ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை பொறுப்பிலிருந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டி இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும், எனவே தனது அடுத்தகட்ட பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. படங்களை இயக்குவதை விட்டுவிட்டு, குழந்தைகளை பராமரித்தால் சந்தோஷப்படுவேன் என்று அவரது அப்பாவான ரஜினியும் கோச்சடையான் ஆடியோ வெளியீட்டின்போது அவருக்கு அறிவுரை வழங்கினார்.
அவரது பேச்சுக்கு மரியாதை கொடுக்கும்விதமாகவே தற்போது இந்த நிறுவனத்திலிருந்து சௌந்தர்யா விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு ‘லிங்கா’, ‘உத்தமவில்லன்’, ‘மாஸ்’ ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சில படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு உரிமையையும் வாங்கி வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.