MENUMENU

மாங்கா – திரை விமர்சனம்

premjiஆராய்ச்சியாளர் ஐன்ஸ்டீனை மானசீக குருவாக ஏற்று, ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை ராக்கெட் அனுப்பி அடைக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு முழுநேர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் பிரேம்ஜி அமரன்.

இவர் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கும் அனைத்தும், இவர் குடியிருக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது அவரது வீட்டுக்குள்ளும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால், அருகில் குடியிருப்பவர்கள் மட்டுமல்லாது, இவரது பெற்றோரும் அவரை அங்கிருந்து எப்படியாவது வெளியேற்ற பார்க்கிறார்கள்.

ஆனால், அந்த குடியிருப்பின் செகரட்டரியான மனோபாலா, அவரது ஆராய்ச்சிக்கு ஆதரவாக இருப்பதால், யாராலும் பிரேம்ஜியை வெளியேற்ற முடியவில்லை. இந்நிலையில், இவர் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு நாயகி அத்வைதா தனது அப்பாவுடன் குடிவருகிறாள்.

பிரேம்ஜியை பார்த்ததும், அவர் தனது பால்ய சிநேகிதன் என்பதை அறிந்துகொண்டு அவருடன் பழக ஆரம்பிக்கிறாள். நாளடைவில் அது காதலாக மாறுகிறது. ஆனால், பிரேம்ஜி தனது கவனம் முழுவதையும் ஆராய்ச்சிலேயே ஈடுபடுத்துவதால், காதல் மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.

ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். பின்னர், இருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

அதேநேரத்தில், பிரேம்ஜி ஆராய்ச்சியில் கண்டுபிடித்த ஒரு ராக்கெட்டை செலுத்த, அது இவரது ஆராய்ச்சிக்கு ஆதரவாக இருந்த மனோபாலாவை பதம் பார்க்கிறது. இதனால், பிரேம்ஜி ஆராய்ச்சிக்கு இருந்த ஒரே ஆதரவும் பறிபோகிறது. எனவே, அந்த குடியிருப்பில் இருந்து பிரேம்ஜியை வெளியேற்றுகின்றனர்.

விரக்தியில் வெளியேறும் பிரேம்ஜி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் நடந்து போகிறார். அப்போது, ஒரு போஸ்டர் அவரது கைக்கு கிடைக்கிறது. அதில், 30-க்கும் மேற்பட்டோர் இறந்துபோன ஒரு பாழடைந்த வீட்டில் தங்கினால், ஒரு குறிப்பிட்ட தொகை பரிசாக கிடைக்கும் என்று அச்சிப்பட்டிருக்கிறது.

தற்கொலை செய்துகொள்ள துணிந்துபோன பிரேம்ஜி அந்த வீட்டில் சென்று தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்கிறார். அந்த வீட்டில் சென்று பிரேம்ஜி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது மனம் மாறி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

இதுவரை பெரிய ஹீரோக்களுடன் இணைந்து காமெடி வேடங்களில் நடித்து வந்த பிரேம்ஜி, முழு ஹீரோவாக நடித்துள்ள படம். இப்படத்தில் இரு வேறு கெட்அப்புகளில் வந்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக பாகவதர் கெட்அப் இவருக்கு ரொம்பவுமே பொருந்தியிருக்கிறது.

ஆனால், இதுவரையிலான படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து காமெடி செய்து வந்த பிரேம்ஜியை ரசித்த நமக்கு, படம் முழுக்க இவர் செய்யும் காமெடியை ரசிக்க முடியவில்லை.

நாயகிகள் அத்வைதா, லீமா பாபு இருவரும் பார்க்க அழகாக இருக்கிறார்கள். நடிப்பிலும் ஓகேதான். பிரேம்ஜியின் பெற்றோர்களாக வரும் இளவரசு, ரேகா ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

மனோபாலா வரும் காட்சிகள் கலகலக்கிறது. டி.பி.கஜேந்திரன், தம்பி ராமையா, தென்னவன் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

விஞ்ஞானம் மற்றும் பாகவதர் காலம் என இரு வேறு காலகட்டங்களில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஆர்.எஸ்.ராஜா. ஆனால், திரைக்கதையை கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் இயக்கியிருப்பது சற்று சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிற்பாதியில், இடம்பெறும் வசனங்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது.

பிரேம்ஜியின் இசையில் பாடல்கள் எல்லாம் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை ஓகே ரகம்தான். மனோவின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘மாங்கா’ புளிப்பு அதிகம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online