கடைசியில், கார்த்திக், நாகார்ஜுன் நடிக்கும் படத்துக்கு தோழா என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறார்கள்.
பிவிபி சினிமாஸ் கார்த்திக், நாகார்ஜுன் இணைந்து நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்திற்குதான் கால்ஷீட் தந்துவிட்டு, பிறகு நடிக்க முடியாது என மறுத்தார் ஸ்ருதி. அவருக்குப் பதில் தமன்னா தற்போது நடித்து வருகிறார்.
இந்தப் படம் பிரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸ் படத்தை தழுவி எடுக்கப்படுகிறது. அதற்காக முறையாக அனுமதி பெற்றிருக்கிறார்கள்.
விபத்தில் கழுத்துக்குக்கீழ் செயலிழந்துபோன செல்வந்தர் ஒருவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இளைஞன் ஒருவனுக்கு வருகிறது. குற்றப்பின்னணி உள்ளவன் அந்த இளைஞன்.
ஆனால், அவனது உற்சாகமும், அணுகுமுறையும் செல்வந்தரை கவர்ந்துவிடுகிறது. அவரது வாழ்க்கையில் அதுவரை அப்படியொரு மகிழ்ச்சியை அனுபவித்ததில்லை. அவர்கள் இருவருக்குமான பிணைப்பை சொல்வதே இன் டச்சபிள்ஸ் படத்தின் கதை.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. இதே கதை 2011-இல், பியூட்டிஃபுல் என்ற பெயரில் மலையாளத்தில் வெளியானது.
தமிழில் இந்தப் படத்துக்கு தோழா என்று பெயர் வைத்துள்ளனர். நேற்று இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.