நடிகர் விஜய் நடித்து இன்று வெளியான புலி திரைப்படத்தின் சில காட்சிகளும், படத்தைப் பற்றிய விமர்சனங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.
நடிகர் விஜய் நடித்த புலி திரைப்படம் சம்மந்தப்பட்ட எல்லோர் வீட்டிலும் நேற்று வருமான வரி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நடிகர் விஜய் வீடு,அலுவலகம், தயாரிப்பளர் அலுவலகம், புலி படத்தின் ஃபைனான்சியர் அன்புசெழியன் வீடு என, பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடந்தது. இரண்டாவது நாளாக இன்றும் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது.
மேலும், இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட புலி திரைப்படம் இன்று காலை சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெளியாகவில்லை. இதனால் புலி படம் வெளியாகுமா? ஆகாதா? என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென மதுரையில் ஒரு திரையரங்கில் இன்று காலை இப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இன்று மதியம் முதல் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புலி படம் வெளியான திரையரங்குகளில், விஜயின் ரசிகர்கள் படத்தின் சில காட்சிகளை தனது மொபைலில் எடுத்து வாட்ஸ்-அப்,பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், படத்தின் முதல் பாதி முடிந்ததும், அது பற்றிய கருத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.