MENUMENU

யாகாவாராயினும் நாகாக்க – திரை விமர்சனம்

Yagavarayinum Naa Kaakka (7)நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஆதிக்கு மூன்று பணக்கார நண்பர்கள். இவர்கள் அனைவரும் வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

கல்லூரி கடைசி தேர்வை எழுதினால், வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தில் கமிட் ஆகிவிடுவோம் என்று பயந்து கடைசி தேர்வை எழுதாமல் விட்டு விடுகிறார்கள். மறுதேர்வு எழுத 6 மாத காலம் ஆகும் என்பதால், அதற்குள் ஜாலியாக வாழ்க்கையை கழிக்க முடிவு செய்கிறார்கள்.

இந்த காலகட்டத்தில்தான் நாயகி நிக்கி கல்ராணியை ஆதி பார்க்கிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பின்பு காதலாக மாறுகிறது.

இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். ஜாலியாக சென்று கொண்டிருக்கும் ஆதியின் வாழ்க்கையில் ஒருநாள் அவரது நண்பர்கள் மூலமாக பிரச்சினை வருகிறது.

புது வருடப் பிறப்பின் போது ஆதியின் நண்பர்கள் மூன்று பேரும் ஒரு ஹோட்டலில் மது அருந்திக் கொண்டு இருக்கிறார்கள். போதை தலைக்கேறிய போது, அங்கு தனது ஆண் நண்பருடன் வரும் ரிச்சா பலோட்டை தங்களது செல்போனில் படம் எடுக்கிறார்கள்.

அவர்களிடம் ரிச்சா பலோட் தனது நண்பருடன் சென்று வாக்குவாதம் செய்ய, இறுதியில் ஆதியும் அந்த ஹோட்டலுக்கு வருகிறார்.

நண்பர்களிடம் பிரச்சினை செய்யும் ரிச்சா பலோட்டின் ஆண் நண்பரை, நண்பர்களுடன் இணைந்து அடித்து உதைக்கிறார் ஆதி. இந்த பிரச்சினை போலீசுக்கு செல்ல, ஹோட்டலுக்கு வரும் போலீஸ், ஆதியின் நண்பர்கள் பெரிய இடத்துப் பையன்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பேசி அனுப்பி விடுகின்றனர்.

தன்னையும், தன் ஆண் நண்பரையும் தாக்கியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ரிச்சா பலோட்டுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. அவர்களிடம் நேரடியாகவே தான் பெரிய இடத்து பெண் என்றும், உங்களை நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என்றும் எச்சரிக்கிறாள்.

அன்றிலிருந்து நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் பிரச்சினை வருகிறது. சாவுக்கு பயந்து அனைவரும் பயந்தோடுகிறார்கள்.

இறுதியில் இவர்களுக்கு வரும் பிரச்சினைக்கு காரணமானவர் யார்? அந்த பிரச்சினைகளிலிருந்து இருந்து அனைவரும் விடுபட்டார்களா? என்பதை பல்வேறு திருப்பங்களை வைத்து கூறியிருக்கிறார்கள்.

நடிகர் ஆதி, கதைக்கேற்ற தோரணை மற்றும் கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். மரணத்துக்காக பயந்து ஓடும் காட்சியில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் இவர் பேசும் வசனங்கள் செயற்கையாக இருக்கிறது. அதை மட்டும் குறைத்திருந்தால் ஓகேதான்.

நாயகி நிக்கி கல்ராணி, டாஸ்மாக் கடையில் சென்று கூலிங் பீர் கேட்பது, மெடிக்கல் ஷாப்பில் சென்று ஆணுறை கேட்பது என குறும்புக்கார பெண்ணாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.

பசுபதி, ‘ஆடுகளம்’ நரேன், நாசர் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆதியின், நண்பர்களாக வரும் மூவரும் சரியான தேர்வு. ரிச்சா பலோட் சில நிமிட காட்சிகளே வந்தாலும் அழகான நடிப்பு. மும்பையில் மிகப்பெரிய தாதாவாக வரும் முதலியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிதுன் சக்ரவர்த்தி அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

இயக்குனர் சத்யபிரபாஸ் ஒரு ஜாலியான ஆக்ஷன் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். இடைவேளை வரை கதையை கணிக்க முடியாமல் ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறார்.

இடைவேளைக்கு பிறகு படம் விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால், இந்த விறுவிறுப்புக்கு பாடல் இடைஞ்சலாக இருக்கிறது. இதை மட்டும் கவனித்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

பிரஷன் பிரவீன் ஷ்யாம் இசையில் பாடல்கள் மனதில் நிற்கின்றன. பின்னணி இசை சரவெடி. சண்முக சுந்திரத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ‘யாகாவாராயினும் நாகாக்க’ சபாஷ்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online