MENUMENU

காலகட்டம் – திரை விமர்சனம்

aa6c8731-38de-46e0-a430-96a554b7b002_S_secvpfமீனவரான பவனும், நடனக் கலைஞரான கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள். பவனுக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில், நண்பன் என்கிற முறையில் கோவிந்த் பவனின் வீட்டுக்கு அடிக்கடி போவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பவனின் வீட்டுக்கு எதிரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் ராஜேந்திரனுக்கு பவனின் மனைவி மீது ஒரு கண் இருக்கிறது.

ராஜேந்திரன் தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கும் பெண்கள், பணத்தை திருப்பித்தர தாமதமானால் அவர்களை மிரட்டி, அவர்களை அனுபவித்துக் கொள்ளும் ஆசாமியாக வலம் வருகிறார். இதன்படி, பவனின் மனைவியையும் தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்.

அதன்படி, பவனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கோவிந்துக்கும்-உமாவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக ராஜேந்திரன் பவனிடம் ஒரு புரளியை கிளப்பி விடுகிறார்.

பவனும் அதை தன் மனைவியிடமும், நண்பனிடம் நேரிடையாக கேட்க முடியாமல் பரிதவிக்கிறார். இதனால், மீன் பிடி தொழிலுக்கு போகாமல், குடியே கதியென்று கிடக்கிறார். இதனால் அவருடைய குடும்பத்தில் வறுமை தலைதூக்குகிறது.

சோற்றுக்குகூட வழியில்லாததால் ராஜேந்திரனிடம் வட்டிக்கு பணம் கேட்டு உமா செல்கிறாள். தன் திட்டம் நிறைவேறியதை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கும் ராஜேந்திரன் அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறான்.

ஆனால், அதற்கு இடம்கொடுக்காத உமா, அவனை அடித்து, அசிங்கப்படுத்திவிட்டு போய்விடுகிறாள். அவமானம் தாங்க முடியாத ராஜேந்திரன் தன்னை அவமானப்படுத்திய உமா நிம்மதியாக வாழக்கூடாது என்று முடிவு செய்கிறார்.

எனவே, கோவிந்தும்-உமாவும் நெருக்கமாக இருப்பதுபோன்ற போலி வீடியோ ஒன்றை தயார் செய்து, அதை பவனிடம் போட்டுக் காண்பிக்கிறார் ராஜேந்திரன்.

ஏற்கெனவே நண்பன் மீது கோபத்தில் இருக்கும் பவன், இதனால் மேலும் அவன்மீது கோபம் அடைகிறான். கோபத்தின் உச்சியில் கோவிந்தை அடித்து கொன்றுவிடுகிறான்.

அதன்பிறகு பவனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. பவன் சிறைக்கு சென்றதும் யாருமற்ற அனாதையான உமாவை ராஜேந்திரன் அடைந்தாரா? அல்லது சிறையில் இருந்து வெளியே வந்து பவன், ராஜேந்திரனின் சூழ்ச்சிகளை அறிந்து கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த பவன் முழுநேர கதாநாயகனாக ஏற்றிருக்கும் மற்றுமொரு படம். இப்படத்தில் இவருக்கு வலுவான கதாபாத்திரம்.

கதை இவரைச் சுற்றியே நகர்வதால், இவருடைய நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு இவருக்கு கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார். ஒரு மீனவராக நம் மனதில் எளிதில் பதிகிறார்.

பவனின் நண்பராக வரும் கோவிந்துக்கு சாதாரண கதாபாத்திரம்தான். அதையும் அவர் செவ்வனே செய்திருக்கிறார். நாயகிகளாக வரும் சத்யஸ்ரீ, உமாவுக்கு வலுவான கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் நான் கடவுள் ராஜேந்திரனின் ரகளைதான். மொட்டைத் தலையில் விக் வைத்துக் கொண்டு இவர் செய்யும் ரகளைகள் ரசிக்க வைக்கின்றன. கலர் கலரான உடை அணிந்து, கூலிங் கிளாஸ் அணிந்து இவர் போடும் ஆட்டங்களை பார்க்க முடியாவிட்டாலும், ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் பாஸ்கர் நட்பை பிரதானப்படுத்தி படமாக உருவாக்கியிருக்கிறார். சென்னையின் குடிசை பகுதியில் நடக்கும் சம்பவங்களை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார்.

தப்பான ஒருவனால், ஒரு அழகான குடும்பம் எப்படியெல்லாம் சீரழிகிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஆனால், படத்தில் நல்ல விஷயங்களை பிரதிபலிக்கும்படி எந்த கதாபாத்திரத்திரங்களையும் அமைக்காதது ரொம்பவும் வருத்தம்.

மகேந்திரன் இசையில் பச்சைக்கிளி பச்சைக்கிளி முனியம்மா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. எழில் அரசன் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.

மொத்தத்தில் ‘காலகட்டம்’ அடுத்த கட்டம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online