MENUMENU

பத்து எண்றதுக்குள்ள – திரை விமர்சனம்

598274முனீஸ்காந்துக்கு சொந்தமான டிரைவிங் இன்ஸ்டியூட்டில் டிரைவிங் கற்றுக் கொடுத்து வருகிறார் விக்ரம். விக்ரமின் தங்கை விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றுவிட்டதால், அவளது சிகிச்சைக்காக அவருக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. இதனால், டிரைவிங் கற்றுக் கொடுப்பது மட்டுமின்றி, பெரிய ரவுடியான பசுபதி சொல்லும் சிறு சிறு வேலைகளையும் செய்து வருகிறார்.

அதாவது, பசுபதி பெரிய கள்ளக் கடத்தல் பணிகளை செய்து வருகிறார். இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்துகின்ற கார்களை எல்லாம் விக்ரம்தான் எடுத்துக் கொண்டு வந்து பசுபதியிடம் சேர்ப்பார். இப்படி செய்வதால் விக்ரமுக்கு பசுபதி சில ஆயிரங்களை சம்பளமாக கொடுக்கிறார். இதை தனது தங்கையின் சிகிச்சைக்காக செலவழித்து வருகிறார்.

இந்நிலையில், ஒருநாள் ஒரு காரை கடத்தும் போது சமந்தாவை பார்க்கிறார். விக்ரமை பார்த்ததும் சமந்தாவுக்கு பிடித்துப் போய்விடுகிறது. சமந்தாவுக்கு நீண்ட நாளாக டிரைவிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதன்படி, விக்ரம் வேலை செய்யும் டிரைவிங் இன்ஸ்டியூட்டிலேயே சென்று டிரைவிங் கற்றுக் கொள்ள சேர்கிறார்.

விக்ரமையை சுற்றி வரும் சமந்தாவை, விக்ரம் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், ஒருநாள் பசுபதிக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து ஒரு ப்ராஜக்ட் வருகிறது. அதாவது சமந்தாவை உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கொண்டு வந்து சேர்த்தால் 1 கோடி ரூபாய் பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள்.

எந்தவொரு வேலையையும் விக்ரமிடம் கூறும் பசுபதி, இந்த வேலையை மட்டும் அவரே எடுத்து செய்கிறார். சமந்தாவை மயக்க நிலையில், காரின் பின்னால் கட்டிப்போட்டு கொண்டு செல்லும்போது, பசுபதி கார் சிக்னல் தாண்டி வந்துவிட்டதாக கூறி போலீசார் அந்த காரை கைப்பற்றி கொள்கின்றனர்.

கார் போலீசில் மாட்டிக் கொண்ட பதட்டத்தில் பசுபதி, விக்ரமிடம் சமந்தா அந்த காரில் இருக்கிறாள் என்பதை கூறாமல், அந்த காரை கடத்திக் கொண்டு வரும்படி கூறுகிறார். விக்ரமும் எப்போதும்போல் அந்த காரை போலீசிடமிருந்து களவாடி எடுத்துச் செல்கிறார்.

முதலில் காருக்குள் சமந்தா இருப்பதை அறியாத விக்ரம், பின்னர் காருக்குள் அவள் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார். ஆனால், சமந்தாவோ தனக்கு பிடித்தமானவருடன்தான் வந்திருக்கிறோம் என்று எண்ணி அவருடனே ஒட்டிக் கொள்கிறார். இறுதியில் அந்த காரை உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கொண்டு செல்லும் வேலையை விக்ரமிடமே ஒப்படைக்கிறார் பசுபதி.

சமந்தாவும் உத்தரகாண்ட் வருவதாக கூறி, விக்ரமுடன் செல்கிறார். உத்தரகாண்ட் போகும் வழியிலேயே இவர்களுக்குள் மோதல், காதல் எல்லாம் வந்துவிடுகிறது. இறுதியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் காரை ஒப்படைக்க சென்ற இடத்தில், சமந்தாவை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டு, பேசியபடி பணத்தை விக்ரமிடம் ஒப்படைக்கிறார்கள்.

பசுபதி தன்னிடம் காரைத்தானே ஒப்படைக்கச் சொன்னார். இப்போது இவர்கள் சமந்தாவை பிடித்து வைத்துவிட்டு காரை எடுத்துச் செல்லச் சொல்கிறார்களே என்றதும் விக்ரமுக்கு சந்தேகம் வருகிறது.

அது என்னவென்று ஆராயும்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் இவர்கள் சென்ற பகுதி முழுவதும் பெண்களின் ராஜ்ஜியம்தான். அந்த பகுதியில் சமந்தா போன்றே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு பெண் 40 பேரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றிருப்பார்.

அவளை எப்படியாவது வெளியே கொண்டு வந்து, வேறு ஊருக்கு அனுப்பிவிட்டு, சென்னையிலிருந்து வந்த சமந்தாவை எதிரிகளுக்கு பழியாக்குவது என முடிவெடுக்கிறார்கள். இது தெரிந்ததும் விக்ரம், சமந்தாவை அவர்களிடமிருந்து காப்பாற்ற நினைக்கிறார்.

இதையடுத்து, அவர்களிடமிருந்து சமந்தாவை எப்படி காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.

விக்ரம், படத்தில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறார். இவர் படம் முழுக்க கார் ஓட்டிக் கொண்டே இருக்கிறார். அதுவே ரொம்பவும் சலிப்பை ஏற்படுத்துகிறது. சண்டை காட்சிகளில் எல்லாம் அசத்தியிருக்கிறார். சமந்தாவை வெறுக்கும் காட்சிகளிலும் பின்னர் அவளுடன் காதல் செய்யும் காட்சிகளிலும் விக்ரம் தெரிகிறார்.

படத்தில் வில்லி, குழந்தைத்தனம், குறும்புத்தனம் கொண்ட பெண் என்ற இரு வேறு தோற்றத்தில் நடித்துள்ளார் சமந்தா. இதில் குறும்புத்தனமுடன் வரும் சமந்தா ரசிக்க வைக்கிறார்.

ஆனால், வில்லி வேடத்தில் வரும் சமந்தாவை பார்க்கவே முடியவில்லை. வில்லி வேடத்தில் வரும் சமந்தாவுக்கு வில்லத்தனம் சரியாக செட்டாகவில்லை. விஜய் மில்டன் எப்படி இப்படியெல்லாம் புது முயற்சி எடுத்தார் என்பது தெரியவில்லை. அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்திருக்கலாம்.

பசுபதி காமெடி வில்லனாக பளிச்சிடுகிறார். படத்தில் மேலும், சில வில்லன்கள் வருகிறார்கள். அவர்களெல்லாம் கதைக்கு தேவையில்லாமல் வேண்டுமென்றே புகுத்தியிருப்பதாக தெரிகிறது.

படத்தில் என்ன நடக்குது, கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பது ரொம்பவும் குழப்பமாக இருக்கிறது. நல்ல தரமான கோலி சோடா படத்தை எடுத்த விஜய் மில்டனா இப்படியொரு படத்தை எடுத்தார் என்று யோசிக்க வைக்கிறது.

சிறந்த இயக்குனர்கள் எவ்வளவுதான் நல்ல கதையோடு வந்தாலும், அவர்கள் பெரிய நடிகர்களை வைத்து ஹிட் கொடுக்க முடியாது என்பதற்கு விஜய் மில்டனும் ஒரு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம்.

இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பாடல்களை காட்சிப்படுத்திய விதத்திலாவது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். எதுவும் மனதை தொடவில்லை. பின்னணி இசை தூள் கிளப்புகிறது. பாஸ்கரன் ஒளிப்பதிவு சேசிங் காட்சிகளை அழகாக படம்பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ வேகமில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online