MENUMENU

குற்றம் கடிதல் – திரை விமர்சனம்

Kuttram-Kadithalகுற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை

(விளக்கம்: குற்றம் புரியாமல் இருப்பதையே நோக்கமாக கொள்ளவேண்டும். ஏனென்றால், குற்றம் பகையாக மாறும்)

திருவள்ளுவரின் இந்த இரண்டு அடி குறளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘குற்றம் கடிதல்’.

பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொள்கிறார்கள் நாயகன் சாய் ராஜ்குமாரும் நாயகி ராதிகா பிரசித்தாவும். ராதிகா ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். திருமணம் முடிந்து முதல் நாள் பள்ளிக்கு செல்கிறார். பக்கத்து வகுப்பு ஆசிரியை வெளியே சென்றுவிடுவதால், அந்த வகுப்புக்கு பாடம் எடுக்க செல்கிறார்.

அந்த வகுப்பில் இருக்கும் துறுதுறு மாணவன் அதே வகுப்பில் படிக்கும் சிறுமியின் பிறந்தநாளுக்கு முத்தம் கொடுத்தான் என்பதற்காக, அவனை கன்னத்தில் அறைந்து விடுகிறார்.

அறைந்ததும் மயக்கமாகி விழும் அந்த சிறுவனுக்கு, மூக்கில் இருந்து ரத்தம் வழிய, உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான். அங்கு அவர் கோமா நிலைக்கு சென்றுவிடுகிறான்.

இதன்பிறகு, அந்த சிறுவனின் உறவினர்கள், நாயகி, பள்ளி தலைமை இப்படி ஒவ்வொருவரும் எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

மாணவன் மயங்கி விழுந்த பிறகு, அவனுக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம். அதனால் இங்கிருந்து எஸ்கேப் ஆயிடுங்க என்று பள்ளி நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்படும் நாயகி ராதிகா பிரசித்தாவும், அவருக்கு துணையாக செல்லும் கணவரான நாயகன் சாய் ராஜ்குமாரும் படம் முழுக்க படுகிற பதற்றம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

படத்தில் அளந்து வைத்த மாதிரியான கதாபாத்திரங்களைத்தான் இயக்குனர் பிரம்மா தேர்வு செய்திருக்கிறார்.

அந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுந்திருப்பதில் பெரிய வெற்றி கண்டிருக்கிறார். அனைவரும் எந்த இடத்திலும் அளவு தாண்டாமல் அழுத்தமாக நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, டீச்சராக வரும் ராதிகா, தப்பு செய்துவிட்டோம், தப்பிக்க வேண்டும் என்று நினைக்காமல், குற்ற உணர்ச்சியால் அழுதுகொண்டே தவிக்கும் காட்சிகள் எல்லாம் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.

அதன்பின்னர் ரசிகர்களை கவர்ந்தவர் தோழர் நவகீதன். குற்றம் செய்தவன்தான் அந்த குற்றத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை துடிப்போடு இவர் நடித்திருக்கும் கதாபாத்திரம், ஆரம்பத்தில் கொதித்து எழுந்தாலும், மெல்ல மெல்ல சூழ்நிலையின் நியாயம் புரிந்து சாந்தமடைகிறார்.

அதேபோல், நாயகியை தேடி அவரது அம்மாவின் வீட்டுக்கு கோபத்தோடு செல்லும் இவர், பிரார்த்தனை முடியும்வரை வெளியில் காத்திருந்து, பின்னர், அவரிடம் சென்று உங்கள் மகளை எங்கே என்று மிரட்டுகிறார். அங்கே ஒரு மரியாதையுடனான மதநல்லிணக்கமும் வெளிப்படும்படி காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

அதேபோல், துறுதுறு மாணவனாக நடித்திருக்கும் மாஸ்டர் அஜய், சபாஷ் போட வைக்கிறான். அவனுடைய அம்மாவாக நடித்திருப்பவரின் மெலிந்த தேகமும், வறுமையின் தோற்றமும் நம்மை உருக வைக்கிறது.

தலைமையாசிரியரும், அவருடைய மனைவியாக வரும் ஆசிரியையும் எதார்த்தமான நடிப்பில் அசர வைத்திருக்கிறார்கள். மனிதாபிமானத்துக்கு எடுத்துக்காட்டாக இவர்களது கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பது சிறப்பு.

இந்த மாதிரி ஒரு பிரச்சினையை மீடியாக்கள் எப்படி மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது என்பதையும் இப்படத்தில் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம், ஷங்கர் ரங்கராஜனின் பின்னணி இசையும், பாடல்களும்தான். படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் கதையை ஒட்டியபடி அமைந்திருப்பது சிறப்பு. அதேபோல், ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒரு உணர்வை நம்முள் ஏற்படுத்தும்விதமாக அமைந்துள்ளது.

அதேபோல், மணிகண்டனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. வசனங்கள் இல்லாத இடங்களில் இவரது கேமரா கண்கள் நிறைய பேசியிருக்கிறது.

மொத்தத்தில் ‘குற்றம் கடிதல்’ பொறுப்பான கண்டிப்பு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online