MENUMENU

நானும் ரவுடிதான் – திரை விமர்சனம்

naanum-rowdy-dhaan-vijay-and-nayantara-387பாண்டிச்சேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான ராதிகா சரத்குமாரின் மகன் விஜய் சேதுபதி. இவர் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரின் பையன் என்பதால், சின்னச் சின்ன பஞ்சாயத்துக்கள், மாணவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் என்று அந்த ஏரியாவில் தன்னை ஒரு ரவுடியாக காட்டிக்கொள்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் நயன்தாராவை பார்க்கிறார். பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். நயன்தாராவுக்கு இரண்டு காதுகளும் கேட்காது. நேரில் பேசுபவர்களின் வாய் உச்சரிப்பை புரிந்து அதற்கேற்றாற்போல் பேசும் திறன் கொண்டவர் என்பது விஜய் சேதுபதிக்கு தெரிய வருகிறது.

நயன்தாராவின் அப்பா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் லோக்கல் ரவுடியான பார்த்திபனை எதிர்க்கவே, நயன்தாரா மூலமாகவே ஒரு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, அதை வெடிக்க செய்து நயன்தாராவின் அம்மாவை கொல்கிறார்.

இதில், நயன்தாராவுக்கு இரண்டு காதுகளும் கேட்காமல் போகிறது. பின்னர், அவளுடைய அப்பாவையும் பார்த்திபன் கொன்று விடுகிறார். தனது அப்பாவையும் அம்மாவையும் கொன்றது பார்த்திபன்தான் என்பது நயன்தாராவுக்கு தெரிய வருகிறது. அவரை கொல்ல சரியான ரவுடியை தேடி அலைகிறார்.

அப்போது, விஜய் சேதுபதி இவளிடம் காதலை சொல்ல, நயன்தாரா தன்னுடைய அப்பாவை கொன்ற ரவுடியை கொலை செய்தால், அவரை காதலிப்பதாக கூறுகிறாள். முதலில் யோசிக்கும் விஜய் சேதுபதி, பின்னர் ஒப்புக் கொள்கிறார். ஆனால், விஜய் சேதுபதி சற்று தயங்கிய காரணத்திற்காக அவரை நிராகரிக்கிறார் நயன்தாரா.

மேலும், வேறு ஒரு ரவுடியை தனது திட்டத்திற்கு பயன்படுத்த முயற்சி செய்கிறார். இதனால், நயன்தாராவிடம் நானும் ரவுடிதான் என்பதை காட்டிக்கொள்ள பல்வேறு தகிடுதத்தங்கள் செய்கிறார் விஜய் சேதுபதி. இறுதியில், நயன்தாரா, விஜய் சேதுபதியிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார்.

பின்னர், பார்த்திபனை எப்படி கொல்வது என்று யோசிக்கும் வேளையில், சென்னை ராயபுரத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் நான் கடவுள் ராஜேந்திரனிடம் வந்து பார்த்திபனை எப்படி திட்டம் போட்டு வீழ்த்துவது என்பது குறித்து பயிற்சி எடுக்கிறார் விஜய் சேதுபதி.

இறுதியில், பார்த்திபனை விஜய் சேதுபதி கொன்றாரா? நயன்தாராவுடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

விஜய் சேதுபதி துறுதுறு இளைஞனாக படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். அளவான வசனங்கள், அழகான மேக்கப் என அசத்துகிறார். இதுவரை கிராமத்து இளைஞன், லோக்கல் பையன் என பார்த்த இவரை, இதில் கொஞ்சம் மாடர்னாக பார்க்கும்போது, ரொம்பவும் அழகாகவே தெரிகிறார். அதேபோல், வசனங்கள் உச்சரிப்பிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

நயன்தாரா அழகுப் பதுமையாக காட்சியளிக்கிறார். இவர் காது கேட்காததுபோல் நடிக்கும்போது, அந்த கதாபாத்திரமாகவே ஒன்றியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

படத்தில் இவருக்கு நிறைய க்ளோஸ் அப் காட்சிகள் வைத்திருக்கிறார்கள். அவை எல்லாவற்றிலும் ரொம்பவும் அழகாகவே தெரிகிறார். அதிலும், இதில் சொந்த குரலில் பேசியிருக்கிறார். இவரது குரல், இவரது நடிப்புக்கு கச்சிதமாகவே பொருந்தியிருக்கிறது.

விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் கலகலப்புக்கு கியாரண்டி. பார்த்திபன் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அதேபோல், விஜய் சேதுபதிக்கு ரவுடியாக பயிற்சி கொடுக்கும் நான் கடவுள் ராஜேந்திரன் வரும் காட்சிகள் எல்லாம் கலகல..

‘போடா போடி’ படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம். படம் முழுக்க காமெடி சரவெடியை கொளுத்தி போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். முந்தைய படத்தைவிட இந்த படத்தில் அவரது முதிர்ச்சி தெரிகிறது.

சரியான கதாபாத்திரங்கள், அளவான வசனங்கள் என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார். படத்தில் பெரும்பாலான காட்சிகள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைத்தது சிறப்பு.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் அனிருத்தின் இசைதான். பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பினாலும், பின்னணி இசை காதை கிழிக்கிறது.

ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பலமாகவும் அமைந்திருக்கிறது. இவருடைய கேமரா கண்கள் காட்சிகளை மிகவும் துல்லியமாகவும், அழகாகவும் படம்பிடித்து காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘நானும் ரவுடிதான்’ கலகல ரவுடி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online