MENUMENU

காக்கி சட்டை – திரை விமர்சனம்

51752-ks still 10சென்னையில் குற்றப்பிரிவு போலீஸ் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று கனவோடு இருந்து வருகிறார். இவருடன் போலீஸ் இன்ஸ்பெக்டராக பிரபுவும், ஏட்டாக இமான் அண்ணாச்சியும் வேலை செய்து வருகிறார்கள்.

இவர்கள் திருடர்களை பிடிக்கிறதும், திருட்டு போன நகைகளை பிடிக்கிறதுமாக தங்கள் வேலையை பொறுப்புடன் செய்கிறார்கள்.

ஆனால், மீட்கப்பட்ட நகைகள் மேலதிகாரிகளின் நிர்பந்தம் காரணமாக உரியவர்களிடம் போய் சேராமல் வேறு யாருக்கோ போய் சேருகிறது. இப்படி நியாயமாக உழைத்தாலும் பலன் கிடைக்காமல் போவதால் பிரபு மீது கோபப்படுகிறார் சிவகார்த்திகேயன்.

இதற்கு பிரபு ஒரு பெரிய கேஸ் ஒன்றை கண்டுபிடி, அப்போதுதான் அந்த கேஸில் உள்ள பிரச்சனைகள் உனக்கு புரியும் என்று அறிவுரை கூறுகிறார்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன், தான் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் ஸ்ரீதிவ்யா மீது காதல் வயப்படுகிறார். தன் காதலை ஸ்ரீதிவ்யாவிடம் கூறி சம்மதமும் வாங்குகிறார்.

ஆனால் ஸ்ரீதிவ்யாவின் குடும்பமோ போலீஸ் மாப்பிள்ளை வேண்டாம் என்று சிவகார்த்திகேயனை ஒதுக்குகிறது. இருந்தாலும் இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா வேலை செய்யும் மருத்துவமனையில், வெளி மாநிலங்களில் தமிழகத்திற்கு கூலி வேலைக்கு வரும் அப்பாவி ஆட்களை விபத்தில் சிக்க வைத்து, அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதுபோல் அவர்களுக்கு மூளைச்சாவை ஏற்படுத்தி, அவர்களின் உடல் உறுப்புகளை வெளிநாட்டிற்கு விற்று ஒரு கும்பல் பணம் சம்பாதிக்கிறது.

இதனை ஸ்ரீதிவ்யாவின் உதவியால் கண்டுபிடிக்கும் சிவகார்த்திகேயன், சம்பந்தப்பட்ட நபர்களை பிரபுவின் உதவியோடு கைது செய்கிறார்.

அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த செல்லும் வழியில் அந்த கும்பலின் தலைவன் விஜய் ராஸ், வாகனத்தை வெடிக்க வைக்கிறான். இதில் பிரபு மற்றும் குற்றவாளிகள் இறக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் தப்பிக்கிறார். விஜய் ராஸ் செய்யும் குற்றங்களுக்கு மேலதிகாரிகள் துணை நிற்பதால் அவரை தகுந்த ஆதாரம் இல்லாமல் கைது செய்ய முடியாது என்று எண்ணுகிறார் சிவகார்த்திகேயன்.

இறுதியில் உடல் உறுப்புகளை விற்கும் விஜய் ராசை தகுந்த ஆதாரங்களுடன் பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் முதல் முறையாக போலீஸ் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். போலீஸ் வேடம் பொருந்தாது என்ற எண்ணத்தில்தானோ என்னவோ, படத்தில் பாதிக்கு மேல் மப்டியிலேயே வருகிறார். வழக்கம்போல் காமெடியில் அசத்துகிறார்.

அதேசமயம் ஆக்‌ஷனில் கூடுதல் கவனம் செலுத்தி ரசிகர்களை கவர்கிறார். முந்தைய படங்களை விட இப்படத்தில் அவரது அனுபவம் பளிச்சிடுகிறது. இமான் அண்ணாச்சி, மனோபாலா ஆகியோருடன் இவர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன.

நர்சாக வரும் ஸ்ரீதிவ்யா அழகு பதுமையாக வந்திருக்கிறார். நர்ஸ் உடையிலும், பாடல் காட்சிகளிலும் கலர்புல்லாக தெரிகிறார். இவர் சிவகார்த்திகேயனுடன் பேசும் காதல் மொழிகள் ரசிகர்களை கிறங்கடிக்கிறது.

சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார் பிரபு. தன்னுடைய அனுபவம் வாய்ந்த நடிப்பால் கைதட்டல் பெறுகிறார். இமான் அண்ணாச்சி, மயில்சாமி, மனோபாலா ஆகியோரும் ரசிகர்களை ஏமாற்றாமல் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

வில்லனாக வரும் விஜய் ராஸ் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இவரின் அலட்டல் இல்லாத நடிப்பு ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிகிறது.

வழக்கமான போலீஸ் கதை என்றாலும், அதில் காமெடி, ஆக்‌ஷன் என்று சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி ஆக்‌ஷனாகவும் திரைக்கதை அமைத்திருக்கிறார். சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். கதாபாத்திரங்களை அருமையாக வேலை வாங்கியிருக்கிறார்.

அனிருத்தின் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். சுகுமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘காக்கி சட்டை’ கலர்புல் சட்டை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online