ரஜினிகாந்தின் பழைய படபெயர்களை தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொள்ள கதாநாயகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே ரஜினியின் ‘பில்லா’ படபெயர் அஜீத் படத்துக்கு சூட்டப்பட்டது. ‘பில்லா-2’ படத்திலும் அவர் நடித்தார். இதுபோல், ரஜினியின் ‘மாப்பிள்ளை’ படத்தலைப்பு தனுஷ் படத்துக்கு வைக்கப்பட்டது.
‘நான் மகான் அல்ல’ என்ற பெயரை கார்த்தி தனது படத்துக்கு பயன்படுத்தினார். ‘முரட்டுக்காளை’ தலைப்பு சுந்தர். சி படத்தில் பயன்படுத்தப்பட்டது. ரஜினியின் ‘பாயும்புலி’ படத்தலைப்பில் விஷால் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில், ஜீவாவும் தனது படத்துக்கு ரஜினியின் ‘போக்கிரிராஜா’ தலைப்பை தற்போது வாங்கி உள்ளார்.
‘போக்கிரிராஜா’ படம் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1982-ல் வெளியானது. ஏவி. எம். நிறுவனம் தயாரித்தது.
“போக்கிரிக்கு போக்கிரி ராஜா, விடியவிடிய சொல்லித்தருவேன், வாடா என் மச்சீகளா…” போன்ற இனிமையான பாடல்களும் இடம்பெற்ற படம் அது. இந்த தலைப்பை கேட்டு ஜீவா உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்தையும், ஏவி.எம். நிறுவனத்தையும் அணுகினர்.
அவர்களும் ‘போக்கிரி ராஜா’ தலைப்பை பயன்படுத்த பெருந்தன்மையோடு அனுமதி அளித்தனர் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ஜீவா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
இன்னொரு கதாநாயகனாக சிபி நடிக்கிறார். ராம்பிரகாஷ் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் புதுச்சேரியில் தொடங்குகிறது.