‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’.
இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
முருகானந்த் இயக்கியுள்ள இப்படத்தை சந்தானம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
இவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
இனிமே இப்படித்தான் படத்திற்கு இசையமைத்தது குறித்து சந்தோஷ் தயாநிதி கூறும்போது, ‘இப்படம் எனக்கு முதல் படம். இந்தப் படத்தில் 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.
இந்தப் பாடல்களுக்கு புது சிங்கர்களை வைத்து பாட வைத்துள்ளேன். கானா பாலா ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளார். இந்தப் பாடல் சிறப்பாக வந்துள்ளது. மேலும் கானா வினோத் என்பவர் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
நான் ஏ.ஆர்.ரகுமானிடம் ‘கடல்’, ‘லிங்கா’, ‘மரியான்’ உள்ளிட்ட படங்களுக்கு உதவியாளராக பணியாற்றியுள்ளேன். ஏ.ஆர்.ரகுமானின் பட்டறையில் பணியாற்றியது இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இப்படத்தின் நாயகன் சந்தானம் நல்ல மனிதர்.
நான் இப்படத்திற்காக இசையமைத்த டியூன்களை அவரிடம் போட்டு காண்பிக்கும்போது, அவர் எந்த கரெக்சனும் சொல்லவில்லை. உடனே ஓகே சொல்லிவிட்டார்.
சந்தானத்திற்கு பிடித்ததுபோல் இப்படத்தின் பாடல்கள் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். இது ஆடியன்சுக்கு சம்மர் டீரிட்டாக இருக்கும். எனக்கு இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்த சந்தானத்திற்கு மிகவும் நன்றி’ என்றார்.
இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளன. ஆடியோ சிடியை ஆர்யா மற்றும் சிம்பு வெளியிட, உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொள்ள இருக்கிறார். அதுபோல் டிரைலரை இயக்குனர் சிவா மற்றும் இயக்குனர் ராஜேஷ் வெளியிட, கௌதம் மேனன் பெற்றுக்கொள்கிறார்.