ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தை இவருடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார்.
நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் 2 வாரங்களை கடந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளின் எண்ணிக்கையும், காட்சிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் இந்த படத்திற்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இப்படத்தின் மாபெரும் வெற்றியைக் கொண்டாட நினைத்த படக்குழுவினர், 1500 ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர். படக்குழுவினர் அனைவரும் தங்களது கைப்படவே அனைவருக்கும் விருந்து அளித்தனர்.
படத்தின் வெற்றி விழாவை பெரிய, பெரிய ஓட்டல்களில் விழா எடுத்துக் கொண்டாடுபவர்கள் மத்தியில், ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி தங்களது வெற்றியை தனி ஒருவன் படக்குழுவினர் கொண்டாடியது நெகிழ்ச்சியடைய வைக்கிறது.
இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அன்னதானம் வழங்கும் விழாவில், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.