட்டு அக்ஷராவிடம் நடித்துக் காட்டும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.

முதல் அரை மணி நேரத்திற்கு பிறகே படத்தில் அமிதாப் வருகிறார். அதுவரை, தனுஷுக்கு இப்படத்தில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

அதேபோல், சிறுவயது தனுஷாக நடித்திருக்கும் அந்த சிறுவனும் பாராட்டப்பட வேண்டியவர்தான். பள்ளியில் நடித்துக் காட்டும் ஒரு காட்சியில் அந்த சிறுவனுடைய நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

அமிதாப் பச்சன், அவருடைய நடிப்பை நாம் விமர்சனம் செய்ய தேவையே இல்லை. அனுபவம் சேர சேர நடிப்பு எந்தளவுக்கு மெருகேறும் என்பதற்கு இவர்தான் சரியான உதாரணம்.

தனுஷுக்கு குரல் கொடுக்கும் காட்சிகளில்கூட அமிதாப்பே நம் கண்ணுக்கு தெரிகிறார். அவருடைய கம்பீரக் குரல் அனைவரையும் கவரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

உதவி இயக்குனராக வாய்ப்புக்காக சென்ற அக்ஷராஹாசனுக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து உதவி இயக்குனர் கதாபாத்திரத்தையும் கொடுத்திருக்கிறார் பால்கி.

அக்ஷராவின் முகத்தில் வரும் சின்ன சின்ன முகபாவனைகள் கூட நம்மை வெகுவாக கவர்கிறது. படம் முழுக்க துறு துறுவென வருகிறார்.

முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்திய இயக்குனர் பால்கி, இரண்டாம் பாதியில் சற்று சோர்வை தருகிறார். மற்றபடி, ஒவ்வொரு காட்சியையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தை கொடுத்திருக்கலாம்.

படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பேசிக்கொண்டே இருப்பதால் சற்று மந்தமாக இருக்கிறது.

இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. இவருடைய இசையில் 2 பாடல்களும் மிகவும் ரசிக்க வைக்கின்றன.

பின்னணி இசையிலும் நவீன ராஜாவாக பளிச்சிடுகிறார். பி.சி.ஸ்ரீராமின் கேமரா கண்கள், ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கியிருக்கிறது.

மொத்தத்தில் ‘ஷமிதாப்’ வெற்றிக் கூட்டணி

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online