தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். விஜய், அஜீத், சூர்யா உள்பட முன்னணி நாயகர்களுடன் நடித்து தமிழ் பட உலகிலும் நிலையான இடத்தில் இருக்கிறார். தெலுங்கிலும் பல படங்கள் கைவசம் உள்ளது. இந்தியிலும் நடிக்கிறார்.
விஜய்யுடன் நடித்த ‘புலி’ நாளை வெளிவருகிறது. அஜித்துடன் வேதாளம் படத்தில் நடித்திருக்கிறார். இவரது படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகி இருப்பதால் பட வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன. கை நிறைய படங்கள் இருந்தாலும் எனக்கு இசை மீது தான் ஆர்வம் என்கிறார் ஸ்ருதிஹாசன்.
இதுபற்றி அவர் கூறும்போது… நான் நடிகை ஆக வேண்டும் என்று நினைத்ததில்லை. அதுவும் பாலிவுட் நடிகை ஆக வேண்டும் என்று கனவு கூட கண்டது இல்லை. திட்டமிடவும் இல்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக அது அமைந்து விட்டது.
எனக்கு இசை மீது தான் அதிக ஆர்வம். அதில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பினேன். இசை அமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சில பாடல்களை பாடி இருக்கிறேன். பாடி வருகிறேன். என்றாலும் இசை மீது தான் எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
இப்போது நிறைய படங்கள் கைவசம் இருக்கிறது. நடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. எனவே, இசை மீது கவனம் செலுத்த முடியவில்லை. அடுத்த ஆண்டாவது இசை அமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.