MENUMENU

நதிகள் நனைவதில்லை – திரை விமர்சனம்

5b1f1456-ffd1-4237-957f-843851ae4da1_S_secvpfவேலை இல்லா பட்டதாரி இளைஞனின் வாழ்க்கை போராட்டத்தை சித்தரிக்கும் ஜீவனுள்ள கதை.

எம்.காம் படிப்பில் கோல்டு மெடல் பெற்றவர் பிரணவ். திருமண வயது தங்கை, விதவை அக்காள், தந்தையுடன் வசிக்கிறார். கம்பெனிகளாய் ஏறி வேலை கேட்கிறார், கிடைக்கவில்லை. தந்தையும் அக்காவும் தண்டச்சோறு என திட்டி தீர்க்கின்றனர். ஆனால் தங்கை மட்டும் தாய்போல் பாசம் காட்டுகிறாள்.

ஒருநாள் பக்கத்து ஊரில் வசிக்கும் நாயகி ரிஷாவை நூலகம் ஒன்றில் சந்திக்கிறார் பிரணவ். பார்த்தவுடன் அவள்மீது காதல் வயப்படுகிறார். தனது காதலை அவளிடம் வெளிப்படுத்தி, அவளையும் காதல் செய்ய வைக்கிறார்.

இந்நிலையில், எதிர் வீட்டை விலைக்கு வாங்கி தாயுடன் வந்து குடியேறும் மோனிகாவும், பிரணவ் குடும்பத்தினரும் நெருக்கமாகிறார்கள். அப்போது நாயகனின் தங்கைக்கு திருமணம் நிச்சயமாகிறது. மாப்பிள்ளை வீட்டார் பெரிய தொகையை வரதட்சணையாக கேட்கின்றனர். அந்த பணத்தை ஏற்பாடு செய்ய தவிக்கிறார்கள்.

எல்லோருடைய கோபமும் வேலையில்லாமல் சுற்றும் பிரணவ் மேல் திரும்புகிறது. அவரை திட்டி தீர்க்கின்றனர். மோனிகாவோ அவர் மேல் பரிதாபபட்டு ஒரு தலையாய் காதலிக்கிறார்.

ஒருநாள் அந்த விபரீதம் நடக்கிறது. மோனிகா வீட்டில் திருடர்கள் நுழைகிறார்கள். தாய், மகளை கட்டிப்போடுகின்றனர். அங்கிருந்து வரும் அலறல் சத்தம் கேட்டு பிரணவ் அவளது வீட்டுக்கு விரைகிறார். திருடர்களுடன் சண்டை போடுகிறார். அப்போது பயங்கர விபத்து நிகழ்கிறது. அந்த விபத்தில் நாயகனுடைய வாழ்க்கையே சூனியமாகிறது. காதலி கைவிட்டு போகிறார். குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர்.

இதில் இருந்தெல்லாம் பிரணவ் மீண்டாரா? எந்த காதல் ஜெயித்தது என்பது கிளைமாக்ஸ்.

பிரணவ் வேலையற்ற பட்டதாரியாக விரக்தி காட்டுகிறார். பாசமற்ற தந்தையுடன் மோதி வெறுப்புணர்வு கொட்டுகிறார். காதலி இன்னொருவருடன் நிச்சயமாகி திருமண பத்திரிகை நீட்டும்போது உருகி கலங்க வைக்கிறார். ஆக்ஷனில் வேகம் காட்டியிருக்கிறார்.

மோனிகா கிராமத்து தேவதையாய் கொள்ளை அழகு… படம் முழுவதும் பாவாடை, தாவணியில் வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறார். இப்படியொரு தங்கை வேண்டும் என ஏங்க வைக்கிறார் கல்யாணி நாயர்.

தந்தையால் அவமானப்படுத்தப்படும் அண்ணன் மேல் கரிசனம் காட்டி நம்பிக்கை உணர்வுகளை ஊட்டி தேற்றும்போதெல்லாம் நெஞ்சில் இறங்குகிறார்.

நிஷா, காதல் துரோகியாய் மாறி வில்லத்தனம் காட்டுகிறார். பணம் பணம் என வரும் பாலாசிங் பாசமற்ற தந்தையாக வெறுப்பு அள்ளுகிறார். படம் முழுக்க நாயகனை திட்டுவதாகவே இவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது.

செந்தில், குண்டு கல்யாணம் ஆகியோர் சிறிது நேரம் வந்தாலும் ரகளை, மதுரை முத்து, டவுட் செந்தில் கூட்டணியின் காமெடி கலாட்டா தியேட்டரை குலுங்க வைக்கிறது. திருநங்கையாக வருபவரும் கவர்கிறார்.

கிராமத்து பின்னணியில் காதல், காமெடி ஆக்ஷன் கலவையில் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் நாஞ்சில் பி.சி. அன்பழகன். வேலையற்ற இளைஞனின் வலி நிறைந்த வாழ்வியலை உயிரோட்டமாக காட்சிப்படுத்தியமைக்காக அவருக்கு கைகுலுக்கலாம்.

இயல்பான வசனம் பேசக்கூடிய இடத்தில் கவிதைத்துவமான வசனங்கள் பேசுவது மட்டும் சற்று நெருடலாக இருக்கிறது.

சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் காதில் தேன் பாய்ச்சுகின்றன. ஜேசுதாஸ் குரலில் உன்னை நேத்து ராத்திரி பாடல் இதயம் வருடும் மெலடி ரகம். கார்த்திக் ராஜா கேமரா கன்னியாகுமரி மாவட்டத்தின் பச்சை பசேல் அழகை அள்ளுகிறது.

மொத்தத்தில் ‘நதிகள் நனைவதில்லை’ கண்களை நனைய வைக்கும்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online