இதுவரை ஜோடியாக நடித்தவர்களில் அழகான கதாநாயகன் யார்?: ஹன்சிகா பேட்டி

384313‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமான ஹன்சிகா, வேலாயுதம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை, ரோமியோ ஜூலியட், வாலு, மான் கராத்தே உள்பட பல படங்களில் நடித்து, தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

அடுத்து இவர் விஜய் ஜோடியாக நடித்துள்ள ‘புலி’ படம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி ஹன்சிகா, நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஹன்சிகா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழ் பட கதாநாயகிகளில், ‘மிக சிறந்த நிறத்தழகி’ என்று உங்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நிறத்தை காப்பாற்றுவதற்கு என்ன செய்கிறீர்கள்?

பதில்:- ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு என் நன்றி. நான் நல்ல நிறமாக இருப்பதற்கு என் பெற்றோர்களின் மரபணுதான் காரணம். எங்கள் குடும்பத்தில் அம்மா நல்ல நிறமாக இருப்பார்கள்.

என் நிறம், அம்மாவிடம் இருந்து வந்ததுதான். நிறத்தை காப்பாற்றுவதற்கு விசேஷமாக எதுவும் செய்வதில்லை. பொதுவாக நான் வெயிலில் நிற்க மாட்டேன். வெயில் அதிகமாக இருந்தால், நிழலாக இருக்கும் இடத்துக்கு ஒதுங்கி விடுவேன்.

கேள்வி:- அழகான தோற்றத்துக்காக தினமும் உடற்பயிற்சி செய்கிறீர்களா, உணவு விஷயத்தில் நீங்கள் எப்படி?

பதில்:- தினமும் ‘யோகா’ செய்கிறேன். ஒருநாள் கூட ‘யோகா’ செய்யாமல் இருந்ததில்லை. தினம் ஒரு மணி நேரம் ‘யோகா’வுக்கு ஒதுக்கி விடுகிறேன். அதிகாலை நேரத்தில், ‘யோகா’ செய்வது நல்ல பலனை தருகிறது.

‘யோகா’வை முடித்துவிட்டு, ‘ஜாக்கிங்’ போகிறேன். சாப்பாடு விஷயத்தில், நான் ஆர்வம் காட்டுவதில்லை. குறைவாகவே சாப்பிடுகிறேன். இரவு சாப்பாட்டை 7 மணிக்குள் முடித்துக்கொண்டு தூங்க போய்விடுவேன்.

கேள்வி:- உங்களுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகர்களில், மிக சிறந்த அழகன் என்று யாரை சொல்வீர்கள்? மிக சிறந்த மனிதநேயம் கொண்டவர் என்று யாரை சொல்வீர்கள்?

பதில்(சிரித்தபடி):- அய்யய்யோ…எல்லோருமே அழகாகத்தான் இருக்கிறார்கள். ஒருவரை மட்டும் எப்படி சொல்வது? எல்லோரிடமும் மனிதநேயம் இருக்கிறது. அதில் தனித்துவமாக தெரிபவர், விஜய். இரக்க சுபாவம் கொண்டவர்.

கேள்வி:- ‘வேலாயுதம்’ படத்தில் பார்த்த விஜய்க்கும், ‘புலி’யில் பார்த்த விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

பதில்:- ‘வேலாயுதம்’ படத்தின்போது பார்த்ததை விட, ‘புலி’ படப்பிடிப்பில் அவரை பார்த்தபோது, இன்னும் இளமையாக தெரிந்தார்.

ஆச்சரியப்பட்டேன். அவரை ஒவ்வொரு முறையும் நான் பார்க்கும்போது கேட்கிற ஒரே கேள்வி, ‘‘இளமையாக இருக்க என்ன செய்கிறீர்கள்?’’ என்பதுதான். விஜய்யின் தன்னடக்கம் என்னை வியக்க செய்கிறது.

கேள்வி:- முன்னணி கதாநாயகிகள் மத்தியில் போட்டி எந்த அளவுக்கு உள்ளது? உங்களுக்கு போட்டி யார்?

பதில்:- முன்னணி கதாநாயகிகள் இடையே போட்டி இல்லை. எல்லோருமே ‘பிஸி’யாக இருக்கிறார்கள். ஹன்சிகாவுக்கு போட்டி ஹன்சிகாதான். ஒவ்வொரு முறையும் நான் கேமரா முன்பு நிற்கும்போது, முன்பு நடித்ததை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று கருதிக்கொள்வேன்.

கேள்வி:- முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?

பதில்:- நிறையவே இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கிறேன். நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால், உடனே நடிப்பேன்.

கேள்வி:- உங்களுக்கு கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது?

பதில்:- ஆன்மிகத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருக்கிறது. கடவுள் இருப்பதை நம்புகிறேன். உணர்கிறேன். நான் இந்த அளவுக்கு வளர்வதற்கு காரணம், முதலில் கடவுள். இரண்டாவதாக ரசிகர்கள்.’’

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online