அண்ணன்-தங்கை பாசமே வேதாளம் படத்தின் கதை: டைரக்டர் சிவா பேட்டி

1446201021_thala-ajith-stills-vedalam-vedhalamஅஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் 10-ந் தேதி, தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து இருக்கிறார். தங்கை வேடத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார். சிவா டைரக்டு செய்து இருக்கிறார்.

இவர், ‘வீரம்’ படத்தை டைரக்டு செய்தவர். ஏ.எம்.ரத்னம் மேற்பார்வையில், அவருடைய மருமகள் ஐஸ்வர்யா தயாரித்து இருக்கிறார்.

உலகம் முழுவதும் 1,200 தியேட்டர்களில், இந்த படம் திரையிடப்பட இருக்கிறது. இதுதொடர்பாக, நிருபருக்கு டைரக்டர் சிவா பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சிவா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘வேதாளம்’ படத்தில், புதிதாக ஒரு அஜித்குமாரை எதிர்பார்க்கலாமா?

பதில்:- நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் அஜித் மிக வித்தியாசமாக நடித்து இருக்கிறார். இதுவரை அவர் நடித்த எந்த படத்திலும் நடிப்பில் இந்த அளவுக்கு ‘ஸ்கோர்’ செய்ததில்லை.

செம ‘லோக்கல்’ ஆக ஒரு தோற்றத்திலும், மிக துணிச்சலான இன்னொரு தோற்றத்திலும் அவர் வருகிறார். இரட்டை வேடமா? என்பது, ‘சஸ்பென்ஸ்.’ இதுவரை வெளிப்படுத்தியிராத நடிப்பு திறமையை ‘வேதாளம்’ என்ற கதாபாத்திரத்தில் அஜித் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கேள்வி:- இது பேய் படம் என்றும், ஆவிகள் சம்பந்தப்பட்ட கதை என்றும் ஒரு தகவல் பரவியிருக்கிறதே?

பதில்:- ‘வேதாளம்,’ பேய் படம் அல்ல. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம். அதேபோல் இது, ‘டான்’ படமும் அல்ல. படத்தில் நிறைய நகைச்சுவை காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் உள்ளன. படத்தில் திடீர் திருப்பங்களும் இருக்கும்.

கேள்வி:- எந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படம் இது?

பதில்:- இது, பெண்களுக்கான படம் என்றும் சொல்லலாம். அஜித் ஜோடியாக சுருதிஹாசன் நடித்து இருக்கிறார். கொல்கத்தாவில் வேலை பார்க்கிற பெண்ணாக அவர் வருகிறார். அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் வருகிறார். அண்ணன்-தங்கை பாசம்தான் ‘வேதாளம்’ படத்தின் அடிநாதம். நிஜவாழ்க்கையில் அஜித், பெண்கள் மீது அதிக மரியாதை உள்ளவர்.

அவருடைய உண்மையான சுபாவத்தையே இந்த படத்தின் கதாபாத்திரமாக்கி இருக்கிறேன். அதனால், அவர் கதாபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

அவருடைய கதாபாத்திரம், இப்படி நமக்கு ஒரு அண்ணன் இல்லையே என்று நினைக்க தோன்றும். படம் மனதை தொடுகிற மாதிரி இருக்கிறது என்று பார்த்தவர்கள் கூறினார்கள்.

கேள்வி:- அஜித் படத்தை பார்த்தாரா, என்ன சொன்னார்?

பதில்:- ‘டப்பிங்’ பேசியபோது பார்த்தார். முழு படத்தையும் பார்த்து விட்டு, மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி பாராட்டினார். ‘வீரம்’ படம் பார்த்து விட்டு, ‘‘நாம் அடுத்ததாக உடனே படம் பண்ணலாம் சிவா’’ என்றார். ‘வேதாளம்’ படத்தைப் பார்த்து விட்டும் அதையேதான் சொன்னார். அடுத்த படம் எப்போது, என்ன படம்? என்று அஜித்தான் சொல்ல வேண்டும்.

கேள்வி:- அஜித் இதுவரை 55 படங்களில் நடித்து இருக்கிறார். இது, அவருடைய 56-வது படம். மற்ற படங்களில் இல்லாத-‘வேதாளம்’ படத்தில் மட்டுமே உள்ள சிறப்பு அம்சம் எது?

பதில்:- அஜித்தின் கடுமையான உழைப்பு. மற்ற 55 படங்களிலும் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு உழைத்ததில்லை என்று அவரே சொல்லியிருக்கிறார். கொல்கத்தா ரோட்டில் அவர் ஓடியதையும், இத்தாலி கப்பலில், ‘ரிஸ்க்’ ஆன காட்சியில் நடித்ததையும் என்னால் மறக்க முடியாது.

இவ்வாறு டைரக்டர் சிவா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online