தியேட்டர்களில் வசூல் மழை பொழிவதால் பேய் படங்களுக்கு மாறும் கதாநாயகர்கள்

c88de22d-71cc-4928-9378-176a7307fc1d_S_secvpfஇந்திய சினிமாவில், பேய் மற்றும் திகில் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வரிசை படங்களில் முதன்முதலாக பயமுறுத்திய இந்திய படம், ‘கும்நாம்.’

தமிழில், ‘யார் நீ,’ ‘அதே கண்கள்,’ ‘யார்,’ ‘13-ம் நம்பர் வீடு’ போன்ற திகில் படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. என்றாலும், இடைப்பட்ட காலத்தில் காதல் மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட படங்களே முக்கியத்துவம் பெற்றன.

பேய் மற்றும் திகில் படங்களை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில்தான் ‘மணிச்சித்ரதாள்’ என்ற மலையாள பேய் படம் வந்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தை சில மாற்றங்களுடன், ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் பி.வாசு கன்னடத்தில் படமாக்கினார். ‘ஆப்தமித்ரா’வுக்கு கர்நாடகாவில் அமோக வரவேற்பு கிடைத்தது.

அதுவே பின்னர் தமிழில், ‘சந்திரமுகி’யாக மாறியது. ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் நடித்து, பி.வாசு டைரக்டு செய்த ‘சந்திரமுகி,’ தமிழ் பட உலக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது.

இந்த படம், சென்னை சாந்தி தியேட்டரில், 800 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. இப்போதைய பேய் பட ‘சீசனுக்கு’ பிள்ளையார் சுழி போட்டது, ‘சந்திரமுகி’தான். திகிலுடன், கொஞ்சம் நகைச்சுவையும் கலந்தால் தியேட்டர்களில், ‘கல்லா’ கட்டலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது,

இந்த படம்தான். தொடர்ந்து, ‘பீட்சா,’ ‘யாமிருக்க பயமே,’ ‘டார்லிங்’ ஆகிய பேய் படங்கள் வெளியாகி மிரட்டியதுடன், தயாரிப்பாளர்களுக்கு லாபமும் சம்பாதித்துக் கொடுத்தன. ‘சந்திரமுகி’ பாணியில் திகிலும், நகைச்சுவையுமாக வந்து வெற்றி பெற்ற படம்தான், ‘காஞ்சனா.’ இதன் முதல் பாகத்தில், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.

ராகவா லாரன்ஸ், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ‘காஞ்சனா-2’ தயாரானது.

‘காஞ்சனா-1’ படத்தை விட, ‘காஞ்சனா-2’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனையை நிகழ்த்தியது. இதற்கிடையில், சுந்தர் சி. நடித்து டைரக்டு செய்த ‘அரண்மனை’ என்ற பேய் படமும் வந்து கலக்கியது.

அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘அரண்மனை-2’ படத்துக்கான வேலைகளில் சுந்தர் சி. ஈடுபட்டு இருக்கிறார். அருள்நிதி நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘டிமான்ட்டி காலனி’ என்ற பேய் படமும் தயாரிப்பாளருக்கு லாபகரமாக அமைந்தது.

பேய் படங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பும், வசூல் மழையும், கதாநாயகர்கள் மத்தியில் அதுபோன்ற திகில் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த், சரத்குமார், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், சூர்யா (‘மாசு’) ஆகியோர் பேய் படங்களில் நடித்து விட்டார்கள். அடுத்து, உதயநிதி ஸ்டாலின் ஒரு பேய் படத்தில் நடிக்க இருக்கிறார். சுந்தர் சி. டைரக்டு செய்யும் ‘அரண்மனை-2’ படத்தில், சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

கார்த்தி ‘காஸ்மோரா’ படத்தில் பேயாக நடிக்கிறார். இன்னும் சில கதாநாயகர்களின் கவனமும் பேய் படங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. இதனால், பெரும்பாலான டைரக்டர்கள் பேய் மற்றும் திகில் கதைகளை தேடி வருகிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries