MENUMENU

இவனுக்கு தண்ணில கண்டம் – திரை விமர்சனம்

da9d7aeb-bc2b-42ea-b417-e7ccfadccf18_S_secvpfநாயகன் தீபக் சேலத்தில் லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய திறமையை அறிந்த அந்த ஊர் பெரியவர், இவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.

சென்னைக்கு வரும் தீபக், அங்கு தனது ஊர் நண்பர்களான செண்ட்ராயன் மற்றும் குமரவேல் ஆகியோருடன் சேர்ந்து தங்குகிறார். இதில் குமரவேல் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவர் மூலமாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தீபக் வேலையில் சேருகிறார்.

இவருக்கு சிறிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகளே கிடைக்கிறது. பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆசைப்படும் தீபக்கிற்கு அப்படி வாய்ப்பு வந்து, அது வேறொருவரால் தட்டிபறிக்கப்படுகிறது. இதனால் மிகுந்த விரக்தியடைந்த தீபக். வேலை மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார் தீபக்.

இதற்கிடையில், தீபக்கின் அம்மா ஊரில் மிகப்பெரிய பணக்கார பெண்ணை அவருக்கு திருமணம் செய்ய பேசி முடித்திருப்பதாகவும், அவனை உடனடியாக ஊருக்கு வருமாறும் அழைக்கிறார்.

பணக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்டால், அவள் மூலமாக வரும் சொத்தில் சொந்தமாக டிவி சேனல் ஆரம்பிக்கலாம் என்ற ஆசையில் ஊருக்கு திரும்பி வருகிறார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.

திருமணத்திற்காக கந்து வட்டிக்கு ரூ.5 லட்சம் வாங்கி செலவு செய்கிறார். திருமணத்தன்று அந்த பெண் வேறு ஒருவனுடன் ஊரைவிட்டு ஓடிவிடுகிறாள். இதனால் தீபக்கின் திருமண வாழ்க்கையும், அவருடைய கனவும் தகர்ந்து போகிறது.

மேலும், ரூ.5 லட்சம் கடனாளியாகவும் ஆகிவிடுகிறார். கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர் தீபக்கை தொந்தரவு செய்ய ஆரம்பிக்கிறார். இதனால் தீபக் மேலும் விரக்தியடைகிறார்.

விரக்தியுடன் சென்னை திரும்பும் தீபக், பஸ்ஸில் நாயகி நேகாவை பார்க்கிறார். அவளிடம் முதலில் நட்பாக பழகும் தீபக், அவள் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறார். ஒருநாள் நேகாவை வேறு ஒருவனுடன் ஓட்டலில் பார்க்கிறார் தீபக்.

பின்னர் அவளுக்கு போன் செய்கிறார். அவளோ ‘நான் கோவிலில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்’ என்று கூறி போனை துண்டிக்கிறாள். அவள் தன்னை ஏமாற்றுகிறாள் என்று மேலும் வேதனையடைகிறார்.

இப்படியாக பல பிரச்சனைகளும் சூழ்ந்திருக்க ஒருநாள் சரக்கடித்துவிட்டு பாரில் பிரச்சினை செய்கிறார். விழித்துப் பார்த்தால் தீபக்கும் இவரது நண்பர்களும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்கள். இரவு என்ன நடந்தது என்பது தெரியாமல் வழக்கம்போல் வாழ்க்கையை தொடங்க ஆரம்பிக்கின்றனர்.

அப்போது தீபக் எதிரிகளாக நினைக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளரும், வட்டிக்காரனும் அடுத்தடுத்து இறக்கின்றனர். அவர்களுடைய சாவுக்கு பிறகு மர்ம நபர் போன் செய்து ‘நீ சொன்ன மாதிரியே கொலை பண்ணிட்டேன்’ என்று தகவல் சொல்லவும் தீபக் அதிர்ச்சியடைகிறார்.

யார் அந்த கொலைகளை செய்தது? என்பது தெரியாமல் விழிக்கிறார். அந்த மர்ம நபரின் லிஸ்டில் அடுத்ததாக இருப்பது தனது காதலி நேகா என்பதை அறிந்ததும் அவளை காப்பாற்ற நினைக்கிறார்.

இறுதியில், தீபக் அந்த கொலைகாரனை கண்டுபிடித்தாரா? அவர் எதற்காக இவர்களை கொலை செய்கிறார் என்பதை அறிந்தாரா? தனது காதலியை அவனிடமிருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் தீபக்குக்கு இது பேர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்தில் தீபக்கின் கதாபாத்திரம் அவருக்கு பழக்கமானதுதான் என்பதாலோ என்னவோ, ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். கதாநாயகி நேகாவும் தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் மொட்டை ராஜேந்திரன். இவர் என்ட்ரியிலேயே, ‘டேய் என்னோட எண்ட்ரி டெரர்தாண்டா, இடையிலதான் காமெடியனா ஆயிட்டேன்.

மறுபடியும் களத்தில இறங்குறேன்னு’ சொன்னதும் நமக்கு சிரிப்புதான் வருகிறது. அதிலும் குறிப்பாக, குளிக்கும் பெண் தவறவிடும் சோப்பை எடுக்க இவர் வழிகாட்டும் காட்சி சிரிப்பு மழையில் வயிற்றை பதம் பார்க்கிறது. இவருடைய குரலிலும், முகபாவணையிலும் சிக்சர் மழையாக வெளுத்து வாங்கியிருக்கிறார்.

இவரோடு, தீபக்கின் நண்பர்களாக வரும் செண்ட்ராயனும், குமரவேலுவும் கிடைக்கிற இடத்தில் தங்களது காமெடி வெடியையும் கொளுத்தி போட்டுள்ளார்கள்.

படத்தில் இன்னொரு காமெடியனாக வரும் சுவாமிநாதனும் தன் பங்குக்கு காமெடி பண்ணியிருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

குடியை பற்றி படம் எடுத்தாலும் படத்தில் ஒரேயொரு டாஸ்மாக் காட்சியை வைத்திருக்கும் இயக்குனர் சக்திவேலை பாராட்டலாம். குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்வதோடு, அது எப்படியெல்லாம் கெடுக்கும் என்பதை காமெடி சரக்கு கலந்து நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு சரண், திலீப், பிரசன்னா ஆகிய மூன்று பேரும் இசையமைத்திருக்கிறார்கள். இவர்களுடைய இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை அசத்தல். ஆர்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு அழகாக ரசிக்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ காமெடி சரக்கு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online