MENUMENU

குரு சுக்ரன் – திரை விமர்சனம்

Guru_Sukran_Movie_stills_00004திருநெல்வேலி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு புதிய சப்-இன்ஸ்பெக்டராக வருகிறார் நாயகன் குரு. இவரும் அதே ஊரில் பெரிய செல்வந்தராக இருக்கும் சண்முகராஜனின் மகனான கமல்நாத்தும் ஒரே முகத்தோற்றத்துடன் இருக்கிறார்கள். இவர்களை பார்த்து அந்த ஊரில் உள்ள எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.

சுந்தரபாண்டியபுரம் போலீஸ் நிலையத்தில் உள்ள ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவரும் அந்த ஊர் மக்களுக்கு பயந்து நடுங்குகிறார்கள். ஆனால், சப்-இன்ஸ்பெக்டராக வந்த குரு மட்டும் தனி ஒரு ஆளாக நின்று, அந்த ஊரில் நடக்கும் தவறுகளை எல்லாம் தட்டிக் கேட்கிறார்.

ஒருகட்டத்தில் ஊரில் ரகளை செய்துகொண்டிருக்கும் கமல்நாத்தின் மீதும் இவரது நடவடிக்கை தொடர, குருவுக்கும் கமல்நாத்துக்கும் மோதல் வருகிறது.

கமல்நாத், வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இதனால் அவனை அவரது வீட்டில் உள்ள யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால், அதே ஊரில் வசிக்கும் சேட்டு பெண்ணான சாதனா இவரை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், கமல்நாத்தோ பெண் சகவாசமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார்.

மறுபக்கம் குருவும், கமல்நாத்தின் தங்கையான திரிபுராவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள். இது கமல்நாத்துக்கு தெரியவர, தனது தங்கையை கண்டிக்கிறார்.

இன்னொரு பக்கம் கமல்நாத்தை காதலிக்கும் விஷயம் சாதனாவின் அண்ணனுக்கு தெரிய வர அவளை கண்டித்து, சென்னைக்கு அனுப்பி, வேறொரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.

குருவை பிரிந்து வாடும் தங்கையின் முகத்தை பார்க்கும் கமல்நாதுக்கு, சாதனாவின் பிரிவு மனதை வாட்டுகிறது. அவளைத் தேடி சென்னைக்கு செல்கிறார்.

இதற்கிடையில், ஊரில் கமல்நாத்தின் தம்பி மர்மமான முறையில் இறக்கிறார். அவனை கொன்றது யார் என்று போலீஸ் விசாரணை செய்யும் வேளையில், அந்த கொலை பழி ஜெயிலில் இருந்து திரும்பி வந்த நரேன் மீது விழுகிறது. ஆனால், நரேனோ தான் அந்த கொலையை செய்யவில்லை என்று மறுக்கிறார்.

இறுதியில், கமல்நாத்தின் தம்பியை கொன்றது யார்? நரேன் மீது அந்த கொலை பழி விழ காரணம் என்ன? என்பதை விளக்கிக் கூறியிருக்கிறார்கள்.

குரு, கமல்நாத் என இரட்டையர்கள் தோன்றி நடித்திருக்கும் படம். இதில், குரு போலீஸ் அதிகாரியாகவும், கமல்நாத் பெற்றோருக்கு அடங்காத, நண்பர்களுடன் அரட்டையடிக்கும் இளைஞனாகவும் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் முதல் படம் என்பதால், கேமரா முன் நடிப்பதற்கு ரொம்பவுமே பயந்து நடுங்கியிருப்பதுபோல் தெரிகிறது.

இருவரும் நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்வதாகட்டும், ஆக்ரோஷமாக சண்டை போடுவதாகட்டும் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாததுபோல் நடித்திருப்பது நமக்கு வெறுப்பை வரவழைக்கிறது. கமல்நாத் பாடல் காட்சிகளில் நன்றாக நடனமாடியிருக்கிறார்.

கமல்நாத்தின் நண்பராக வரும் சென்ட்ராயன் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்கிறது. அதேபோல், ஏட்டாக வரும் சிங்கம்புலி தனது சகாக்களுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகளும் கலகலப்புக்கு கியாரண்டி.

ஆடுகளம் நரேன் வழக்கம்போல் ஊர் பெரிய மனிதராக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். சுதா சந்திரன், ஸ்ரீரஞ்சனி, சண்முகராஜன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஒரு ஊரில் நடக்கும் சொந்த பகையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார். இதில், தேவையில்லாமல் நிறைய காட்சிகளை புகுத்தி நம்மை குழப்பியிருக்கிறார்.

ஆரம்பம் முதல் இடைவெளி வரை படத்தில் கதையே இல்லாமல் நகர்வதுபோல் தெரிகிறது. இடைவேளைக்கு பிறகு படத்தின் வேகம் கொஞ்சம் சுமார் என்று சொல்லலாம்.

சந்தோஷ் சந்திரபோஸ் இசையில் டாஸ்மாக்கில் இடம்பெறும் பாடல் மட்டும் ஆட்டம் போட வைக்கிறது. மற்றபடி, எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். செல்லத்துரையின் ஒளிப்பதிவு காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழகாக படம் பிடித்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘குரு சுக்ரன்’ மனதில் பதியவில்லை

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online