MENUMENU

தேசிய விருதுகளை திரும்ப கொடுப்பது அறிஞர்களை அவமதிப்பது போன்றது: வைரமுத்து

kadal-press-meet_135831480013ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜாவில் 34-வது சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்றது. முன்னதாக கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை நூல் அறிமுக விழா நடைபெற்றது.

வைரமுத்துவின் சிறுகதைகள் நூலை இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல், கல்வித்துறை அதிகாரியான தமிழகத்தை சேர்ந்த சுமதி வாசுதேவ் வெளியிட ஈடிஏ பிபிடி நிறுவனத்தின் செயல் இயக்குனர் அன்வர் பாசா பெற்றுக் கொண்டார்.

பஜிலா ஆசாத் நூலை அறிமுகம் செய்தார். கவிஞர் வைரமுத்து ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழன் கடல் கடந்தாலும் தமிழ் கடக்க மாட்டான்.

இடம் பெயர்ந்தாலும் நிறம் பெயரமாட்டான் என்பதற்கு சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் நடைபெறும் முதலாவது தமிழ் இலக்கிய நிகழ்ச்சிக்கு நேரம் கடந்தாலும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக இங்கு வந்து பங்கேற்றிருப்பது உள்ளபடியே பெருத்த மகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறது.

தொழில்நுட்பம் அதிகரித்துள்ள இந்த காலத்தில் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. பேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இன்று இந்தியாவில் செல்போன் இல்லாதவர்களே இல்லை எனலாம்.

சமீபத்தில் ஒரு கிராமத்துக்கு சென்ற போது அங்கு நாற்று நட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் கழுத்தில் செல்போன் தொங்கிக் கொண்டிருந்தது. அவரிடம் தாலி எங்கே என்றேன். அதனை விற்றுத்தானே இதனை வாங்கியுள்ளேன் என்றார்.

இதன் மூலம் செல்போன் மற்றும் தொழில்நுட்பம் அடித்தட்டு மக்கள் வரை எத்துனை ஆழமாக சென்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் அறிவின் மீது காதல் கொண்டு ஞானமாளிகையினை ஏற்படுத்தினர்.

இதில் இலக்கியம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த நூல்களையும் அரபி மொழியில் மொழி பெயர்த்து உலக ஞானத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் ஒரு நிலையினை ஏற்படுத்தினர்.

பிரிந்து கிடக்கும் நாடுகளும், கண்டங்களும் ஒன்றுபட அறிவு முக்கிய பங்காற்றி வருகிறது. அயல்நாட்டில் வாழ்ந்தாலும் வீட்டில் தமிழ் மொழியிலேயே பேசுங்கள். குழந்தைகளுக்கு தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை கற்றுக் கொடுங்கள்.

தமிழ் மொழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வரை அவர்கள் உங்கள் பிள்ளைகளாகவே இருப்பார்கள் என்பதை நினைவில் வையுங்கள். தமிழ் மொழி பண்பாட்டின் அடையாளமாகும். தமிழ் மொழியை கற்று விட்டு ஆங்கிலம், அரபி மொழி, இந்தி, உருது உள்ளிட்ட எந்த மொழியினையும் கற்றுக் கொடுங்கள்.

எத்தனை மொழிகளை அவர்கள் கற்கிறார்களோ அவர்கள் அத்தனை மனிதர்களாக வலம் வருவார்கள். ஒரு சிலர் கவிஞர் வைரமுத்து பாடல்கள் தான் எழுதி கொண்டிருந்தாரே.

பின்னர் சிறுகதை பக்கம் திரும்பியுள்ளார் என்கிறார்கள். இலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் தொட்டால் தான் ஒருவன் முழுமையான தமிழ் படைப்பாளனாக முடியும். தமிழ் மொழிக்காக எத்தனையோ அறிஞர்கள் தங்களது மூச்சு, உடல் என அனைத்தையும் கொடுத்துள்ளனர்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில் எல்லாம் அவர்களுக்கு இதுபோன்ற தளம் கிடைக்கவில்லை. நான் வாழ்ந்து வரும் காலத்தில் எனக்கு இத்தகைய தளம் கிடைத்துள்ளது குறித்து மகிழ்வு கொள்கிறேன்.

ஒரு சில படைப்பாளிகள் தங்களுக்கு தரப்பட்ட தேசிய விருதுகளை திருப்பி கொடுக்கின்றனர். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. விருதுகளை கொடுப்பது அரசு அல்ல. அறிஞர்கள் கொண்ட குழு. அதனை திருப்பி அளித்தால் அறிஞர்களை அவமதிப்பது போலாகும்.

ஒரு படைப்பாளனுக்கு கிடைக்கும் உச்சபட்ச மகிழ்ச்சி அவனுக்கு கிடைக்கும் கைதட்டல்கள் தான். இடக்கரமும், வலக்கரமும் இணைந்து எழுப்பும் சத்தமானது உறங்கும் ஆன்மாவை உசுப்புகிறது.

எனது அனுபவத்தில் கிடைத்த நிகழ்வுகளை சிறுகதைகளாக உருவாக்கியுள்ளேன். ஒரு கதை என்பது வாசிக்க மட்டுமல்ல, யோசிக்க வைப்பதன் மூலமே நல்ல கதை என்ற பெருமையை பெற முடியும்.

இந்த சிறுகதைகளில் பார்வையற்ற பெண் ஒருவர் காதலிக்கும் சம்பவம், பின்னர் அவருக்கு அந்த காதலன் மூலம் பார்வை வந்ததும் அவனை விட்டுவிட்டு வேரொருவரை கைபிடிப்பது போன்ற யதார்த்தத்தை உணர்த்துகிறது.

வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவர் விடுமுறைக்காக வந்து தனது குழந்தையை பார்க்கும் போது அந்த குழந்தை தன்னை அப்பா என்று அழைக்குமா? என்பதை அப்பா என்ற சிறுகதை மூலம் வெளிப்படுத்தும் பாணி வாசகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டில் என்ன தான் வேலை பார்த்தாலும் உறவுகளை பேணவேண்டும் என்பதை இந்த சிறுகதைகள் உணர்த்தும்.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online