MENUMENU

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க – திரை விமர்சனம்

VSOP-Movie-Overseas-Theater-List-696x465ஆர்யாவும், சந்தானமும் சிறு வயதிலிருந்தே நகையும் சதையுமாய் இணை பிரியாத நண்பர்களாய் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், சந்தானத்துக்கு பானுவுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அவளை பெண் பார்ப்பது முதல், கல்யாணம், முதல் இரவு வரை ஆர்யா கலாட்ட செய்து கலாய்க்கிறார்.

இவருடைய கலாட்டாவை நண்பன் சந்தானம் ரசித்தாலும், பானுவுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. அதனால், ஆர்யாவுடனான நட்பை கைவிடுமாறு சந்தானத்திடம் கூறுகிறாள். அப்படி ஆர்யாவுடன் நட்பை கைவிடாவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அதற்கு 6 மாத காலம் அவகாசம் தருகிறாள்.

மனைவிக்காக ஆர்யாவுடனான நட்பை கைகழுவ சந்தானம் முடிவெடுக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்து தங்களுடைய நட்பை கழட்டிவிட நினைப்பதுபோல், ஆர்யாவுக்கு அவனது வாழ்க்கையில் ஒரு பெண் வந்துவிட்டால் தன்னுடனான நட்பை கழட்டிவிட்டு விடுவான் என்று நினைத்து அவனுக்கு பெண் தேட முடிவெடுக்கிறார்.

திருமணத்தின் மீது ஆசையில்லாத ஆர்யா, சந்தானத்தின் முடிவுக்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும், பின்பு சம்மதம் தெரிவிக்கிறார். நயன்தாரா போன்று பெண் கேட்பதால், ஒரு திருமண தகவல் மையத்திற்கு சென்று பெண் பார்க்க போகின்றனர்.

அங்கு வேலை செய்யும் தமன்னா பார்த்ததும், நயன்தாரா மாதிரியான பெண் வேண்டும் என்ற கனவை விட்டுவிட்டு தமன்னா மீது காதல் கொள்கிறார். ஆனால், தமன்னாவோ ஆர்யாவின் காதலை ஏற்றுக் கொள்வதாயில்லை.

அவளை காதல் செய்ய ஒத்துக்கொள்ள வைக்க சந்தானமும், ஆர்யாவும் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால், தமன்னாவோ எதற்கும் மனமிறங்கவில்லை. இறுதியில், ஆர்யா தற்கொலை முயற்சிக்கும் துணிய, அதற்கும் தமன்னா எந்தவித ரியாக்சனும் காட்டாதது ஆர்யாவுக்குள் தமன்னா மீது வெறுப்பு வருகிறது.

இறுதியில் அவளை தனது மனதில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, அவளைவிட வேறு ஒரு அழகான பெண்ணை காதலிக்கப் போவதாக சபதம் போட்டுவிட்டு செல்கிறார். கடைசியில், ஆர்யாவின் காதலை தமன்னா புரிந்துகொண்டாரா? சந்தானம்-ஆர்யாவின் நட்பு பிரிந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஆர்யாவுக்கு இந்த படத்தில் மிகவும் அப்பாவித்தனமான கதாபாத்திரம். நண்பனுடன் சேர்ந்து அரட்டையடிப்பது, அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொள்வது என்பது இவருக்கு கைவந்த கலை. அதை இந்த படத்தில் ஆர்யா செவ்வனே செய்திருக்கிறார்.

ஆனால், தமன்னாவிடம் காதல் சொல்லும் காட்சிகளில் எல்லாம் இவர் பல்லை இழித்துக் கொண்டு நடித்ததுதான் ரசிக்கவும் முடியவில்லை. சிரிக்கவும் முடியவில்லை.

ஆர்யாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் சந்தானம் வருகிறார். இப்படத்தில் இவருக்கும் ஒரு ஜோடி. கலாய்ப்பது என்றாலே சந்தானதுக்கு அல்வா சாப்பிட்ட மாதிரிதான். அதுவும் இந்த படத்தில் எல்லை மீறி எல்லோரையும் கலாய்த்திருக்கிறார். ஒருசில காமெடிகள் ரசிக்க வைத்தாலும், நிறைய காமெடிகள் சலிப்பைத்தான் கொடுக்கின்றன.

தமன்னா, ஏதோ பொம்மைபோல் படத்தில் வந்து போயிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். காமெடி இவருக்கு சுத்தமாக எடுபடவில்லை. அதுவும் ராஜேஷ் மாதிரியான முழுநீள காமெடி படம் இயக்குனர்கள் படங்களில் நடிக்க இவர் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும்.

சந்தானத்தின் மனைவியாக வரும் பானு, நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிப்பு ஓகேதான் என்றாலும், அவருடைய முகத்தில் முந்தைய படங்களில் பார்த்த பொலிவு இல்லை என்பது வருத்தமே.

தமன்னாவின் தோழியாக வரும் வித்யூலேகாவை சந்தானம் கலாய்க்கும் காட்சிகளில் எல்லாம் விதவிதமாக முகத்தோற்றங்களை காட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

கருணாகரன் ஒருசில காட்சிகள்தான் வருகிறார். அவருக்கு வாய்ப்புகள் குறைவுதான். சிறப்புத் தோற்றத்தில் வரும் விஷாலை காமெடி போலீசாக மாற்றியிருக்கிறார்கள். இவர் வந்தாலாவது ஏதாவது சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவியாக வரும் ஷகிலா வரும் காட்சிகளில் தியேட்டர்களில் விசில் பறக்கிறது. ஒரேயொரு காட்சி மட்டும் வந்துவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டு சென்றுவிடுகிறார். நிறைய காட்சிகளை ஆர்யா-சந்தானமே படத்தில் ஆக்கிரமித்துக் கொண்டதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டார்.

இயக்குனர் ராஜேஷ், தனது முந்தைய படங்களின் சாயலிலேயே இந்த படத்தையும் எடுத்திருக்கிறார். பார்ட் 1, பார்ட் 2 என்று சொல்லும் அளவுக்கு ஒரேமாதிரியான கதையை எடுத்து ரசிகர்களை போரடிக்க வைத்திருக்கிறார்.

அதிலும், இந்த படத்தில் கலாய்க்கிறேன் என்று படத்தில் உள்ள மொத்த கதாபாத்திரங்களையும் எந்த நேரமும் கலாய்த்துக் கொண்டேயிருப்பது சிரிப்பை வரவழைப்பதற்கு பதிலாக வெறுப்பைத்தான் கொடுக்கின்றன.

குடி, குடியை கெடுக்கும் என்று டைட்டில் கார்டில் போட்டுவிட்டு, நண்பர்கள் சந்தோஷமாக இருந்தாலும் குடி, சோகத்தில் இருந்தாலும் குடி, மற்றவர்களிடம் பேசும்போதும் குடியை பற்றியே பேச்சு என படம் முழுக்க குடியை சம்பந்தப்படுத்தியே காட்சிகளை எடுத்திருப்பது நெருடலை கொடுக்கிறது.

டி.இமான் இசையில் ‘லக்கா மாட்டிக்கிச்சு’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘நான் ரொம்ப பிஸி’ ஆகிய பாடல்கள் ரசிக்க வைப்பதோடு, ஆட்டம் போடவும் வைக்கின்றன.

பின்னணி இசையிலும் டி.இமான் களைகட்டியிருக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கலர்புல்லாக இருக்கிறது. இவரது ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘வாசுவும் சரவணனும்’ மொக்க நண்பர்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online