ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘கபாலி.’ இதில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். கிஷோர், கலையரசன், தினேஷ், தன்ஷிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை ரஞ்சித் டைரக்டு செய்கிறார். எஸ். தாணு தயாரிக்கிறார் ‘கபாலி’ படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.
சென்னை சோவியத் கலாசார மையம், மீனம்பாக்கம் விமான நிலையம் பகுதிகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்தகட்டமாக மலேசியாவில் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். அங்குள்ள மலாக்கா பகுதியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். சிறைச்சாலை அரங்கு ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சிறைக்குள் ரஜினிகாந்த் கைதியாக அடைக்கப்பட்டு இருப்பது போன்றும் சுற்றிலும் மலேசிய போலீசார் துப்பாக்கியுடன் நிற்பதுபோன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போல் சில அதிரடி சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முக்கிய பிரமுகர்கள் சிலர் சந்தித்தனர்.
அவர்களிடம் அவர் பேசும்போது, ‘‘மலேசியாவில் ‘கபாலி’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்க உள்ளது. 75 சதவீத படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.
‘கபாலி’ படத்தின் கதை பற்றிய விவரங்கள் எதையும் அவர் கூறவில்லை. ‘கபாலி’ படப்பிடிப்பில் ரஜினிகாந்தை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மலேசிய தமிழர்கள் திரள்கிறார்கள்.
அவர்களால் படப்பிடிப்புக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக பாதுகாப்புக்கு மலேசிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மலேசிய படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் பாங்காக் மற்றும் ஜப்பான் செல்கின்றனர். மொத்தம் 60 நாட்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.