வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் புதிய படம் ‘மாஸ்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வரும் 29-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த படத்திற்கு சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது. பொதுவாக திகில் படங்கள் என்றால் சென்சார் போர்டு ‘யுஏ’ சான்றிதழ்தான் வழங்கும். ஆனால், ‘மாஸ்’ குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் பார்க்கும் வகையில் இருப்பதால் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் தலைப்பு ‘மாஸ்’ என்று ஆங்கில எழுத்தில் இருப்பதால் படத்திற்கு வரிச்சலுகை கிடைக்காது. இது படக்குழுவினருக்கு சற்று வருத்தத்தை தரவே, ‘மாஸ்’ படத்திற்கு வரிச்சலுகையையும் பெற்றுவிட, படத்தின் தலைப்பை தமிழில் வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி படத்திற்கு ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ என்ற பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் மாசிலாமணி. அதை சுருக்கி இவரை மாஸ் என்று அனைவரும் அழைப்பார்களாம்.
அதனால்தான் படத்திற்கு ‘மாஸ்’ டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த முழுப்பெயரையும் படத்தின் தலைப்பாக வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாறிய தலைப்புடன் புதிய போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.