MENUMENU

பாலக்காட்டு மாதவன் – திரை விமர்சனம்

04-1430722434-palakkattu-madhavan-1-2-600விவேக், சோனியா அகர்வால் தம்பதியருக்கு இரு குழந்தைகள். பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தி வரும் இருவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள். தனது மனைவியைவிட குறைந்த சம்பளமே வாங்குவதால் விவேக், மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

இதனால் அந்த கம்பெனியில் இருந்து விலகி, வேறொரு கம்பெனியில் சேர்ந்து, தனது மனைவியைவிட அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதன்படி, கம்பெனி மேனேஜரான மனோபாலாவிடம் பிரச்சினை செய்து அந்த கம்பெனியிலிருந்து வெளியேறுகிறார்.

வெளியே வந்த விவேக், பல்வேறு வேலைகளை செய்கிறார். இருப்பினும், அவருக்கு எந்த வேலையும் செட்டாவதில்லை. இறுதியில், முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதான ஒரு பெண்ணை தத்தெடுத்து வளர்த்தால், மாதம் ரூ.25000 கொடுப்பதாக வரும் செய்தி, விவேக் காதுக்கு வருகிறது.

தனது மனைவி சம்பளத்தைவிட அது அதிகம் என்பதால், அந்த முதியோர் இல்லத்துக்கு சென்று வயதான பெண்ணான செம்மீன் ஷீலாவை தத்தெடுத்து தனது வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

தனது வீட்டுக்கு வந்த, அவரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் விவேக். அவர் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறார்.

விவேக் இதுபோல் நடந்துகொள்வது சோனியா அகர்வாலுக்கு பிடிப்பதில்லை. இதனால் விவேக்கும், சோனியா அகர்வாலுக்கும் அடிக்கடி சண்டை நடக்கிறது. மாதக் கடைசியில் பட்ஜெட் போட்டு பார்க்கும்போது, வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்திருப்பது தெரிய வருகிறது.

இதனால் செம்மீன் ஷீலாவை யாரிடமாவது கொண்டுபோய் சேர்த்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார் விவேக். மறுபுறம், விவேக்குக்கு இதுநாள் வரை தன்வீட்டில் அனைவர் மீதும் பாசம் காட்டிய ஷிலாவையும் பிரிய மனமில்லை.

இறுதியில் விவேக் தனது குடும்பத்தின் வருமானத்தை சரிக்கட்ட, செம்மீன் ஷீலாவை வேறொருவரிடம் கொண்டு போய் சேர்த்தாரா? அல்லது தன்னுடனே வைத்துக் கொண்டாரா? என்பதே மிதிக்கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு குடும்பப் பாங்கான படத்தில் முழுக்க முழுக்க காமெடி பண்ணியிருக்கிறார் விவேக். நகைச்சுவை படமாக இருந்தாலும், செண்டிமென்டிலும் ஒரு கை பார்த்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். விவேக்கின் வெற்றிப் பட வரிசையில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றியிருக்கும் சோனியா அகர்வால், குடும்பத்து பெண்ணாக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். மாடர்ன் உடையில் பார்த்து ரசித்தவரை, சுடிதார், சேலையில் பார்க்கும்போதும் அழகாக தெரிகிறார். பொறுப்பான குடும்ப தலைவியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும் பளிச்சிடுகிறார்.

செம்மீன் ஷீலா, அன்பான தாயாக அனைவரையும் கவர்கிறார். மேலும், படத்தில் மனோபாலா, நான் கடவுள் ராஜேந்திரன், செல்முருகன், இமான் அண்ணாச்சி, ஆர்த்தி, சுவாமிநாதன், பாண்டு, கிரேன் மனோகர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதால் படம் கலகலப்பாக நகர்கிறது.

மனிதனுக்கு பணம் அவசியமாக இருந்தாலும், அதைவிட பெரியவர்களின் அன்பு ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானது. இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற கருத்தை படம் மூலம் அனைவருக்கும் உணர்த்திய இயக்குனர் சந்திரமோஹனுக்கு பாராட்டுக்கள்.

அதேபோல், படத்தில் ஆங்காங்கே சமூகத்துக்கு தேவையான நல்ல விஷயங்களையும் காமெடியுடன் சொல்லி அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். கடைசி 15 நிமிட காட்சிகளில் அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.

செல்வராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் தெளிவாக பதிவாகியிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் காதுகளில் இடியாக விழுந்திருக்கிறது. பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘பாலக்காட்டு மாதவன்’ குடும்பங்களை கவர்வான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online