பாயும் புலி – திரை விமர்சனம்

paayum-puliமதுரையில் பெரிய பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வரும் கும்பலுக்கு தலைவனாக பவானி என்பவன் செயல்படுகிறான்.

ஒருநாள் இந்த கும்பலை சுற்றி வளைக்கும் போலீசார், ஒருவனை என்கவுண்டர் செய்துவிடுகிறது. என்கவுன்டர் செய்த போலீசான ஹரிஷ் உத்தமனை அடையாளம் கண்டு அவரை நடு ரோட்டில் தீர்த்துக் கட்டுகிறது பவானி கும்பல்.

போலீஸ் மீது ரவுடி கும்பல் தனது கொலை வெறி தாக்குதலை நடத்தியதையடுத்து, அந்த கும்பலை ஒழிக்க ஒரு தனி டீமை போலீசார் உருவாக்குகின்றனர். இதற்கு பொறுப்பு அதிகாரியாக விஷால் நியமிக்கப்படுகிறார். திருச்சியில் பணியாற்றும் விஷால் இந்த ஸ்பெஷல் ஆபரேஷனுக்காக தனது சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார்.

மதுரையில் விஷால் குடும்பம் அப்பா, அம்மா, அண்ணன் சமுத்திரகனி என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறது. மதுரை வரும் விஷால், ரொம்பவும் பயந்த சுபாவம் கொண்ட காஜல் அகர்வாலை கண்டதும் காதல் வயப்படுகிறார்.

ஒருமுறை காஜல் அகர்வாலை கிண்டல் செய்த பவானி கும்பலை சேர்ந்த ஒருவனை விஷால் என்கவுன்டர் செய்கிறார். பவானியை குறிவைத்து என்கவுன்டர் நடந்து வருவதால், தான் சரணடையாமல் இருந்தால் தானும் என்கவுன்டர் செய்யப்படுவோம் என்று பயந்த பவானி, போலீசில் சரணடைகிறார். பின்னர், அவர் மீதான குற்றங்களுக்கு ஆதாரங்கள் இல்லாததால் விடுதலையாகிறார்.

அப்போது விஷால் போலீஸ் அதிகாரி என்பது தெரியாத காஜல் அகர்வால், விஷால் ஒருவனை கொலை செய்துவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்.

விஷால்தான் இந்த என்கவுன்டர்களை செய்துவருகிறார் என்று தெரிந்த பவானி, விஷாலை பழிவாங்க அவருடைய காதலியான காஜல் அகர்வாலை கடத்தி வைத்துக்கொண்டு, தன்னுடைய இடத்துக்கு வரவழைக்கிறார். அங்கு வரும் விஷால் பவானி கும்பலில் உள்ள அனைவரையும் அடித்து துவம்சம் செய்து என்கவுன்டரும் செய்கிறார்.

கடைசியில் பவானியையும் கொன்று மதுரையில் நடக்கும் கடத்தல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணுகிறார். அப்போது, பவானி தன்னை கொன்றுவிட்டால் மட்டும் ரவுடித்தனம் நின்றுவிடாது.

எனக்கும் மேல் ஒருத்தன் இருக்கிறான் என்று சொல்லிவிட்டு இறந்து போகிறார். அவன் பயத்தில் உளறுகிறான் என்று அப்போது எண்ணி அவனை சுட்டு கொன்று விடுகிறார் விஷால்.

பிறகு, அந்த கும்பலுக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய ஆள் ஒருவன் இருப்பதை அறிகிறார். அவன் யார் என்பதை விஷால் கண்டுபிடித்து ரவுடியிசத்தை ஒழித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

விஷால் இரண்டாவது முறையாக போலீஸ் வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் இது. ஆக்ஷன் ஹீரோவாக இவர் சண்டை போடும் காட்சிகள் எல்லாம் மிரட்டலாக இருக்கிறது.

போலீஸ் வேடம் என்றாலும், இவர் நிறைய காட்சிகளில் சாதாரண உடையிலேயே வலம் வந்திருக்கிறார். மற்றபடி, போலீஸுக்குண்டான மிடுக்குடன் கம்பீரமாக இருக்கிறார். காஜல் அகர்வாலுடனான ரொமான்ஸ் காட்சியிலும் அசர வைக்கிறார்.

காஜல் அகர்வால் ரொம்பவும் பயந்த சுபாவம் கொண்டவராக நடித்திருக்கிறார். அவருக்கு இந்த கதாபாத்திரம் ரொம்பவுமே பொருந்தியிருக்கிறது. சாலையை கடக்கும்போதுகூட பயத்தில் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு பயந்து நடுங்கும் இவரது நடிப்பு பலே.

விஷாலின் அண்ணனாக வரும் சமுத்திரகனி, சாந்தமானவராகவும், ஆக்ரோஷமானவராகவும் வருகிறார். பிற்பாதியில் இவரை வைத்துத்தான் படத்தின் கதை முழுவதும் நகர்கிறது. இவருடைய கதாபாத்திரத்தில் இயக்குனர் ஒரு டுவிஸ்ட் வைத்திருப்பதும் சிறப்பு.

கான்ஸ்டபிளாக வரும் சூரி வரும் காட்சிகளில் கலகலப்பு குறைவுதான். ஹரிஷ் உத்தமன், ஆனந்த்ராஜ், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா என படத்தில் நிறைய பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

போலீஸ் மீது கை வைத்தால், ஒருவன் என்ன நிலைமைக்கு ஆளாவான் என்பதை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் சுசீந்திரன், இந்த படத்திலும் ஒரு புதுமையை புகுத்தியிருக்கிறார். சுசீந்திரனுக்கு போலீஸ் ஸ்டோரி கதை பண்ணுவது இதுதான் முதல்முறை என்றாலும், தனது முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

டி.இமான் இசையில் சிலுக்கு மரமே பாடல் துள்ளல் போட வைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக் காட்சிகளில் இவரது கேமரா சுழன்று சுழன்று விளையாடியிருக்கிறது.

மொத்தத்தில் ‘பாயும் புலி’ அசுர பாய்ச்சல்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online