MENUMENU

3 வயதில் ஒருவேளை சோற்றுக்கே திண்டாட்டம்: 18 வயதில் உலகமே போற்றும் செஸ் சாம்பியன்- திரைப்படமாக எடுக்கும் மீரா நாயர்

fe78ea53-8fdb-4c47-9096-4f7a8ea95ca8_S_secvpfஉகாண்டா நாட்டில் குடிசைப்பகுதியில் பிறந்தவர் பியோனா முட்டேசி. பிறந்து 3 வயதை எட்டிய நிலையில் தனது தந்தையை இழந்தார். இதனால் ஒரு வேளை சோறு கூட கிடைக்காமல் அவதிப்பட்டார். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பது கூட இவருக்கும், அவரது தாய்க்கும் சவாலாக இருந்தது.

ஆறு வயது இருக்கும்போது கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஒரு நாள் கம்பாலா அருகே உள்ள சர்ச் ஒன்றில்தான் இந்த செஸ் விளையாட்டை கண்டுபிடித்தார். அதாவது கடந்த 2005-ம் ஆண்டு சோல்ஜர், பிஷப், குதிரை மற்றும் ராஜா ஆகியவை தனக்கு அறிமுகமானது குறித்து பியோனோ கூறுகையில், ‘‘அவற்றை காணும்போது எனக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. ஆனால் அன்று ஒருவேளை உணவுக்காக தான் நான் அங்கு சென்றேன்’’ என்றார்.

அங்கிருந்து வீட்டிற்கு திரும்பிய சில வாரங்களில் பியோனோவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அந்நாட்டில் வெளிநாட்டு மருத்துவர்கள்தான் 1970 ஆம் ஆண்டு வாக்கில் செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தியிருந்தனர்.

இன்று வரை அந்த விளையாட்டு பணக்காரர்களின் விளையாட்டாகவே இருந்து வருகிறது. எனினும் பியோனோவின் திறமை அவர்களுக்கு சவால் விடுவதாக அமைந்தது.

தனது திறமை குறித்து அவர் கூறுகையில், ‘‘செஸ் போட்டியை நான் விரும்புவதற்கு காரணம், அது திட்டமிடுதலை அடிப்படையாக கொண்டது. நீங்கள் சரியாக திட்டமிடவில்லை என்றால், உங்கள் வாழ்க்கை இறுதி நாட்களில் மோசமான நிலைக்கு சென்றுவிடும்’’ என்றார். பியோனோவின் வாழ்க்கையை டிம் கிராத்தர்ஸ் என்ற எழுத்தாளர் “குயின் ஆப் காத்வே” என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இம்மாத இறுதியில் இந்த நாவல் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.

இப்படத்தை மீரா நாயர் இயக்குகிறார். உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பியோனோவின் பயிற்சியாளரும், வழிகாட்டியுமான ராபர்ட் கடாண்டே கூறுகையில், பத்து வருடங்களுக்கு முன் அழுக்கான உடையணிந்து பியோனோ என்னை சந்தித்தாள்.

அதே சமயம் வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிக்க வேண்டும் என்ற உறுதியை அவள் கொண்டிருந்தாள் என்று கூறினார். கடாண்டே கம்பலாவில் செஸ் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். அதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர் செஸ் விளையாட்டுக்கான பயிற்சியை அளித்து வருகிறார்.

செஸ் விளையாட்டில் பங்குபெற்ற இரண்டே வருடங்களில் அந்நாட்டு தேசிய பெண்கள் ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பியோனோ வென்றார். அடுத்த வருடமும் அப்பட்டத்தை அவர் தக்கவைத்து கொண்டார்.

பள்ளிகளில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் பெண் என்ற வரலாற்றை பியோனோ படைத்துள்ளதாக உகாண்டா செஸ் கூட்டமைப்பின் தலைவரான வியான்னே லுக்யா கூறினார்.

தனது முதல் சர்வதேச போட்டியாக தெற்கு சூடானில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கான சர்வதேச சிறுவர்கள் செஸ் போட்டியில் பியோனோ கலந்து கொண்டார்.

முதன் முதலாக வெளிநாடு சென்ற அன்றைய நாள்தான் எனக்கு அற்புதமான நாளாகும். அன்றுதான் முதன் முதலாக நான் ஓட்டலில் தூங்கினேன். அப்போட்டியில் நாங்கள் கோப்பையை வென்று திரும்பினோம் என பியோனோ மகிழ்ச்சி பொங்க கூறினார்.

அதன்பின் ரஷியாவின் சைபீரியாவில் நடைபெற்ற போட்டி. துருக்கியில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடியுள்ளார் பியோனோ. நார்வேயில் கடந்த வருடம் உலக செஸ் கூட்டமைப்பு பெண்கள் பிரிவின் செஸ் மாஸ்டராக பியோனோவை அறிவித்துள்ளது. அடுத்த வருடம் அஜர்பைஜானில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டிகளிலும் பியோனோ பங்கேற்க உள்ளார்.

தனது கதாநாயகனும், ரஷ்யாவின் முன்னாள் உலக சாம்பியனும் ஆன கேரி காஸ்பரோவை எதிர்த்து பியோனோ விளையாடியுள்ளார். செஸ்சில் கூட பெண்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் ஆண்களை ஏன் பெண்கள் வெல்ல முடியாது என்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் நிச்சயமாக எவரையும் வெல்ல முடியும் என்று கூறும் பியோனோ தனது அடுத்த இலக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதே என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online