‘லிங்கா’ படத்திற்கு பிறகு ரஜினி, அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ‘அட்டக்கத்தி’ தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மட்டும் இன்னும் உறுதியாகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இப்படத்தில் ராதிகா ஆப்தே நடிக்கவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. இவர், ரஜினிக்கு ஜோடியாகத்தான் நடிக்கப் போகிறார் என்பதை உறுதியாக கூறாவிட்டாலும், இப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
இதுகுறித்து, ராதிகா ஆப்தேவிடம் கேட்டபோது, ரஜினி படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமாகவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த படம் குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதனால், ரஜினி படத்தில் யார் கதாநாயகி என்பது இன்னும் மர்மமாகவே இருந்து வருகிறது.
இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். ரஜினிக்கு வில்லனாக ஜே.டி.சக்கரவர்த்தி நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கின்றனர். மலேசியா, ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, பின்பு சென்னையில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.