MENUMENU

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னன் ரகுவரன்: மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த சாதனை சிகரம்

1082261e-04e6-431a-ab21-cefddd08c120_S_secvpfதமிழ் திரையுலகின் முடிசூடா மன்னன் ரகுவரனின் 7-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் மறைந்த இந்த தினத்தில் அவரைப் பற்றிய நினைவாக இந்த சிறப்பு கட்டுரையை வெளியிடுவதில் மாலைமலர்.காம் பெருமை கொள்கிறது.

கடவுளின் தேசத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கலையுலகில் மிகப் பிரகாசமாக வருவார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்து ரசிகர்களை கவர்ந்து தன்னிகரற்று விளங்கியவர் நடிகர் ரகுவரன்.

ஏழாவது மனிதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவரின் சாதனை பயணம், 1986 ஆம் ஆண்டு வெளியான விசுவின் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர ஆரம்பித்தது. இப்படத்தில் நடுத்தர குடும்பத்தில் சுயநலத்தோடு வாழும் இளைஞரை அப்பட்டமாக பிரதிபலித்து கைதட்டல்களை அள்ளியவர்.

அடுத்த ஆண்டில் ஊர்க்காவலன், மனிதன், பூவிழி வாசலிலே ஆகிய படங்களில் வில்லனாகவும், அதே சமயம் மைக்கேல்ராஜ், கூட்டுப்புழுக்கள், கவிதை பாட நேரமில்லை ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தினார்.

ஒரே சமயத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் மாறி மாறி நடித்து வெற்றி பெற்றவர் என்று பார்த்தால் அதில் ரகுவரனுக்கு தான் முதலிடம். தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படத்தில் நல்ல கணவர் வேடம்.

1988 ஆம் ஆண்டில் கதாநாயகனாக 5 படங்களிலும், வில்லனாக 2 படங்களிலும் நடித்திருந்தார். அடுத்து 1989 ஆம் ஆண்டு முழுவதும் முழு நேர வில்லனாக நடித்தார்.

ரஜினியின் சிவா, ராஜா சின்ன ரோஜா ஆகிய படங்களில் மிகச்சிறந்த வில்லனாகவும், தெலுங்கு மற்றும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான உதயம் படத்திலும் வில்லனாக நடித்து தாதாக்கள் அனைவரும் இவரை போல் தான் இருப்பார்களோ என யோசிக்க வைத்தவர்.

1990-ல் சிவசங்கரி எழுதிய ‘ஒரு மனிதனின் கதை’ என்ற நாவல் ‘தியாகு’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.

இப்படத்தில் குடியால் ஒரு மனிதனின் வாழ்க்கை எந்தளவுக்கு சீரழிகிறது என்பதை தனது நடிப்பால் திரையில் அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் ரகுவரன். இதே நாவல் துர்தர்ஷனில் நாடகமாகவும் வெளிவந்தது. அதுவும் ரகுவரனுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதே ஆண்டு மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் கதாநாயகனாகவும், புரியாத புதிர் மற்றும் பகலில் பவுர்ணமி ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து வெற்றி கொடி நாட்டினார்.

தொடர்ந்து 1995-ல் பாட்ஷா திரைப்படத்தில் ‘ஆண்டனி’ என்ற பெயரில் உண்மையான மும்பை தாதாவை பிரதிபலித்தார். ரகுவரனுக்கு மிகப்பெரிய பலம் அவரது குரல் வளம். அதில் சின்ன சின்ன மாற்றங்களை செய்து அசாத்தியமாக கதாநாயகன்களை ஓரங்கட்டிவிடுவார்.

அவருடன் நடிப்பில் மோதிய ஹீரோக்களில் ரஜினிக்கு முதலிடம். ரஜினியின் பல படங்களில் வில்லனாக நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவருக்கு எதிராக சவாலாக நடித்து ஓவர்டேக் செய்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

எதிர்த்து நடிப்பவர்கள் சவாலாக நடித்தால் தான், நாமும் சவாலாக நடிப்பை தர முடியும். இப்படிப்பட்ட அசாத்திய திறமை ரகுவரனிடம் இருந்ததால் தான் ரஜினியின் பல படங்களில் அவர் வில்லனாக நடிக்க முடிந்தது.

1997 ஆம் ஆண்டு ரகுவரனுக்கு சிறப்பாக ஆண்டு என்றே சொல்லாம். முதல் தலைமுறை நடிகரான ரஜினியுடன் நடித்தவர், இந்த வருடத்தில் இருந்து இளைய தலைமுறை நடிகர்களோடு இணைய ஆரம்பித்தார். அந்த ஆண்டில் ரஜினியின் அருணாச்சலம் படத்தில் வில்லன். லவ் டுடே படத்தில் இளைய தளபதி விஜய்க்கு தந்தையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதே ஆண்டு மீண்டும் விஜய் மற்றும் சூர்யாவுடன் சேர்ந்து நேருக்கு நேர் படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து அசத்தினார்.

1998-ல் துள்ளித்திரிந்த காலம் திரைப்படத்தில் ரெயில் டிரைவராகவும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தந்தையாகவும் நடித்து மகன் கரணுடன் வார்த்தைப்போர் நடத்துவார். காதல் தொடர்பான வசனக் காட்சிகளில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் வார்த்தை யுத்தம் பிரமாதம்.

1999 ஆம் ஆண்டு அமர்க்களம் படத்தில் வில்லன். ஆர்ப்பாட்டமில்லாத வில்லனாக நடித்து ஸ்கோர் செய்வதற்கு தனித்திறமை வேண்டும். அந்த திறமை ரகுவரனிடம் மிக அதிகமாகவே உண்டு. கிளைமாக்சில் அஜித்திடம் கண்ணடித்து இருவரும் ஒன்றாக சேர்ந்து வில்லனை வீழ்த்தியது சூப்பர்.

இதில் சூப்பர் என்றால் முதல்வன் படத்தில் அவரது நடிப்பு சூப்பரோ சூப்பர். முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டு பதவிக்காக சாதி மோதல்களையும், தொண்டர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் ஒரிஜினல் அரசியல்வாதியாகவே மாறியிருப்பார். அதிலும் அர்ஜுன் அவரை பேட்டி காணும் இடத்தில்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

என்ற குறளை ரகுவரன் உச்சரிக்கும் பாங்கும், அர்ஜுனுக்கு சவால் விடும் காட்சியிலும் அக்மார்க் அரசியல்வாதியாக காட்சி தருகிறார். இப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருதை பெற்று சாதனை படைத்தார் ரகுவரன்.

அடுத்து 2000-ம் ஆண்டில் முகவரி படத்தில் அஜித்துக்கு அண்ணணாக நடித்தார். அடடா நமக்கும் இப்படி ஒரு அண்ணன் கிடைக்கவில்லையே என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு நடித்திருப்பார். குறிப்பாக சீட்டு குலுக்கி போடும் காட்சியில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2002-ல் ரன் படத்தில் மாதவனின் மாமாவாக நடித்து, நடிப்பில் மாஸ் என்பதை நிரூபித்தார். மைத்துனர் காதலிப்பது மனைவிக்கு தெரியவேண்டாம் என்று கூறும் காட்சிகளில் அட…அடடடா… போட வைப்பார்.

2007-ல் மருதமலை படத்தில் தேர்தல் அதிகாரியாகவும், 2008-ல் 3வது தலைமுறை நடிகரான தனுஷின் தந்தையாகவும் நடித்து அசத்திய ரகுவரன் நடிப்புலகின் சிகரம் என்று சொன்னால் அது மிகையல்ல. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆனால் அவரது இடத்தில் பாதியையாவது நிரப்பும் ஒருவர் வருவது தான் தமிழ் சினிமாவிற்கும், ரகுவரனுக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும்…

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online