MENUMENU

ஆயா வட சுட்ட கதை – திரை விமர்சனம்

bfc516cf-2f77-4cf4-9fec-8551f755e865_S_secvpfசென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பேப்பர் போடும் நாயகன் அவிதேஜ், வாட்ச் மேன் மகன், இஸ்திரி செய்பவரின் மகன், ஆகிய மூவரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். அதே குடியிருப்பில் நாயகி சுபர்ணாவும் வசித்து வருகிறார்.

இவர்கள் இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சாய் பிரசாத் தலைமையிலான போதை மருந்து விற்கும் கும்பல் வந்து தங்குகிறது. இவர்கள், ஆரம்பத்திலேயே நாயகன் மற்றும் அவரது நண்பர்களை முறைத்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில், ஒருநாள் போதை மருந்து கும்பலுக்குள் ஒரு பிரச்சினை வருகிறது. அப்போது, இவர்களது காரை வேறு இடத்தில் நிறுத்தச் சொல்ல வரும் வாட்ச் மேனை சாய்பிரசாத் கோபத்தில் அடித்து விடுகிறார்.

இதனால் ஏற்கெனவே, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் வாட்ச் மேனின் உடல்நிலை மேலும் மோசடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்.

அவரது வைத்தியச் செலவுக்கு அதிக பணம் தேவைப்படுவதால், அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீடாக சென்று பணம் வசூலிக்கிறார் வாட்ச் மேனின் மகன்.

அப்போது, சாய் பிரசாத்தின் வீட்டுக்கும் செல்ல முடிவெடுக்கும் அவனுக்கு, அவன்தான் தனது அப்பாவை அடித்தது என்று தெரிய வருகிறது. தனது அப்பாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய போதை மருந்து கும்பலை நாயகனுடன் இணைந்து பழிதீர்க்க பார்க்கிறார்.

அப்போது, சாய் பிரசாத் வசம் அதிக பணம் இருப்பதை அறியும், நாயகன் மற்றும் நண்பர்கள் அவனிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து, வைத்திய செலவுக்கு எடுத்து கொள்ளலாம் என முடிவெடுக்கின்றனர்.

அதேவேளையில், அந்த குடியிருப்பில் வசிக்கும் பணத்தாசை பிடித்த போலீஸ் ஆபிசரான மனோகருக்கும் இவர்கள் கொள்ளையடிக்கப் போகும் சம்பவம் தெரிய வருகிறது. அவர், நாயகன் மற்றும் அவர்களது நண்பர்களை பின்தொடர்கிறார். இறுதியில், அந்த போதை மருந்து கும்பல் பிடிபட்டதா? பணம் யார் கைக்கு வந்தது? என்பதே மீதிக்கதை.

ஹீரோவாக வரும் அவிதேஜுக்கு ஹீரோவுக்குண்டான முகத்தோற்றம் இருந்தாலும், நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.

இவருடைய நண்பர்களாக வருபவர்களும் ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களையெல்லாம்விட போதை கும்பல் தலைவனாக வரும் சாய்பிரசாத்தான் நம்மை வெகுவாக கவர்கிறார்.

முரட்டுத்தனமான கெட்டப்பில் வந்து, நாங்கள் ஐடியில் வேலை செய்கிறோம் என்று இவர் பேசும் தோரணையே நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது. இவருடைய கூட்டாளிகளும் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல், பணத்தாசை பிடித்த இன்ஸ்பெக்டராக வரும் மனோகரனும் பார்வையிலும், பேச்சு தோரணையிலும் நம்மை மிரட்டியிருக்கிறார்.

நாயகி சுபர்ணா படத்தின் முதல் பாதியில் இரண்டு காட்சி, பிற்பாதியில் இரண்டு காட்சிகள் என மின்னல் போல வந்து தலைகாட்டி விட்டு போயிருக்கிறார். இவருக்கான நடிப்பு என்பது மிகவும் குறைவே. இருந்தாலும் பார்க்க ரொம்பவும் அழகாகவே இருக்கிறார்.

நாம் சிறு வயதில் படித்த ஆயா வட சுட்ட கதையை புதிய வடிவில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதி ரொம்பவும் சீரியல் போல் செல்கிறது.

பிற்பாதியில், பணத்தை எடுக்க இளைஞர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஒருசில இடங்களில் இவரது திரைக்கதையும், வசனங்களும் அழகாக பளிச்சிடுகிறது. அது படம் முழுக்க இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சமீர்-ஷிவாவின் இசையில் இரண்டு பாடல்கள்தான் படத்தில் வருகின்றன. இரண்டும் பரவாயில்லை ரகம்தான் என்றாலும், வேத்ஷங்கரின் பின்னணி இசை ரொம்பவும் கவர்கிறது. பாலாஜியின் ஒளிப்பதிவும் சுமார் ரகம்தான்.

மொத்தத்தில் ‘ஆயா வட சுட்ட கதை’ ரசிக்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online