புலி – திரை விமர்சனம்

Puli-Music-Review-600x491வேதாளக் கோட்டைக்கு ராணியாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவருடைய அரசவையில், தளபதியாக இருக்கும் சுதீப், அந்நாட்டு மக்களை எல்லாம் அடிமைப்படுத்தி, கொடூரமாக நடத்தி வருகிறார். வேதாளக் கோட்டையில் வசிக்கும் அனைவரும் ஒருவித மூலிகையை சாப்பிட்டு, உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த மூலிகையை சாப்பிட்டால் மனிதனை விட பல மடங்கு சக்தி அவர்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், ராட்சத பல் வளருவது, குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் சக்தி என அனைத்தும் இருக்கும். இவர்கள் தங்களை வேதாளங்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில், கிராமத்தில் வசிக்கும் பிரபு, நாட்டு மக்களை அடிமைத்தனத்தில் விடுவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, தன்னுடைய ஆட்களை அழைத்துக் கொண்டு, சுதீப் குறித்து ராணியிடம் முறையிட செல்கிறார். அப்போது, ராணியின் கெட்டப்பில் இருக்கும் சுதீப்பிடம் எல்லாவற்றையும் கூறிவிடுகிறார். இதனால், சுதீப் அனைவரையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு, பிரபுவின் கையையும் வெட்டி விடுகிறார்.

அன்றுமுதல், வேதாளங்களுடன் நேரடியாக மோதல் போக்கில் ஈடுபடாமல், அவர்களை எதிர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பிரபு. இந்நிலையில், ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு குழந்தையை எடுத்து, வளர்த்து வருகிறார் பிரபு. அந்த குழந்தைதான் விஜய்.

வளர்ந்து பெரியவனாகும் விஜய், அந்த கிராமத்தில் தம்பி ராமையா, சத்யன் ஆகியோருடன் சேர்ந்து கூத்தும் கும்மாளமுமாக இருந்து வருகிறார். அத்துடன், சிறுவயதில் இருந்து பழகும் ஸ்ருதிஹாசன் மீது காதலும் கொள்கிறார்.

இந்நிலையில், ஸ்ருதிஹாசன் வெளியூருக்கு படிக்க செல்லவே, வேதாளங்களான சுதீப்பின் படை வீரர்கள் வரி வசூல் செய்ய இவர்களது கிராமத்திற்கு வருகிறார்கள். அவர்களிடம் பிரச்சினை செய்யாமல், அனைவரும் அடிபணிந்து வரி கொடுக்கின்றனர். இந்த விஷயம் ஸ்ருதிக்கு தெரியவந்ததும், அனைவர் மீதும் வெறுப்பு கொள்கிறார்.

எனவே, அவளை சமாதானப்படுத்துவதற்காக, பிரபு தனது கூட்டாளிகளை வேதாளங்களின் படை வீரர்கள் போல் தயார் செய்து, அவர்களை விஜய் அடித்து துவம்சம் செய்வதுபோல் நாடகம் நடத்துகிறார். இது எதுவுமே தெரியாத ஸ்ருதி, விஜய் மீது காதலில் விழ, இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

இந்நிலையில், விஜய்யின் ஆட்கள் வேதாளங்கள் போல் வேஷம் போட்டு நாடகம் நடத்துவதை அறியும் சுதீப்பின் படை வீரர்கள் ஊருக்குள் புகுந்து, விஜய் கிராமத்து மக்களை அடித்து துவம்சம் செய்து விட்டு, பிரபுவையும் கொன்று விடுகின்றனர். இறுதியில், ஸ்ருதிஹாசனையும் கடத்தி சென்று விடுகின்றனர்.

அவளை மீட்கவும், மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்கவும், விஜய் வேதாள கோட்டையை நோக்கி புறப்பட தயாராகிறார்.

அப்போது, அந்த ஊர் வைத்தியரான ஜோ மல்லூரி, தான் கண்டுபிடித்து வைத்திருக்கும் மூலிகையை உண்டால், 8 நிமிடங்கள் வரை வேதாளமாக இருக்கமுடியும். அந்த சக்தியை வைத்து அவர்களை எதிர்க்கலாம் என்று கூறி விஜய்யை வழியனுப்பி வைக்கிறார்.

விஜய் வேதாளக் கோட்டையை நோக்கி செல்லும் வழியில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கிறார். அந்த பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, வேதாளக் கோட்டையை அடைந்து ஸ்ருதியை மீட்டாரா? விஜய்யின் பின்புலம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.

விஜய் இந்த படத்தில் இதுவரை நடித்திராத ராஜா காலத்து உடையணிந்து புதிய கெட்டப்புடன் நடித்திருக்கிறார். இவருக்கு அந்த கெட்டப் சரியாக பொருந்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

படத்திற்கு படம் இளமையாக காட்சியளிக்கும் விஜய், இந்த படத்திலும் ரொம்பவும் இளமையாக காட்சியளிக்கிறார். பாடல் காட்சிகளில் வழக்கம்போல், அதிரடியான நடனங்களை ஆடி ரசிக்க வைத்திருக்கிறார். சண்டை காட்சிகளிலும் அசர வைத்திருக்கிறார். குறிப்பாக, சுதீப், விஜய் வேதாளம்தானா என்பதை அறிய அவருக்கு சில பரீட்சைகள் வைக்கிறார்.

அந்த காட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் எல்லாம் தாண்டி விஜய் போடும் சண்டைக் காட்சி ரொம்பவுமே ரசிக்க வைக்கிறது.

ஸ்ருதி படம் முழுக்க கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார். தன்னுடைய ஆட்கள், வேதாளங்களுக்கு அடிபணிந்து விட்டார்களே என்று குமுறும் காட்சிகளில் எல்லாம் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹன்சிகா, இளவரசியாக கொள்ளை அழகுடன் அனைவரையும் கவர்கிறார். அளவான கவர்ச்சியுடன் இவருடைய நடிப்பு ரொம்பவுமே ரசிக்க வைக்கிறது.

ராணியாக வரும் ஸ்ரீதேவி, வயதானாலும் அவருடைய நடிப்பில் இன்னமும் இளமை பளிச்சிடுகிறது. அரியணையில் இருந்து இவர் இறங்கி வரும் காட்சிகளில் எல்லாம் ராணியாகவே நம் கண்களுக்கு தெரிகிறார். கொஞ்சம் மேக்கப்பை குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தளபதியாக வரும் சுதீப், பார்வையாலேயே மிரட்டுகிறார். தளபதி கெட்டப் இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. ‘நான் ஈ’க்கு பிறகு இந்த படமும் அவருக்கு சிறந்த வில்லன் என்ற பெயரை பெற்றுக் கொடுக்கும் என நம்பலாம்.

நாம் நிஜத்தில் நடத்திக் காட்ட முடியாத விஷயங்களையெல்லாம் கோர்வையாக எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். மிகப்பெரிய நட்சத்திரங்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களை அழகாக வேலை வாங்கியிருக்கிறார்.

படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டுவதற்காக கிராபிக்ஸ் காட்சிகளை அதிகம் கையாண்டிருக்கிறார். நிறைய காட்சிகள் ரசிக்க வைத்தாலும், ஒரு சில காட்சிகள் அவை கிராபிக்ஸ்தான் என்பதை சுட்டிக்காட்டி விடுகின்றன.

அதேபோல், படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் நன்றாக இருந்தாலும், அவர்கள் அதை உச்சரிக்கும் விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல், செட் அமைத்த விதத்திலும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘புலி புலி’, ‘ஜிங்கிலியா ஜிங்கிலியா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை துள்ளி ஆட்டம் போட வைத்திருக்கிறது. ‘ஏண்டி ஏண்டி’ பாடல் அழகான மெலோடி.

அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. நட்டி நடராஜ், ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பெரிய பலம். அரண்மனை காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டை காட்சிகளெல்லாம் இவருடைய கேமரா கண்கள் அழகாக பதிவு செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘புலி’ சீறிப் பாயும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries