இணைய தளங்களில் பரவும் கபாலி பட காட்சிகள்

0ரஜினிகாந்தின் ‘கபாலி’ பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கிறது. இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அந்த நாட்டில் முகாமிட்டு உள்ளனர்.

‘கபாலி’ படத்தின் கதை, கதாபாத்திரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. கதை பற்றிய விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று படக்குழுவினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவில் படப்பிடிப்புக்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரஜினிகாந்த் தங்கும் வீடு, தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள், வில்லன் கூட்டத்தினரின் ரகசிய மாளிகைகள் என விதவிதமான அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

இந்த அரங்குக்குள் வருபவர்களுக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. ரசிகர்கள், வெளியாட்கள் உள்ளே நுழையாமல் இருக்க வாசலில் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

ஆனால் பாதுகாப்பையும் மீறி ‘கபாலி’ படக்காட்சிகள் இணையதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த், விதவிதமான தோற்றங்களில் வரும் படங்களை திருட்டுத்தனமாக செல்போனில் படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

வில்லன்களிடம் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசும் காட்சிகள், ஓட்டலில் சாப்பிடுவது, காரில் வந்து இறங்குவது, மலேசிய போலீசார் மத்தியில் கைதியாக நிற்கும் காட்சி போன்றவை இணைய தளங்களில் பரவி உள்ளன. இதன் மூலம் ரகசியமாக இருந்த ‘கபாலி’ ரஜினிகாந்தின் முழு தோற்றமும் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துணை நடிகர், நடிகைகள் ரஜினியை செல்போன்களில் படம் எடுத்து இணைய தளங்களில் பரப்புவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. படக்குழுவினர் செல்போன்களை படப்பிடிப்பு அரங்குக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பையும் பலப்படுத்தி உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries