நடிகர் சந்தானம் நடித்த இனிமே இப்படிதான் திரைப்படம் வருகிற 12–ந்தேதி வெளியாகிறது. இதையொட்டி இன்று மதுரைக்கு வந்த நடிகர் சந்தானம் ரசிகர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
எந்தவொரு நல்ல படமாக இருந்தாலும் மதுரையில் வெற்றி பெறும். மதுரை ரசிகர்கள் தான் ரசனை உள்ளவர்கள். மதுரையில் ரசிகர் மன்றங்கள் இருப்பதை எல்லா நடிகர்களும் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். அந்த வகையில் மதுரை அனைத்திலுமே சிறப்புடையது.
இப்போதுள்ள கால கட்டத்தில் முதல் இரண்டு வாரங்களில் தியேட்டரில் படங்கள் நல்ல முறையில் ஓடினாலும் வெற்றி படமாக அமைந்து விடுகிறது.
தயாரிப்பாளர்களுக்கும் லாபமாக இருக்கிறது. இன்றைக்கு ரசிகர்கள் கதையுடன் காமெடியையும் எதிர்பார்க்கிறார்கள். காமெடி நடிகர் கதா நாயகனாக உருவாகும்போது கதையுடன் காமெடியையும் எதிர்பார்க்கிறார்கள்.
அந்த வகையில் இனிமே இப்படிதான் என்ற படமும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முக்கிய கருவே ‘இருப்பதை வைத்து வாழ வேண்டும், இல்லாததை நினைத்து வருந்தக்கூடாது’ என்பதாகும்.
காமெடிக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. உதாரணத்திற்கு தற்போது காமெடியுடன் கலந்து வரும் பேய் படங்கள் வெற்றி பெற்று வருகிறது. எனவே இப்போதைய சூப்பர் ஸ்டார் பேயர்கள்தான்.
சினிமாவில் தயாரிப்பாளர்களாக இருப்பது ஒவ்வொரு இரவும் சரக்கு அடிக்கிற போது இனிமேல் இதை தொடக்கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் மறுநாள் மாலையில் மீண்டும் சரக்கு அடிப்பார்கள்.
இதுபோல தான் தயாரிப்பாளர்கள் முதல் படத்தை தயாரிக்கும்போது மீண்டும் படம் தயாரிக்க கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் மறுநாள் மீண்டும் படத்தை எடுப்பார்கள்.
வடிவேல் நடித்த எலி படத்துக்கும், என்னுடைய படத்துக்கும் போட்டியா? என்று கேட்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை. எது நல்ல படமோ அதை ரசிகர்கள் வெற்றிபெற செய்வார்கள். எனக்கும் அரசியல் ஈடுபாது எதுவும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் எதுவும் சொல்ல முடியாது.
நடிகர், நடிகைகள் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்காக நடிக்கும் விளம்பர படங்கள் பல விதிமுறைகள் உள்ளன. எனவே விளம்பர பொருட்கள் மீது ஏதேனும் தவறு இருந்தால் அதில் நடித்த நடிகர், நடிகைகளை குறை கூறக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.