MENUMENU

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் – திரை விமர்சனம்

c9d377e5-c285-4980-8541-8fe704c88db0_S_secvpfதமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் ஒரு படத்தில் இரண்டு மூன்று கதைகளை சொல்லும் படங்களைப் போலவே வெளிவந்திருக்கிறது தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்.

சென்னை மாநகரம் ஒரு நாள் செல்போன் இல்லையென்றால், எந்தளவுக்கு ஸ்தம்பித்து போகிறது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

கதைப்படி நாயகன் நகுல், என்ஜினியரிங் முடித்து எந்த வேலைக்கும் போகாமல் தான் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், தான் படித்த கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களுக்கு புராஜெக்ட் செய்து கொடுத்தும், அதன் மூலம் சம்பாதித்தும் வருகிறார்.

இந்நிலையில், அதே கல்லூரியில் படித்துவரும் ஐஸ்வர்யா மேனனும், தனது புராஜெக்ட்டுக்காக நகுலின் உதவியை நாடுகிறார். அவருக்கு வித்தியாசமான புராஜெக்ட்டை செய்து கொடுக்கும், நகுலை பிடித்துப் போகவே அவரை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார் ஐஸ்வர்யா.

மறுமுனையில், இன்னொரு நாயகனான தினேஷ் வீட்டு மனைகளை விற்பனை செய்பவராக இருக்கிறார். இவர் ஒருநாள் வங்கியில் பணிபுரியும் பிந்துமாதவியை சந்திக்கிறார்.

வறுமை காரணமாக தனது குடும்பத்தை இழந்த பிந்துமாதவி, தன்னைப்போல் வறுமையில் வாடும் பல குடும்பங்களுக்கு இலவசமாக கவுன்சிலிங் செய்கிறார். வேறு ஒருவருக்கு கவுன்சிலிங் பண்ணப்போய் தினேஷுக்கு தவறுதலாக கவுன்சிலிங் செய்கிறார்.

பிந்துமாதவியின் ஆதரவான வார்த்தைகள் தினேஷை மயக்க அவர் மீது காதல் வயப்படுகிறார். ஆனால், பிந்து மாதவியோ இந்த காதலை ஏற்க மறுக்கிறார்.

தன்னை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டால் தான் அவளை மறந்துவிடுவதாக தினேஷ் கூறுகிறார். இதற்காக பயிற்சி எடுக்கும் பிந்துமாதவி அதில் தோல்வி அடைகிறார். இறுதியில் தினேஷை காதலிக்கவும் தொடங்குகிறார்.

தன் காதலை சொல்ல தினேஷை தேடி அவர் பணிபுரியும் இடத்திற்கு செல்லும் பிந்து மாதவி தவறுதலாக ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறார்.

அந்த பள்ளத்திற்கு மேலே இருக்கும் கல் ஒன்று பள்ளத்திற்குள் விழ தயாராக இருக்கிறது. எனவே, உடனடியாக தனது போனில் தினேஷை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்.

இதே வேளையில், கால் டாக்சி டிரைவரான சதீஷின் டாக்சியில் வெடிகுண்டு ஒன்றை வைக்கும் தீவிரவாதி ஓருவன், அதை செல்போன் மூலமாக இயக்கி சென்னையின் முக்கிய இடத்தில் வெடிக்க வைக்க சதி செய்கிறான்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒருங்கே நடந்து கொண்டிருக்கும்போது, சென்னையில் சூரியப்புயல் காரணமாக செல்போன் டவர்கள் எல்லாம் செயலிழந்து போகின்றன. இதை சரிசெய்ய நகுலால் மட்டும் தான் முடியும் என்று முடிவெடுத்து செல்போன் நிறுவனங்கள் எல்லாம் அவரை நாடிச் செல்கின்றன.

இறுதியில் அந்த செல்போன் டவர்களை எல்லாம் நகுல் வேலை செய்ய வைத்தாரா? பிந்து மாதவி பள்ளத்தில் இருந்து தப்பித்தாரா? தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க வைத்தாரா? என்பதே மீதிக்கதை.

நகுல் படம் முழுக்க அரைக்கால் சட்டையுடன் வலம் வருகிறார். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடித்திருக்கிறார். பரபரப்பான காட்சிகளிலும் இதேபோல் நடித்திருப்பது சற்று சலிப்பை தருகிறது.

இவருக்கு ஜோடியாக வரும் ஐஸ்வர்யா மேனன் காலேஜ் பொண்ணு கெட்டப்புக்கு கச்சிதம். யதார்த்தமான நடிப்பு. நடிக்க ரொம்பவும் சான்ஸ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

மற்றொரு நாயகனாக வரும் அட்டக்கத்தி தினேஷ், வீடுகளை விற்பனை செய்ய இவர் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது.

இந்த படத்தில் இவரை நன்றாக வசனம் பேச வைத்திருக்கிறார் இயக்குனர். பிந்து மாதவி படம் முழுக்க சேலையுடன் அழகு பதுமையாக வலம் வந்திருக்கிறார்.

இவர் பேசும் அன்பான வார்த்தைகள் நம்மையும் ஈர்க்கிறது. தினேஷுக்கு ஜோடியாக மட்டும் நினைத்து பார்க்க முடியவில்லை.

சதீஷுக்கென்று இப்படத்தில் தனி டிராக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இவருக்கும் இப்படத்தில் ஜோடி உண்டு. இருவரும் சேர்ந்து தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக கையாண்டு, அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஊர்வசி, மனோபாலா ஆகியோர் வரும் காட்சிகளும் கலகலப்பு.

தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான கதையையே எடுத்துக் கொண்டு அதில் டெக்னாலஜி என்ற புதுமையை புகுத்தி, அதை வித்தியாசமாக எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஆனால், அந்த கதைகளை அழுத்தம் இல்லாமல் எடுத்திருப்பது படத்திற்கு சற்று பலவீனம் தான்.

அதிலும், செல்போன் டவர்களை வேலை செய்ய வைக்கும் டெக்னாலஜியை பற்றி நகுல் விளக்கி கூறும் காட்சிகள் படத்தில் நடித்தவர்களுக்கே புரியாத போது, அதை பார்க்கும் ரசிகர்கள் புரிந்துகொள்வார்களா? என்பது சந்தேகம் தான்.

அதே போல், வெடிகுண்டை கண்டுபிடிக்கும் காட்சியை பரபரப்பே இல்லாமல் சொதப்பலாக காட்சிப்படுத்தியிருப்பது பெரிய பலவீனம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். தீபக்குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதேபோல், செந்தில்குமாரின் வசனங்களும் படத்திற்கு பெரிய கைதட்டலை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ அழுத்தலாம்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online