கத்துக்குட்டி – திரை விமர்சனம்

CQJZbtoU8AAp9nmதஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் பட்டதாரியான நரேன், தன்னுடைய நண்பர் சூரியுடன் இணைந்து குடித்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இப்படி பொறுப்பில்லாமல் இருந்தாலும், விவசாயிகள் மீதும் விவசாய நிலங்கள் மீதும் அதிக அக்கறையுடனும் இருந்து வருகிறார். மேலும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.

இதேபோல், அதே ஊரில் வசிக்கும் சம்பத் மற்றும் அவருடைய மகள் சிருஷ்டி டாங்கே இருவரும் விவசாய நிலங்களையும், விவசாய மக்களையும் காக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார்கள்.

நரேனின் அப்பா ஜெயராஜ், அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். நாற்பது ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் இவருக்கு எம்.எல்.ஏ. சீட்டு கொடுக்காமல் இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த ஊருக்கு தேர்தல் வருகிறது. இதில் நிற்பதற்காக கட்சி தலைமையை பார்க்க சென்னை செல்கிறார் ஜெயராஜ்.

அங்கு, கட்சியின் தலைமை ஜெயராஜிடம் இந்த முறை உங்கள் ஊரில் இளைஞர்ளுக்கு சீட் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இதனால் தலைமையிடம் வாக்குவாதம் செய்கிறார் ஜெயராஜ்.

ஆனால், ஜெயராஜுடன் வந்த கட்சிக்காரர், ஜெயராஜுக்கு மகன் இருப்பதாகவும் அவருக்கு சீட் கொடுங்கள் என்றும் கூறுகிறார். இதற்கு கட்சி தலைமையும் சம்மதிக்கிறது.

ஆனால் ஜெயராஜ் தன்னுடைய மகன் பொறுப்பில்லாமல் இருப்பதால், அவருக்கு சீட் கொடுப்பதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார். தனக்கு சீட் கிடைத்த சந்தோஷத்தில் நரேன். இந்நிலையில் எதிர்கட்சியை சேர்ந்த ஞானவேல், நரேனுக்கு எதிராக ஐ.டி. இளைஞரை நிற்க வைக்கிறார்.

பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வரும் நரேன், இந்த தேர்தலில் ஜெயித்தாரா? ஊர் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அழிந்து வரும் விவசாயத்தையும், வாழ்க்கையை தொலைத்த விவசாயிகளையும் நினைவூட்டும் வகையில் மிகவும் அழகான திரைக்கதை அமைத்த இயக்குனர் இரா.சரவணனை பாராட்டலாம். மீத்தேன் திட்டம், விவசாயிகள் தற்கொலை போன்ற சமூக கருத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

நல்ல கருத்தை சொன்ன இவரை வரவேற்க வேண்டும். குறைவான கதாபாத்திரத்தை வைத்து நிறைவான காட்சிகளை அமைத்து வெற்றி கண்டிருக்கிறார். கத்துக்குட்டி என்ற படத்தலைப்புக்கு ஏற்றவாறு வெற்றி கொடி நாட்டியிருக்கிறார் இயக்குனர்.

இதுவரை நகர பின்னணியில் நடித்து வந்த நரேன், முதல் முறையாக கிராம பின்னணியில் நடித்திருக்கிறார். கிராமத்து இளைஞனாக மனதில் பதிகிறார்.

கிராமத்து மீதும் விவசாயிகள் மீதும் அக்கறைக் கொண்ட இவரது நடிப்பு அருமை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவரது நடிப்புக்கு தீனி போடும் விதமாக இந்த படம் அமைந்திருக்கிறது. நகைச்சுவையிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார

பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே. படத்தில் இவருக்கு பெரியதாக வேலை இல்லையென்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகனுக்கு நண்பனாகவும் படத்தில் மற்றொரு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் சூரி. இவருடைய காமெடி படத்திற்கு மிகவும் பெரும் பலமாக அமைந்திருக்கிறது. இவருடைய சிறு சிறு செய்கைகள்கூட ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.

எப்போதும் மண்வாசனையோடு இருக்கும் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் அதே மண்வாசனையோடு நடித்திருக்கிறார். இவரை திரையில் பார்க்கும்போது பாரதிராஜாவை நினைவுபடுத்துகிறது.

பொறுப்பான விவசாயியாக நடித்திருக்கிறார் சம்பத். இவருடைய கதாபாத்திரம் விவசாயிகளின் வலியும், வேதனையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சம்பத்.

அருள்தேவ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சந்தோஷ் ஸ்ரீராம்மின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. கிராமத்து அழகை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘கத்துக்குட்டி’ கற்றுக் கொடுக்கிறான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries