MENUMENU

த்ரிஷா இல்லனா நயன்தாரா – திரை விமர்சனம்

Trisha-Illana-Nayanthara-52993_10590ஜி.வி.பிரகாஷ், மனிஷா யாதவ், ஆனந்தி இவர்கள் மூன்று பேரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள். இவர்களது குடும்பமும் ஒரே அபார்ட்மெண்டில்தான் வசிக்கின்றன. இவர்கள் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடையே இயல்பான நெருக்கம் ஏற்படுகிறது.

இந்த நெருக்கத்தின் விளைவு, அவர்களுக்குள் காதல் துளிர்விடுகிறது. அதுவும், நிலையான காதலாக இல்லாமல், மாறி மாறி காதல் வயப்படுகின்றனர். ஆனால், அதை யாரும் வெளியில் காட்டிக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிளஸ்-2 படிக்கும் சமயத்தில் மனிஷா யாதவ் வெளியூர் சென்றுவிடவே, ஆனந்தி-ஜி.வி.பிரகாஷ் இருவர் மட்டும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது, இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தி காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்கள்.

இந்நிலையில், ஒருநாள் இரண்டு பேரும் தனிமையில் தப்பு செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்த விஷயம் ஜி.வி. மூலமாக பள்ளி முழுவதும் தெரிந்துவிடுகிறது.

அதேநேரத்தில், ஆனந்தியின் அப்பாவுக்கு வெளியூருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கிறது. ஜி.வி.யை பிரியமுடியாத ஆனந்தி, தன்னால் வெளியூருக்கெல்லாம் வரமுடியாது என அப்பாவுடன் சண்டை போடுகிறாள்.

பின்னர், ஜி.வி.யும் தானும் நெருக்கமாக இருக்க முயற்சி செய்த விஷயம் பள்ளி முழுவதும் தெரிந்ததற்கு ஜி.வி.தான் காரணம் என்பதை அறிந்ததும், அவனை உதறி தள்ளிவிட்டு, அப்பாவுடன் வெளியூர் புறப்படுகிறாள்.

இவள் புறப்படும் சமயம் ஜி.வி.க்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது. அதில் பேசும், மனிஷா யாதவ் அவனை காதலிப்பதாக கூறுகிறாள்.

ஆனந்தியை பிரிந்த சோகம் மறைவதற்குள், மனிஷா யாதவிடமிருந்து இப்படி ஒரு ஆஃபர் கிடைத்த சந்தோஷத்தில், ஆனந்தியை உதறி தள்ளிவிட்டு, மனிஷா யாதவ்வை காதலிக்க தொடங்குகிறார். இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.

மனிஷா யாதவ் குடிக்கு அடிமையானவர். இது தெரிந்த ஜி.வி., அவளிடம் குடிக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகிறார். ஆனால், ஜி.வி.யின் பேச்சை கண்டுகொள்ளாத மனிஷா யாதவ், அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இரண்டாவது காதலும் பிரிந்த சோகத்தில் தனது சித்தப்பா வி.டி.வி. கணேஷின் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு செல்கிறார்.

அங்கு சென்றதும் தனது முன்னாள் காதலி ஆனந்தியை பார்க்கிறார். அவளிடம் சென்று தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படி கூறுகிறார்.

ஆனால், ஆனந்தியோ இவரது காதலை ஏற்றுக்கொள்வதாக இல்லை. கடைசியில், ஜி.வி.யின் சித்தப்பாவான வி.டிவி. கணேஷ், ஆனந்திக்கு ஒரு அத்தை இருப்பதாகவும் அவளிடம் சென்றால், உன்னுடைய காதலுக்கு உதவி கிடைக்கும் என்று ஆலோசனை கூறுகிறார்.

ஜி.வி.பிரகாஷும் ஆனந்தியின் அத்தையான சிம்ரனை தேடிச் சென்று தனது காதலுக்கு உதவி கேட்கிறார். இறுதியில், அவர் இவரது காதலுக்கு உதவி செய்து இருவரையும் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதை கலகல நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் தனது இரண்டாவது படத்திலேயே இவ்வளவு ஆழமான, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த முடியுமா? என்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

நடிப்பு, டான்ஸ் என அனைத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதேபோல், வசனங்கள் உச்சரிப்பிலும் கைதட்ட வைக்கிறார். அதேபோல், தனது பின்னணி இசையிலும், பாடல்களிலும் இளைஞர்களை துள்ளி ஆட்டம் போட வைத்திருக்கிறார்.

நாயகி ஆனந்தி, கண்களால் காதல் பேசி அனைவரையும் கவர்கிறார். இவருடைய நடிப்பு மெச்சும்படியாக இருக்கிறது. மனிஷா யாதவ், கவர்ச்சியில் கலங்கடித்திருக்கிறார். இவர் சரக்கடிப்பதும், ஆண்கள் சரக்கடித்துவிட்டு தன்னிடம் தப்பு செய்யக்கூடாது என்பதற்கு இவர் கூறும் விளக்கத்திற்கும் தியேட்டரில் விசில் பறக்கிறது.

விடிவி கணேஷ் படம் முழுவதும் போதை ஏற்றும் வசனங்களை பேசி சிரிக்க வைக்கிறார். சிம்ரன் கௌரவத் தோற்றத்தில் வந்தாலும் தனது பங்கிற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரோபோ சங்கர், லொள்ளு சபா மனோகர், யூகி சேது ஆகியோரும் படத்திற்கு பெரிய பலமாய் இருந்திருக்கிறார்கள்.

இன்றைய பெண்களின் மனநிலையையும், ஆண்களின் மனநிலையையும் படத்தில் புட்டு புட்டு வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இளைஞர்கள் எண்ணத்தை புரிந்துகொண்டு கூடுதலாக பலான விஷயங்களை சேர்த்து விருந்தாக கொடுத்திருக்கிறார்.

இப்படத்தில் நிறைய வசனங்கள் பச்சை பச்சையாக இருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. குடும்பத்துடன் சென்று ரசிக்க முடியாத படமாக கொடுத்திருக்கிறார். இருப்பினும், இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக இந்த படத்தை ரசிப்பார்கள்.

ஜி.வி. இசையில் ‘பிட்டு படம்டி’ பாடல் தியேட்டரில் இளைஞர்களை துள்ளி ஆட்டம் போட வைத்திருக்கிறது. மற்ற பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

பின்னணி இசையிலும் ஜி.வி.பிரகாஷ் ஸ்கோர் செய்திருக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிக்கும்படி செய்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ரெண்டுமே ருசிதான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online