‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்திற்கு பிறகு சந்தானம் மீண்டும் கதாநாயகனாக களமிறங்கியிருக்கும் படம் ‘இனிமே இப்படித்தான்’. இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களான சிம்பு, உதயநிதி, ஆர்யா ஆகியோர் கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்டனர்.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், இனிமேல் காமெடியனாக நான் நடிக்கப்போவதில்லை. நண்பர்களுக்காக மட்டுமே காமெடியனாக நடிப்பேன். மற்றபடி, இனிமேல் ஹீரோவாகவே நடிக்கப் போகிறேன் என்று பகிரங்கமாக தெரிவித்தார் சந்தானம். இந்த நிலையில், உதயநிதியும்-சந்தானமும் மீண்டும் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதாவது, சந்தானம் நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ படத்தை சந்தானமே தயாரித்துள்ளார். ஆனால், இப்படத்தை உதயநிதி தனது சொந்த நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடப் போவதாக செய்திகள் வந்துள்ளது. இதைத்தான் இருவரும் மீண்டும் இணைந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
உதயநிதி ஹீரோவாக நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’ ஆகிய மூன்று படங்களிலும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படங்கள் சந்தானம் காமெடிக்காவே பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.